தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.2 பாடு பொருள்

  • 6.2 பாடுபொருள்

    நண்பர்களே! கோவை இலக்கிய வகையின் பாடு பொருளைக் காண்போமா? இதற்கு மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையாரைத் துணையாகக் கொள்வோம்.

    திருக்கோவையார் என்ற நூலில் 400 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு துறையை விளக்குகின்றது. இந்த வகையில் திருக்கோவையாரில் உள்ள 400 துறைகளையும் விளக்குவதற்குக் காலம் போதாது. எனவே, இடை இடையே சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றுள் இடம் பெறும் செய்திகளை விளக்கமாகக் காணலாம்.

    6.2.1 தலைவனின் ஐயம்

    தலைவன் தலைவியைக் காண்கின்றான். அவள் அழகைக் கண்டு வியக்கின்றான். இவள் யாராக இருக்கும் என்று ஐயம் கொள்கின்றான். இச்செய்தியைக் கூறுவதே ஐயம் என்ற துறை ஆகும். ஐயம் என்ற துறையில் அமைந்த திருக்கோவையார் பாடலைக் காண்போமா?

    போதோ விசும்போ புனலோ பணிகளது பதியோ
    யாதோ அறிகுவது ஏதும் அரிதுயமன் விடுத்த
    தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்
    தில்லை
    மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே

    (பாடல் - 2)

    (போது = மலர்; விசும்பு = ஆகாயம்; புனல் = நீர்; பணி - பாம்பு; அனங்கன் = மன்மதன்)

    தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது. மனமே! இங்கு நிற்கும் பெண் யமனால் அனுப்பப்பட்ட தூதோ? அனங்கன் என்றால் உருவம் இல்லாதவன் என்று பொருள். அதாவது மன்மதன். இப்பெண் மன்மதனின் துணையோ! மயிலோ? தாமரைப் பூவில் வாழும் திருமகளோ? விண்ணவர் மகளோ? நீர்அடியில் உள்ள மகளோ? நாகலோகத்து மகளோ? ஈடற்ற தில்லை நகரில் வாழும் பெண்ணோ? என்று தலைவன் தலைவியைப் பார்த்து ஐயம் கொள்கின்றான்.

    இதற்கு உரிய பேரின்பப் பொருள் என்ன என்று பார்ப்போமா? இறைவனுடைய திருமேனியை (உடம்பை) முதல் முதலாகக் கண்ட உயிர் பலவாறாக ஐயம் கொள்ளுதல் என்பதை இப்பாடல் குறிப்பிடுகின்றது.

    6.2.2 தலைவனின் கவலை

    திருக்கோவையார் என்ற நூலில் கவன்று உரைத்தல் என்று ஒரு துறை உள்ளது. இதன் பொருள் யாது? தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். தலைவியை நினைத்துத் தலைவன் வருந்துகின்றான். அதைக் கண்ட தலைவனின் தோழன் தலைவியின் பொருட்டு இவ்வாறு வருந்தியது தகாது என்று தலைவனிடம் கூறுகின்றான். தோழன் கூறிய பிறகும் தலைவனின் துன்பம் தீரவில்லை. எனவே தலைவனின் துன்பத்திற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்று தோழன் எண்ணுகின்றான். எனவே தோழன் தலைவனிடம் அவன் கவலைக்கு உரிய காரணத்தைக் கேட்கின்றான். இந்தப் பொருளை உடைய திருக்கோவையார் பாடல் இதோ.

    விலங்கலைக் கால்விண்டு மேன்மேல் இடவிண்ணும்
    மண்ணும் முந்நீர்க்
    கலங்கலைச் சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை
    துன்றும்
    அலங்கலைச் சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருளில்லவர்
    போல்
    துலங்கலைச் சென்றுஇதுஎன் னோவள்ளல் உள்ளம்
    துயர்கின்றதே

    (பாடல் - 24)

    (விலங்கல் = மலை; கால் = காற்று; விண்டு = பிளந்து; முந்நீர் = கடல்; கலங்கலைச் சென்ற = கலங்குதலை அமைந்த; கலங்காய் = வருந்தவில்லை; அலங்கல = மாலை; சூழ்ந்த = சுற்றிய; துலங்கல் = துளங்குதல்; துயர்கின்றது = வருந்துகின்றது)

    பாங்கன் தலைவனிடம் கேட்கின்றான். மலைகளைக் காற்றுப் பிளக்கிறது. விண்ணையும் மண்ணையும் கடல் கலக்குகிறது. இத்தகைய நிலையிலும் தலைவனே நீ கலங்கமாட்டாய். ஆனால் இப்போது நீ துன்பம் கொள்கிறாய். எப்படிப்பட்ட துன்பம்? கொன்றை மலரால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்தவன் சிவபெருமான். அத்தகைய இறைவனுடைய அருளைப் பெறாதவர்கள் மிகவும் வருந்துவர். அதைப் போன்று எதற்கும் வருந்தாத நீ இப்போது வருந்துகின்றாய். அதற்குக் காரணம் யாது? என்ற தோழன் தலைவனிடம் கேட்கின்றான். இப்பாடலில் இறைவனிடம் அன்பு செலுத்தாதவர் மிகவும் துன்பம் அடைவர் என்பது கூறப்படுகிறது.

