தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-சான்றோர் இயல்பு

  • 1.7. சான்றோர் இயல்பு

    தனி மனித அறம் சிறப்பானது, தனி மனித அறம் மேம்பட்டுத் திகழ்ந்தால் சமுதாயமும் மேம்படும். ஒளி பரப்பும் நிலவும் சான்றோரும் ஒப்பாவர். சான்றோர் கெட்ட சொற்களை ஒரு போதும் சொல்லார். பொய் கூற மாட்டார். தீயனவும், தேவையற்றனவும் எதிர்ப்படும் நிலையில் செவிடராகவும், குருடராகவும், ஊமையராகவும் நடந்து கொள்ளும் திறம் பெற்றவர்கள் என்று சான்றோர் இயல்பை மிக நுட்பமாகச் சித்திரிக்கும் நாலடிப் பாடல் இது.

    பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்து
    ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
    புறங்கூற்றில் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
    அறங்கூற வேண்டா அவற்கு

    (நாலடி - 158)

    (மூங்கையாய் = ஊமையாய்)

    1.7.1. அறிவுடைமை

    சான்றோர் அறிவுடையராய் இருத்தலின் அவர் சேர்க்கையும் நட்பும் இன்பம் தரும். அறிவுடைமை என்னும் செல்வத்தைப் பெற்றவர் சான்றோர். சான்றோர் வறுமையில் வாடவும், பண்பிலா மக்கள் செல்வம் பெற்றிருக்கவும் கூடும். வினைப்பயனே இதற்குக் காரணம். முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவு இப்பிறவியைச் சாரும் என்பதிலும் சமணர்கள் கொண்ட நம்பிக்கை நாலடியாரில் ஆங்காங்கு வெளிப்படுவதைக் காணலாம்.

    1.7.2 மானம்

    சான்றோர் மானம் உடையவர். நற்குணம் இலாதவர் செய்கையால் மனம் கொதிப்பர். எனினும் பண்பிலா மக்களிடம் தம் குறைகளைச் சொல்ல மாட்டார்கள். இறக்க நேர்ந்தாலும் பழி பாவம் உண்டாக்கும் செயல் செய்ய மாட்டார்கள்.

    வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
    மானம் அழுங்க வரின்

    (நாலடி - 300)

    ( கையுறினும் = கிடைத்தாலும்; விழுமியோர் = சான்றோர்; அழுங்க = அழிய /கெட )


    வானுலகம் கிடைப்பதாக இருந்தாலும் மானம் கெட வருவனவற்றை விரும்ப மாட்டார்கள் என்று மானம் உடையவரின் மன உறுதி மேற்கூறிய பாடலில் எடுத்துரைக்கப்படுகிறது.

    1.7.3 இரவாமை

    சான்றோர் இரவாமைப் பண்பு உடையவர். இரந்து உண்ணுதலை விடப் பசியோடிருப்பது சிறந்தது என்று எண்ணும் தகைமையர்.

    கரவாத திண்அன்பின் கண்ணன்னார் கண்ணும்
    இரவாது வாழ்வதாம் வாழ்க்கை

    (நாலடி - 305)

    கேட்பவர்களுக்கு மறைக்காத அன்புடையார் மாட்டும் யாசிக்காமல் இருப்பதுதான் சிறந்த வாழ்க்கை என்று சான்றோரின் சிறப்பு மேற்கூறிய பாடலில் பேசப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 11:53:42(இந்திய நேரம்)