தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-பழமொழிகள்

 • 6.1 பழமொழிகள்

  பழமொழிகள் சான்றோர்களின் அனுபவ மொழிகள், மக்களை நன்னெறியில் செலுத்தக் கூடிய வழிகாட்டிகள். உலகெங்கிலும் பழமொழிகள் காணப்படுகின்றன.

  எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் பழமொழிகள் உண்டு. உலக நாடகக் கவிஞர் செகப்பிரியர் தம் நாடகங்களில் பழமொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். ‘விரும்பிய வண்ணமே’ (As you Like it) என்ற நாடகத்தில் எல்லாம் (கேடுகளும்) நன்மைக்கே என்ற கருத்தமைந்த பழமொழியைப் பயன்படுத்தியுள்ளார். அவருடைய நாடகத் தலைப்புகள் பழமொழிகள் போன்றே காணப்படுகின்றன. சான்றாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.

  ‘As you like it’, ‘Measure for Measure’. ‘Much Ado About Nothing’, ‘All's well that ends well’.

  ஏசுநாதர் தம் குழுவில் உள்ள நற்சீடர்களுக்குப் பழமொழிகள் வாயிலாகவே அறவுரை பகர்ந்திருக்கிறார். ‘மருத்துவனே, உன்னை முதலில் குணப்படுத்திக் கொள்’என்று அறிவுரை கூறுவார். ‘Physician, heal thyself'. அறிஞர் பெருமக்களான அரிஸ்டாட்டில்,     சாலமன் ஆகியோரும் பழமொழிப் பித்தர்கள் என்பார்கள்.

  6.1.1 இலக்கியங்களில் பழமொழிகள்

  சங்க இலக்கியம் முதலாக அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயின்று வருகின்றன.

  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

  பழகப் பழகப் பாலும் புளிக்கும்

  என்ற இரண்டு பழமொழிகளும் மக்களிடையே மிகவும் அறிமுகமானவை. குறுந்தொகையில் இப்பழமொழி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று பார்ப்போமா?

  தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் (பொதுமகளிர்) சென்று விட்டான் தலைவன். தலைவி வருந்தியிருக்கிறாள். அவள் மீது அன்புடைய தோழி தலைவன் வந்தவுடன் அவனை வீட்டின் உள்ளே விடாமல் வாயிலில் நிறுத்திக் கீழே குறிப்பிட்டுள்ளவாறு பேசுகிறாள்.

  குளிர்ச்சியான நீரில் அளவிற்கு மேல் நீராடினால் உடம்பிற்குத் துன்பம் உண்டாகும்.   தேன்இனிப்புடையதுதான். அதையே இடைவிடாது பலமுறை உண்டால் உண்டவர்க்கு அது வெறுப்பைக் கொடுக்கும். சுவை உடைய தேன் இப்போது புளிப்பாய் இருக்கும். அதுபோல நாங்களும் உனக்கு இதுநாள் வரை இனிய இன்பப் பொருளாய்த் தோன்றினோம். பழக்க மிகுதியால் இப்போது வெறுப்புடைப் பொருளாக மாறினோம் என்று கூறுகிறாள். இந்தக் கருத்தை உட்படுத்தி,

  நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும்
  ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
  (குறுந்தொகை:354)

  (நீடு ஆடில் = நீண்ட நேரம் நீராடினால், ஆர்ந்தோர் = அதிகமாக உண்டோர்)

  என்ற பாடலைப் பாடுகிறார் புலவர் கயத்தூர் கிழார்.

  காப்பியங்களிலும், புராணங்களிலும் பழமொழிகள் எடுத்தாளப்படுகின்றன. கம்பராமாயணம், வில்லிபாரதம், திருமுறைகள், திருவருட்பா ஆகிய நூல்களிலும் பல பழமொழிகளைக் காண முடிகிறது.

  • நாடகங்களில் பழமொழி

  நாடக இலக்கியங்களிலும் பழமொழிகள் பல இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக ‘பெண் என்றால் பேயும் இரங்குமே’ என இராம நாடகத்திலும், ‘பூவையை வளர்த்துப் பூனைக்கு ஈயவோ’ என்று மனோன்மணீயம் நாடகத்திலும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • இலக்கியப் பெருமையும் பழமொழியும்

  தமிழ் இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தவை திருக்குறளும், நாலடியாரும். இவற்றின் பெருமையை வெளிப்படுத்துகின்ற வகையிலும் பழமொழிகள் வழங்குகின்றன.

  பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்
  ஆலும் வேலும் பல்லுக்குறுதி
  நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

  என்பவை குறளுக்கும் நாலடியாருக்கும் சிறப்பைத் தரும் பழமொழிகள். அதைப்போல, ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று பழமொழிகளால் குறிப்பிடுவதைக் காணலாம்.

  • தமிழ்மொழியின் சிறப்பு

  ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் உண்டு. ஆனால் எம்மொழியிலும் பழமொழிக்கென்று ஒரு தனி நூல் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் பழமொழிக்கென்று நூல்கள் உள்ளன. அவை ‘பழமொழி நானூறு’ மற்றொன்று பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்பன. இத்தனைச் சிறப்பு பழமொழிக்கு உரியது ஆவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமோ?

