தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகாப்பதம்

  • 5.1 பகாப்பதம்

    இப்பாடத்தில் பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் வகைளைக் காண்போம். பகுபதத்தின் உறுப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

    5.1.1 பகாப்பதத்தின் இலக்கணம்

    பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம் ஆகும். அது இடுகுறியாக வழங்கிவரும்; நெடுங்காலமாக ஒரே தன்மையுடையதாக அமைந்திருக்கும். (இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி வரும் சொல்).

    எடுத்துக்காட்டு :

    ‘மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில் மழை, பொழிகிறது என்ற இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன. பொழிகிறது என்பதை, பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம். ‘பொழி‘ என்பதைப் பிரிக்கமுடியாது. பொ, ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும் பொருள் இல்லை. அதே போல, ‘மழை‘ என்பதும் பிரித்தால் பொருள் தராதது, ஆகவே ‘மழை‘, ‘பொழி‘ ஆகிய இரண்டும் பகாப்பதம் ஆகும்.

    இப் பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,

    (1)
    பெயர்ப்பகாப்பதம்
    (2)
    வினைப் பகாப்பதம்
    (3)
    இடைப் பகாப்பதம்
    (4)
    உரிப் பகாப்பதம்

    ஆகியன.

    5.1.2 பகாப்பதத்தின் வகைகள்

    (1) பெயர்ப் பகாப்பதம்:

    பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    நிலம், நீர், நெருப்பு, காற்று என வருவன.

    (2) வினைப் பகாப்பதம்:

    வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    நட, வா, உண், தின் முதலியன.

    (3) இடைப்பகாப்பதம் :

    இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    மன், கொல், போல், மற்று என்பன.

    (4) உரிப் பகாப்பதம் :

    உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    கூர், மிகு, உறு, தவ, நனி, கழி

    மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இதனை நன்னூல் பின்வருமாறு விளக்குகின்றது.

    பகுப்பால் பயனற்று இடுகுறியாகி
    முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
    பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம்     (131)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:52:50(இந்திய நேரம்)