தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5:3-மொழி இறுதி எழுத்துகள்

  • 5.3 மொழி இறுதி எழுத்துகள்

    சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்று கூறுவர். மெய் எழுத்துகள் இயல்பாகவே சொல்லுக்கு இறுதியில் வரும். சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் என்று இந்தப் பாடத்தின் முன்பகுதியில் படித்தது நினைவிருக்கிறதா?

    5.3.1 சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள்

    உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை; மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும். அவ்வாறு வரும் உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு இறுதியில் வரும் என்பதைப் பார்க்கலாம்.

    உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும். அவற்றில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும். ஏனைய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும்.

    எடுத்துக்காட்டு

    பல
    சில
    திற
    நிலா
    பலா
    சுறா
    பனி
    எலி
    நரி
    தேனீ
    தீ
    ஏழு
    கதவு
    மிளகு
    பூ
    தூ (வெண்மை)
    சேஎ
    எங்கே
    யானே
    மழை
    தாமரை
    மலை
    நொ (துன்பம்)
    நிலவோ
    மலரோ
    ஒள
    கௌ (கொள்)
    வௌ (திருடு)

    குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

    ஆறு
    காடு
    பட்டு
    காற்று
    பந்து
    பாம்பு
    செய்து
    மூழ்கு
    பழகு
    விளையாடு
    அஃது
    எஃகு

    5.3.2 சொல்லுக்கு இறுதியில் வரும் மெய் எழுத்துகள்

    வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். இவற்றில் வல்லின மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெல்லின மெய் எழுத்துகள் ஐந்தும், இடையின மெய் எழுத்துகள் ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

    மெல்லின மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

    உரிஞ்(தேய்க்கும்)
    ண்
    பெண்
    வெரிந் (முதுகு)
    பொருந் (போரிடும், பொருந்தும்)
    மரம்
    வெள்ளம்
    மன்னன்
    பொன்

    உரிஞ் என்னும் ஒரு சொல்லில் மட்டும் ‘ஞ்‘ என்னும் மெய்எழுத்து, இறுதியில் வரும்.

    வெரிந், பொருந் என்னும் இரு சொற்களில் மட்டும் ‘ந்‘ என்னும் மெய்எழுத்து இறுதியில் வரும்.

    இடையின மெய் எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) சொல்லுக்கு இறுதியில் வரும்.

    நாய்
    தாய்
    வேர்
    தண்ணீர்
    கால்
    நடத்தல்
    தெவ் (பகை)
    கீழ்
    ழ்
    முள்
    வாள்

    அவ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு சொற்களில் மட்டும் ‘வ்’ என்னும் மெய் எழுத்து இறுதியில் வரும்

    ஆவி, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள மெய்
    சாயும் உகரம் நால் ஆறும் ஈறே.

    (நன்னூல் - 107)

    (பொருள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ, ண, ந, ம, ன,ய, ர, ல, வ, ழ, ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும் குற்றியலுகரமும் ஆக இருபத்து நான்கும் சொல்லுக்கு இறுதியில் வரும். )

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 09:52:15(இந்திய நேரம்)