    6.2.3 தலைவியைக் காணுதல்

    திருக்கோவையாரில் இந்தத் துறை குறிவழிக் காண்டல் என்று குறிப்பிடப்படுகின்றது.

    தலைவன் துன்பம் கொள்கின்றான். தோழன் தலைவனிடம் அவன் துன்பத்திற்கு உரிய காரணம் என்ன என்று கேட்கிறான். தலைவன் தலைவியின் பிரிவால் வந்த துன்பம் என்று கூறுகின்றான். அதற்குத் தோழன் தலைவியின் தன்மையையும், தலைவி இருக்கும் இடத்தையும் கேட்கின்றான். தலைவன் தலைவி பற்றிய செய்திகளைக் கூறுகின்றான். அதைக்கேட்ட தோழன் தலைவன் கூறிய வழியிலே சென்று தலைவியைக் காணச் செய்கின்றான். தலைவன் கூறிய இடத்தைச் சென்று அடைகின்றான். அந்த இடத்தில் நின்று தலைவி தன்னைக் காணாதபடி தோழன் தலைவியைப் பார்க்கிறான். இந்தத் துறையில் அமைந்த பாடல் இதோ.
     

    வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
    துடிக்கின்றவா வெற்பன் சொற்பரி சேயான்
    தொடர்ந்துவிடா
    அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்கு
    அம்பலம்போல
    படிச்சந் தமும்இதுவே இவளே அப்பணி மொழியே

    (பாடல்-32)

    (வடி = கு; வஞ்சி = வஞ்சிக் கொம்பு; வெற்பன் = தலைவன்; சொற்பரிசு = சொன்ன முறைப்படி; அண்ணல் = தலைவன்; படிச்சந்தம் = ஒப்புமை)

    தோழன், தலைவன் கூறியவாறு சென்று தலைவியைக் காண்கிறான். தலைவியின் கண்களைப் பார்க்கிறான். அவை மா வடுவைப் பிளந்தது போன்று உள்ளன. இடையைப் பார்க்கிறான். அது வஞ்சிக் கொம்பு அச்சம் கொள்ளும் படியாக உள்ளது. அவ்வளவு மெல்லிய இடை, வாய் பவளம் போன்று சிவப்பு நிறமுடன் உள்ளது. அந்த வாய் துடிக்கின்றது. தலைவன் கூறிய அனைத்தும் ஒத்து உள்ளன. எனவே தலைவன் கூறிய தலைவி இவளே என்று தோழன் உறுதி செய்கின்றான்.

    இந்தப் பாடலில் தலைவியின் கண்களுக்குப் பிளந்த மா வடு ஒப்புமை கூறப்படுகிறது. தலைவியின் சிவந்த வாய்க்குப் பவளம் உவமையாகக் கூறப்படுகிறது.

    6.2.4 தலைவனின் குறை

    தலைவன் தலைவியைத் தேடிப் பலமுறை வருகின்றான். தலைவியும் தலைவனிடம் காதல் கொள்கின்றாள். தலைவன் தலைவியிடம் பேசுவதற்காகப் பல கேள்விகளைக் கேட்கின்றான். ஆனால் தலைவியும் தோழியும் எந்தப் பதிலையும் கூறவில்லை. இதனால் தலைவனின் முகம் வாடுகிறது. தலைவனின் முகம் வாடுவதைக் கண்ட தலைவியின் முகமும் வாடுகின்றது. இதைத் தோழி பார்க்கின்றாள். தலைவியின் முகம் வாடுவதற்குத் தலைவன் அடிக்கடி இங்கு வந்து செல்வதே காரணம் என்று தோழி எண்ணுகின்றாள். இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் தோழியிடம் தலைவன் வருகின்றான். தோழியிடம் தனக்குக் குறை உள்ளது போலப் பணிவான சொற்கள் பலவற்றைக் கூறுகிறான். இந்தத் துறை குறையுற்று நிற்றல் என்று சுட்டப்படுகிறது.

    குறையுற்று நிற்றல் என்ற துறையில் அமைந்த பாடலைப் பார்ப்போமா?

    மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
    படுக்கோ பணிலம் பலகுளிக்கோ பரன்தில்லை முன்றில்
    கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்கு ஆயகுற்றேவல்
    செய்கோ
    தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் சுரிகுழற்கே

    (பாடல் - 63)

    (மடுக்கோ = செலுத்துவேனோ; திமில் = ஒரு வகையான தோணி; மறி = கீழ் மேல் ஆக மறியும்; திரை = அலை; படுக்கோ = பிடிப்பேனோ; பணிலம் = சங்கு; குளிக்கோ = எடுப்பேனோ; பரன் = இறைவன்; முன்றில் = முற்றம்; வளை = வளையல்; ஐயர் = தமையன்மார்; குற்றேவல் = ஏவிய தொழில்களைச் செய்தல்; தொடுக்கோ = தொடுப்பேனோ; பணியீர் = கட்டளை இடுங்கள்)

    தலைவியிடம் கொண்ட காதலுக்காக எந்த வேலைகளையும் செய்யத் தயார் ஆக இருப்பதாகத் தலைவன் தோழியிடம் கூறுகின்றான்.