  6.1.2 பழமொழி - அமைப்பும் சிறப்பும்

  • பழமொழி என்ற சொல் - விளக்கம்

  1.
  பழமையான மொழி - தொன்மையானது (அனுபவ மொழிகள்)
  2.
  பழம் போன்ற மொழி - பழம் போல் இனிமையானது. சுவை உடையது. (இலக்கியச் சுவை)
  3.
  பழம் போல நன்மையளிப்பது (வாழ்க்கையில் நெறிப்படுத்துவது)
  4.
  பழம் போல் நெகிழ்ந்த தன்மை - புரிந்து கொள்ள எளிமையானது.

  என்கிற அனைத்துப் பொருளையும் உள்ளடக்கியுள்ளது. பழமொழி என்ற சொல் மிகவும் பொருளாழம் உடையது இல்லையா?

  • இலக்கணம்

  தொல்காப்பியர் பழமொழியை ‘முதுமொழி’என்று குறிப்பிடுகிறார்.

  அங்கதம் முதுசொலோடு
  (தொல்.பொருள்.செய்:79)

  இம்முதுமொழிக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் வகுத்தும், தொகுத்தும் உரைக்கிறார்.

  நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
  எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
  குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
  ஏது முதலிய முதுமொழி யென்ப
  (தொல்.பொருள்.செய்:177)

  இதன் பொருளாவது:

  1.

  பழமொழி கூர்மையோடு திட்ப நுட்பம் உடையதாய் இருத்தல் வேண்டும்.

  2.
  சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.
  3.
  சிறந்ததாக எளிமையாக அமைந்து இருக்க வேண்டும்.
  4.
  குறித்த பொருள் ஒன்றினை வரையறுத்துக் கூற வேண்டும்.

  ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தொல்காப்பியர் பழமொழிக்கு வகுத்த இலக்கணங்கள், இன்று பழமொழிக்கு மேலைநாட்டார் கூறும் விளக்கத்தோடு பொருந்துகின்றன என்பது வியப்பைத் தருகிறது.

  • மேலைநாட்டார் விளக்கம்

  ஆர்.சி.டிரெஞ்ச் பழமொழிகளும் அவற்றின் படிப்பினைகளும் என்ற நூலில் பழமொழிக்குச் சில இலக்கணங்கள் வரையறுக்கிறார். அவை:

  1.
  பழமொழி மூச்சை ஒருமுறை உள்ளெடுத்து வெளிவிடும் நேரத்திற்குள் குறைந்த சொற்களால் ஆக்கப்பட வேண்டும்.
  2.
  நல்ல உணர்வுடன் இருக்க வேண்டும்.
  3.
  நுட்பம் உடையதாய் இருக்க வேண்டும். உப்பிட்ட பண்டம் போல் தீமை தராத வகையில் அமைய வேண்டும்.

  • தொல்காப்பியமும் பழமொழியும்

  மேற்கூறிய கருத்துகள் பெரும்பாலும் தொல்காப்பியர் கருத்துகளுடன் ஒத்துச் செல்கின்றன. தொல்காப்பியர் கூறிய பழமொழி இலக்கணங்களுக்கு ஏற்பவே பழமொழி நானூறு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. எளிமையாக, அதே சமயம் கூர்மையாக, கூறவந்த கருத்தை வரையறுத்துச் சொல்வதாக இருக்கிறது. சுவையாக அமைந்து எக்காலத்தும் பயன்படுத்தும் வண்ணம் நின்று நிலவும் பெருமை உடையதாய் உள்ளது.

  • அமைப்பு

  முதல் இரண்டடிகளில் ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட பொருளைக் கூறுவார். மூன்றாமடியில் ஆணையோ, பெண்ணையோ விளித்துக் கூறுதலைக் காணலாம். அதனைத் தொடர்ந்து நான்காம் அடியில் பழமொழியைக் காணலாம்.

  • வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புகளும்

  பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகள் பல இந்நூலில் குறிக்கப்படுவதைக் காணலாம். மனுநீதிச் சோழன், பொற்கைப் பாண்டியன், பாரி, பேகன், கரிகாற் சோழன், சேரன் செங்குட்டுவன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் சில குறிக்கப்படுகின்றன.

  தவறு செய்த தன் மகனைத் தேரின் சக்கரத்தால் கொல்லும்படி ஆணையிட்ட, மனுநீதிச் சோழனைப் பற்றிக்

  கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்

  (பழ - 242)

  என்று பழமொழி கூறுகிறது.

  தவற்றை நினைத்துத் தன் கை குறைத்தான் தென்னவனும்

  (பழ - 76)

  முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

  (பழ - 74)

  நரைமுடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்

  (பழ - 6)

  இராமாயண, மகாபாரதக் கதைக் குறிப்புகளும், மாவலி, வாமனன், மதுகைடவர் என்போரைப் பற்றிய புராணக் குறிப்புகளும் இந்நூலில் காணப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:06:31(இந்திய நேரம்)