தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.3 சிற்றிலக்கியங்கள் தோன்றுவதற்குரிய காரணங்கள்

  • 1.3 சிற்றிலக்கியங்கள் தோன்றுவதற்குரிய காரணங்கள்

    நண்பர்களே! ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்குப் பல காரணங்கள் சூழல்களாக அமையும். அதைப் போன்றே சிற்றிலக்கிய வகைகள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் காணப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் காண்போமா?

    சமுதாயத்தில் பல்வேறு காரணங்களால் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் இலக்கியங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சங்க காலத்தில் மன்னன் தலைமை இடம் பெற்றான். பக்திக் காலத்தில் இறைவன் தலைமை இடம் பெற்றான். அதற்குப் பின்பு இறைவனைத் தலைவனாகக் கொண்டு பல சிற்றிலக்கியங்கள் தோன்றின.

    1.3.1 அரசியல் சமூகச் சூழல்

    இலக்கியம் உருவாவதற்கும் அரசியல் சூழல்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ் மொழியில் பெரும்பாலான சிற்றிலக்கியங்கள் கி. பி. பதினான்காம் நூற்றாண்டிற்குப் பின்னால் தோன்றியுள்ளன. அப்போது தமிழகத்தின் பல பகுதிகளைப் பேரரசர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களும் பாளையக்காரர்களும் ஆண்டு வந்தனர். அவர்கள் புலவர்கள் தம்மைப் புகழ்ந்து பாடவேண்டும் என்று விரும்பினர். மக்களுக்கும் காப்பியம் போன்ற பெரிய இலக்கியங்களைக் கேட்டு மகிழும் மனநிலை இல்லை. எனவே, புலவர்கள் சிற்றிலக்கியங்கள் பலவற்றைப் படைத்தனர்.

    1.3.2 சமயச்சூழல்

    புலவர்கள் மக்களிடையே இறைப்பற்றை ஊட்டவும், சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்தவும் பல இலக்கியங்களைப் படைத்தனர்.

    மேலும், இந்து சமயம், கிறித்தவ சமயம், இசுலாமிய சமயம் ஆகிய சமயங்களுக்கு இடையே போட்டி காணப்பட்டது. இப்போட்டியின் காரணமாகவும் புலவர்கள் பல சிற்றிலக்கியங்களைப் படைத்தனர்.

    முற்கூறியன தவிர, புலமைப் போட்டி, புலமை விளையாட்டு, நாட்டுப்புறப் பாடல்களுக்கு இலக்கிய வடிவம் கொடுக்கும் நோக்கம் முதலிய பல காரணங்களும் சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குரிய சூழல்கள் ஆயின.

    1.3.3 இலக்கண, இலக்கியச் சூழல்

    புலவர்கள் தமக்கு முன்னால் தோன்றிய இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும் காணப்படும் சில குறிப்புகளைக் கருக்களாகக் கொண்டு சிற்றிலக்கிய வகைகள் பலவற்றைப் படைக்கும் ஆர்வத்தினால் புதியன படைத்தார்கள். படைப்பாற்றல் திறனுக்கு வடிகாலாய் அமைந்தன புதிய சிற்றிலக்கியங்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:23:45(இந்திய நேரம்)