தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.1 கோவை இலக்கியம் - அறிமுகம்

  • 6.1 கோவை இலக்கியம் - அறிமுகம்

    நண்பர்களே! கோவை இலக்கியம் பற்றிய சில பொதுவான செய்திகளை முதலில் காணலாம்.

    பெயர்க் காரணம்

    கோவை என்ற சொல்லின் பொருள் யாது? முறையாகக் கோக்கப்பட்டது கோவை என்று பொருள்படும். இந்த இலக்கிய வகையுள் எவை எவை முறையாகக் கோக்கப்பட்டு உள்ளன?

    அகப்பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக் கோக்கப்பட்ட நூல் ஆகையால் இது கோவை இலக்கியம் எனப்படுகிறது. கோவை இலக்கியப் புலவர்கள் அகத்துறையைச் சார்ந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர்போலக் கோவையாகப் பாடி உள்ளனர்.

    6.1.1 தோற்றம்

    தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில் இடம் பெறும் பொருள் அதிகாரக் கருத்துகளே கோவை இலக்கியம் தோன்றுவதற்குக் கருக்களாய் அமைந்தன எனலாம். தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் கூறும் அகப்பொருள் துறைகளை நாடகப்போக்குடன் அமைத்துப் புலவர்கள் கோவை இலக்கியத்தைப் பாடினர்.

    தொல்காப்பியத்திற்குப் பின் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், நம்பி அகப்பொருள் போன்ற இலக்கண நூல்கள் தோன்றின. இந்த இலக்கண நூல்கள் கூறும் அகப்பொருள் செய்திகளுக்கு எடுத்துகாட்டுக்களாக இலக்கியம் படைக்கும் முயற்சியில் புலவர்கள் ஈடுபட்டனர். இந்த முயற்சியின் விளைவே கோவை இலக்கியம் எனலாம்.

    சான்றுகளாகப் பாண்டிக்கோவை, தஞ்சை வாணன் கோவை என்ற நூல்களைக் கூறலாம். பாண்டிக்கோவை என்ற நூல் இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது. தஞ்சை வாணன் கோவை என்ற நூல் நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது.

    சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற நூல்கள் முழுக்க முழுக்க அகப்பொருள் சார்ந்த இலக்கியங்கள் ஆகும். இந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டும் கோவை இலக்கியம் தோன்றியது எனலாம்.

    திருக்குறளில் உள்ள காமத்துப்பால் இடம் பெறும் திருக்குறள்களும் கோவை இலக்கிய வகையின் கருக்களாக அமைந்துள்ளன என்று கருதலாம்.

    பக்தி இலக்கியத்தில் இறைவனைத் தலைவனாகவும், தம்மைத் தலைவியாகவும் கொண்டு அகப்பொருள் மரபில் பக்தி இலக்கியச் சான்றோர்கள் பாடல்கள் பாடி உள்ளனர். இப்பாடல்களும் கோவை இலக்கியத்தின் கருக்களாய் உள்ளன. இவ்வாறு, இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் இடம் பெற்ற அகப்பொருள் செய்திகளைக் கருக்களாகக் கொண்டு கோவை என்ற பெயரில் தனியான ஓர் இலக்கிய வகை தோன்றியது எனலாம்.

    6.1.2 கோவை நூல்கள்

    கோவை இலக்கிய நூல்களில் முதலில் வைத்து எண்ணப்படுவது பாண்டிக் கோவை என்ற நூல் ஆகும். இந்நூலின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை.

    பாண்டிக்கோவை என்ற நூலை அடுத்துத் திருக்கோவையார் என்ற நூல் தோன்றியது. இதை அடுத்து, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தஞ்சைவாணன் கோவை என்ற நூல் எழுந்தது. இந்நூலை இயற்றியவர் பொய்யாமொழிப் புலவர் ஆவார். இதைத் தொடர்ந்து பல கோவை நூல்கள் வந்து உள்ளன. இது வரையிலும் எழுபது கோவை நூல்கள் தோன்றி உள்ளன என்று கூறப்படுகிறது.