    கடலில் தோணியைச் செலுத்த வேண்டுமா? செலுத்துகிறேன். கடலில் சென்று மீன் பிடித்து வர வேண்டுமா? பிடித்து வருகிறேன். கடலில் மூழ்கிச் சங்குகளை எடுத்து வர வேண்டுமா? எடுத்து வருகிறேன். இறைவனுடைய தில்லை நகரில் சென்று சங்கு வளையல்களை விற்று வர வேண்டுமா? விற்று வருகிறேன். உங்கள் தமையன் (அண்ணன்) மார்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டுமா? செய்கிறேன். உங்கள் கூந்தலில் சூட மலர் தொடுக்க வேண்டுமா? தொடுக்கிறேன். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும். கட்டளை இடுங்கள் என்று தலைவன் தோழியிடம் வேண்டுகிறான். இவை தலைவன் தலைவியிடம் கொண்ட காதலைக் காட்டுகின்றன.

    தலைவன் தன்னை உயர்வாகக் கூறினால் தலைவி தன் காதலை மறுக்கக் கூடும் என்று எண்ணினான். எனவே, தாழ்வான வேலைகளைச் செய்வதாகத் தலைவன் கூறுகின்றான்.

    6.2.5 தலைவனின் வருகை

    தலைவி தலைவன் கொடுத்த பொருளைத் தோழியிடம் இருந்து பெற்றுக் கொண்டாள். அதனால் தலைவி மிகுந்த இன்பம் அடைந்தாள். இதனைத் தோழி தலைவனிடம் தெரிவிக்கின்றாள். பின், தலைவியை நாங்கள் விளையாடும் இடத்திற்கு அழைத்து வருவேன். எனவே நீ பகல் பொழுதில் இந்த இடத்திற்கு வருவாயாக என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள். இவ்வாறு தோழி தலைவனிடம் பகல் பொழுதில் தலைவியைச் சந்திப்பதற்கு உரிய இடத்தைச் சுட்டிக் கூறுவதாகக் குறி இடம் கூறல் என்ற துறை அமைகின்றது, குறி இடம் கூறல் என்ற துறையில் அமைந்த பாடலைப் பார்ப்போமா?

    வானுழை வாள்அம்ப லத்துஅரன் குன்றுஎன்று
    வட்கிவெய்யோன்
    தானுழை யாஇருளாய்ப் புறம் நாப்பண்வண் தாரகைபோல்
    தேனுழை நாகம் மலர்ந்து திகழ்பளிங் கால்மதியோன்
    கானுழை வாழ்வுபெற் றாங்குஎழில் காட்டும்ஓர்
    கார்ப்பொழிலே

    (பாடல் - 116)

    (உழை = இடம்; வாள் = ஒளி; வட்கி = அஞ்சி; வெய்யோன் = சூரியன்; நாப்பண் = நடுவில்; வண் = வளம் மிக்க; தாரகை = நட்சத்திரம்; தேன் = வண்டு; நாகம் = நாகம் என்ற மலர்; மதியோன் = சந்திரன்; கான் = காடு; கார் = கரிய; பொழில் = சோலை)

    இயற்கை அழகு

    தோழி தலைவனிடம் தலைவியைப் பகல் பொழுதில் காண்பதற்கு ஒரு சோலைக்கு வருமாறு கூறுகின்றாள். அந்தச் சோலை எப்படிப்பட்டது என்பதையும் விளக்குகின்றார்.

    அந்தச் சோலையில் மரங்கள் உயர்ந்து அடர்ந்து காணப்படுகின்றன. எனவே, இந்தச் சோலையைப் பார்த்த சூரியன் இது வானில் உள்ள சிவபெருமானின் ஒளிமிக்க மலை என்று எண்ணுகிறது. எனவே சூரியனின் கதிர்கள் உள்ளே செல்ல அஞ்சுகின்றன. அந்த அளவுக்கு அந்தச் சோலை இருட்டாய் உள்ளது. இவ்வாறு இருண்டு காணப்படும் சோலையில் நட்சத்திரம் போல் நாகம் என்ற மலர் மலர்ந்து காணப்படுகிறது. அந்தச் சோலையில் பளிங்கு காணப்படுகின்றது. அது சந்திரன் வான் உலக வாழ்வை விட்டுக் காட்டு உலக வாழ்வு பெற்றால் போல் உள்ளது. இத்தகைய அழகுடைய சோலை அது. அங்கே வருவாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

    முன்னால் சிவபெருமானின் மாமன் தக்கன் செய்த வேள்வியில் சூரியனின் பற்கள் பறி போய்விட்டன. எனவே, இந்தச் சோலையைப் பார்த்த சூரியன் இது சிவபெருமானின் மலை என்று எண்ணி உள்ளே தன் கதிர்களைச் செலுத்த அஞ்சுகின்றது என்று நயம்படக் கூறப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 12:50:04(இந்திய நேரம்)