தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-கல்வி-பகுதி 6.2

 • 6.2 கல்வி

  கல்வியின் சிறப்பைப் பற்றி அறநூல்கள் கூறுகின்றன. அதைப்போல, பழமொழியும் கல்வியின் பெருமையைக் கூறுகின்றது. கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு. அறிவுடையவர் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும். எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது. அவர் சொந்த நாடேயாகும். தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும். ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை. இதனை,

      ஆற்றுணா வேண்டுவதில்

  என்று பழமொழி (4) கூறுகிறது.

  அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான். செல்கின்ற இடந்தோறும் அவன் பலராலும் உபசரிக்கப்படுவான். அவனுக்கு வேண்டுவன கிடைக்கும் என்று கல்வியின் சிறப்பும் உயர்வும் கற்றவர் சிறப்பும் உயர்வும் ஒருங்கே உணர்த்தப்படுவதைக் காணலாம்.

  கற்றோர் சிறப்பு

  பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர். தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள். நீர் நிறைந்த குடம் ஆரவாரம் செய்யுமோ? செய்யாதல்லவா? அதைப் போலவே நிறையக் கற்றுணர்ந்தவர்கள் ஆரவாரம் செய்யமாட்டார்கள் என்பதை விளக்க வந்த பழமொழி.

  நிறைகுடம் நீர்தளும்பல் இல்
  (பழ:9)

  6.2.1 அறிவுடைமை

  அறிவுடையார் சிறப்புப் பற்றி, பழமொழி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? அறிவுச் செல்வம் சிறந்த செல்வம். பொன்னும், இரத்தினமும், சந்தனமும், மாலையும் போன்ற பிற அணிகள் யாவும் ஒருவனை அழகுறச் செய்கின்றன. எப்போது? அவன் அணிந்திருக்கின்ற ஆடை ஒழுங்காக இருக்கும்போதுதான். அதுபோல் அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது. அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான்.

  அணியெல்லாம் ஆடையின் பின்
  (பழ:26)

  என்ற பழமொழி இவ்வாறு அறிவுடைமையின் சிறப்பைப் பேசுகிறது.

  வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னுகின்றன. ஒப்பற்ற ஒரு சந்திரனும் வானில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான். ஆயிரம் நட்சத்திர ஒளி ஒன்று கூடினாலும், ஒரு சந்திரனைப் போல் ஒளி தந்து உலகிற்குப் பயன்படாது. அறிவிலார் பலர் சேர்ந்தாலும் அறிவுடையான் ஒருவனுக்கு நிகராக மாட்டார்கள் என்ற கருத்தை விளக்கும் பழமொழிப் பாடல் இதோ:

  ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
  மாயிரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்
  பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்
  காய்கலா ஆகும் நிலா

  (பழ:27)

  6.2.2 கல்லாதவர்

  இனி,கல்லாதவர் நிலைபற்றிப் பழமொழி என்ன சொல்கிறதென்று பார்ப்போமா? நடக்க முடியாத முடவன் ஒருவன் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு எழுகிறான். எழுந்து என்ன செய்யப் போகிறான்? யானையோடு விளையாடப் போகிறானாம். நமக்கு நகைப்பாக இருக்கிறது. திகைப்பாக இருக்கிறது. ஆனால் அவன் அடையப் போவது அவமானமும் துன்பமுமே. இதுபோன்ற அவமானத்தையும் துன்பத்தையும் தான் கல்லாதவர் கற்றவரோடு வாதம் செய்யின் அடைவர். இக்கருத்தைச் சொல்லும் பழமொழிப்பாடல் இதோ!

  கல்லாதார் ஆற்றுவாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
  சொல்தாற்றுக் கொண்டு சுனைத்துஎழுதல் எற்றெனின்
  தானும் நடவான் முடவன் பிடிப்(பு) ஊணி
  யானையோடு ஆடல் உறவு

  (பழ:16)

  (கறுப்பித்து = கோபமூட்டி; சுனைத்து = சினந்து; பிடிப்பு ஊணி = ஊன்று கோலை ஊன்றி)

  6.2.3 அவையறிதல்

  அவையில் உள்ளாரின் இயல்பறிந்து, சூழல் அறிந்து பேசுதல் அவையறிதலாகும். அவையில் உள்ளவர் ஒருவர் ஒருவராகத் தம் கருத்தைக் கூறுதல் வேண்டும். மாறுபடுவோர் இருவரும் ஒரே காலத்தில் வாதம் செய்தால் அது தகுதி உடையது ஆகுமா? ஆகாதல்லவா? அவ்வாறு ஒரே நேரத்தில் வாதம் செய்தால் அது எப்படி இருக்கும்? ஒரே காலத்தில் இருவரும் ஒரு நாயைக் கொண்டு வேட்டை ஆடுதல்போலாகும்.

  சிறிதேனும் இன்னாது, இருவர் உடன்ஆடல் நாய்
  (பழ:18)

  வாதம் செய்வோர் இருவரும் தம் கருத்தை ஒருவர் பின் ஒருவராகக் கூறினாலன்றி அவர்கள் கொண்ட கருத்தை நிலைபெறச் செய்ய முடியாது என்ற கருத்து இப்பழமொழியினால் தெளிவாகும்.

  அவையில் ஒருவர் பேச்சைக் கேட்டபின் அதற்குரிய பதில் இறுத்தலே சரியானது. அவர் கூறுவதைக் கேளாமலே பதில் சொன்னால் அவையில் என்ன நடக்கும்? குழப்பம்தான் மிஞ்சும். இச்செயலுக்கு, பழமொழி எவ்வாறு உவமை கூறுகிறது பாருங்கள். முழந்தாள் கிழிந்து புண்பட்டவனை அஃது அறியாது மூக்கை நூல் கொண்டு கட்டுவதைப் போலாகும் என்கிறது.

  முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு
  (பழ:19)
புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:24:57(இந்திய நேரம்)