    அகப்பொருள் துறைகள் பலவற்றை நானூறு பாடல்களில் பாடுவதற்குப் பதில் ஒரே துறையை நானூறு பாடல்களில் பாடும் மரபும் ஏற்பட்டது. இவ்வகையில் தோன்றிய இலக்கியத்தை ஒரு துறைக் கோவை என்பர்.

    திருக்கோவையார் தோற்றம்

    திருக்கோவையார் என்ற நூல் மாணிக்கவாசகப் பெருமானால் இயற்றப்பட்டது. இந்த நூல் எவ்வாறு தோன்றியது என்பதற்கு மரபு வழியான செய்தி ஒன்று உள்ளது. அதைப் பற்றிக் காண்போமா?

    மரபுவழிச்செய்தி

    மாணிக்கவாசகர் இறைவன் சிவபெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இறைவன் கோவில் கொண்டு எழுந்து அருளி உள்ள பல கோயில்களுக்கும் சென்று வந்தார். இறுதியில் இக்காலத்தில் சிதம்பரம் என்று அழைக்கப்படும் தில்லை நகருக்கு வந்தார். அங்கு ஒரு தவக்குடில் அமைத்து அதில் இருந்து இறைவனைப் பாடி மகிழ்ந்து வந்தார்.

    ஒரு நாள் மாணிக்கவாசகரின் தவக்குடிலுக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் ஆணையாலே வந்ததாகக் கூறினார். மாணிக்கவாசகரின் பக்தியைப் பலவாறு புகழ்ந்தார். அவர் மாணிக்க வாசகரிடம் சிவபெருமானைத் தலைவராகக் கொண்டு ஒரு கோவை நூல் அருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு ஏற்ப மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற நூலைப் பாடினார். அந்தப் பெரியவர் மாணிக்கவாசகர் பாடிய 400 பாடல்களையும் ஏடுகளில் எழுதி எடுத்துச் சென்றுவிட்டார்.

    அடுத்த நாள் காலையில் தில்லைக் கோயிலில் பூசை செய்ய வந்தவர் வாயில் படியில் ஏடுகள் இருப்பதைப் பார்த்தார். ஊர் மக்களுக்கு இதைத் தெரிவித்தார். அனைவரும் கோயிலில் கூடினர். ஏட்டை எடுத்துப் பிரித்துப் படித்தனர். அந்த ஏடுகளில் திருவாசகச் செய்யுள்களும் திருக்கோவையாரின் 400 செய்யுள்களும் இருந்தன. திருக்கோவையார் முடியும் இடத்தில் இவை திருவாதவூரன் பாட, அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியவை என்று இருந்தது.

    பாடல்களின் பொருள்

    ஊரிலுள்ள பெரியவர்கள் மனம் மகிழ்ந்து மாணிக்கவாசகரிடம் வந்தனர். நடந்ததைக் கூறினார். மாணிக்கவாசகர் மனம் நெகிழ்ந்தார். பெரியவர்கள் மாணிக்கவாசகரிடம் அவர் எழுதிய பாடல்களுக்குப் பொருள் கேட்டனர். மாணிக்கவாசகர் பெரியவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். இறைவன் முன்னர் நின்றார், நான் எழுதிய பாடல்களுக்குப் பொருள் இவரே என இறைவனைக் காட்டினார். பின் மாணிக்கவாசகர் சிவ அருள் ஒளியில் மறைந்தார். இவ்வாறு திருக்கோவையார் தோன்றியது என்ற செய்தி உள்ளது.

    திருக்கோவையார் 25 அதிகாரங்களைக் கொண்டது. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

    திருக்கோவையார் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் தில்லையில் எழுந்து அருளியுள்ள இறைவனே ஆவான்.

    1.
    கோவை இலக்கியத்தின் மற்றொரு பெயர் யாது?
    2.
    கோவை என்ற சொல் எந்தச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது?
    3.
    கோவை இலக்கியம் என்று பெயர் ஏற்படக் காரணம் யாது?
    4.
    தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களில் இரண்டினைக் குறிப்பிடுக.
    5.
    கோவை நூல்களில் முதலில் வைத்துக் கூறப்படும் நூல் எது?
புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 17:58:52(இந்திய நேரம்)