Primary tabs
-
3.2 மெய்யெழுத்துகள் பிறப்பு - நன்னூலார் கருத்து
மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து நன்னூலார் தெரிவிக்கும் கருத்துக்களையும் இங்குக் காண்போம். நன்னூலாரும் வல்லின, மெல்லின, இடையின மெய்களின் பிறப்பிடத்தையும் அவை பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சியையும் தனித்தனியே விளக்குகிறார்.
3.2.1 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்
நன்னூலார் உயிர்எழுத்தொலிகளின் பிறப்பிடத்தைக் கூறிய இடத்திலேயே மெய்களின் பிறப்பிடத்தையும் கூறியுள்ளார். நன்னூலார் தெரிவிக்கும் மெய்யொலிகளின் பிறப்பிடத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம். அவை,
(1)வல்லின மெய்கள் பிறக்குமிடம்: மார்பு(2)மெல்லின மெய்கள் பிறக்குமிடம்: மூக்கு(3)இடையின மெய்கள் பிறக்குமிடம்: கழுத்துஎன்பன. இதனை,
அவ்வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்.
மேவும் மென்மை மூக்கு, உரம்பெறும் வன்மை(நூற்பா. 74)
என்னும் நூற்பா விளக்குகின்றது. இந்நூற்பா இடையின மெய்களும் உயிர்எழுத்துகளும் கழுத்தில் (மிடறு)இருந்து பிறக்கின்றன என்பதைச் சேர்த்து உரைக்கின்றது. உரம் என்பது நெஞ்சு, மார்பு என்று பொருள்படும்.
3.2.2 வல்லின மெல்லின மெய்களின் பிறப்பு
தொல்காப்பியத்தைப் போலவே, நன்னூலும் வல்லெழுத்துகள் மற்றும் மெல்லெழுத்துகளின் பிறப்பினை இணைத்தே விளக்குகின்றது. வல்லெழுத்துகள் ஆறும் மெல்லெழுத்துகள் ஆறும் பிறக்கின்ற முறையை நன்னூல் நான்கு நூற்பாக்களில் எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். அவை,
(1)க், ங், ச், ஞ், ட், ண்- பிறக்கும் முறை.(2)த், ந்- பிறக்கும் முறை(3)ப், ம்- பிறக்கும் முறை(4)ற், ன்- பிறக்கும் முறை - என்பன.3.2.3 க் ங், ச் ஞ், ட் ண் - மெய்கள் பிறப்பு
நன்னூல் க், ச், ட் என்னும் மூன்று வல்லின மெய்களும், அவற்றுக்கு இனமான மூன்று மெல்லின மெய்கள் ங், ஞ், ண் ஆகியனவும் பிறக்கும் முறையை ஒரே நூற்பாவில் விளக்குகிறது.
நாவின் அடி மேல்வாயின் அடியைச் சென்று பொருந்தினால் க், ங் பிறக்கும்;
நாவின் நடுப்பகுதி மேல்வாயின் நடுப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச், ஞ் என்னும் மெய்கள் தோன்றும்;
நாவின் நுனிப்பகுதி மேல்வாயின் நுனியைச் சென்று பொருந்தும்போது ட், ண் மெய்கள் பிறக்கும். இதனை,
கஙவும் சஞவும் டணவும் முதல்இடை
நுனிநா அண்ணம் உறமுறை வருமே (நூற்பா. 78)என்னும் நன்னூல் நூற்பா எடுத்துரைக்கின்றது. இந்நூற்பாவில் ‘முதல் இடை நுனி’ என்பதை,
முதல்நா முதல் அண்ணம் என்றும்,
இடைநா இடை அண்ணம் என்றும்,
நுனிநா நுனி அண்ணம் என்றும்விரித்துப் பொருள் காண வேண்டும்.
த், ந் என்னும் மெய்கள் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துகின்ற போது தோன்றுகின்றன. இதனை,
அண்பல் அடிநா முடியுறத் த, ந வரும் (நூற்பா. 79)
என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது. இந்நூற்பாவில் ‘அண்பல்’ என்பது ‘மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதி’ என்று பொருள்படும்.
நன்னூல் ப், ம் மெய்கள் தோன்றும் முறையைச் சற்றுத் தெளிவாக விளக்குகின்றது. மேல்உதடும், கீழ்உதடும் தம்முள் பொருந்தினால் அப்போது ப், ம் பிறக்கும் என்று கூறுகின்றது.
மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் (நூற்பா. 80)
என்பது நன்னூல் நூற்பா. இந்த நூற்பாவில் மீ என்பது மேல் என்று பொருள்படும். எனவே மேல் இதழும் கீழ் இதழும் பொருந்த (உற) ப், ம் என்னும் மெய்கள் பிறக்கும் என்று அறியலாம்.
மெய்யெழுத்துகளின் வரிசையில் கடைசியாக இருப்பவை ற், ன் என்பன. இவை, மேல்வாயை நாவின் நுனி மிகவும் (நன்றாகப்) பொருந்தினால் பிறப்பவை என்பது நன்னூல் கூறும் விளக்கம் ஆகும். இதனை,
அண்ணம் நுனிநா நனிஉறின் ற, ன வரும் (நூற்பா. 85)
என்னும் நூற்பா தெளிவுபடுத்துகின்றது. இந்நூற்பாவில் வரும் ‘நனி’ என்னும் சொல் நன்றாக என்னும் பொருளைத் தருவதாகும்.