தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுபதம்

 • 5.2 பகுபதம்

  5.2.1 பகுபதத்தின் இலக்கணம்

  பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் பெயர்களும், வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும் வினைச்சொற்களும் பகுபதங்கள் ஆகும். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகுபதங்கள் ஆக மாட்டா.

  5.2.2 பகுபதத்தின் வகைகள்

  முதல் நிலையில் பகுபதத்தை இருவகையாகப் பிரிக்கலாம். அவை,

  (1)
  பெயர்ப் பகுபதம் (பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம்)
  (2)
  வினைப் பகுபதம் (வினைச்சொல்லாக அமையும் பகுபதம்)

  பெயர்ப் பகுபதத்தை மேலும் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.

  அவை,

  (1)
  பொருட்பெயர்ப் பகுபதம்
  (2)
  இடப் பெயர்ப் பகுபதம்
  (3)
  காலப் பெயர்ப் பகுபதம்
  (4)
  சினைப் பெயர்ப் பகுபதம்
  (5)
  குணப் பெயர்ப் பகுபதம்
  (6)
  தொழில் பெயர்ப் பகுபதம்

  என்பன.

  5.2.3 பெயர்ப் பகுபதங்கள்

  (1) பொருட்பெயர்ப் பகுபதம்

  ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம் பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும்.

  எடுத்துக்காட்டு :

  பொன்னன் - அவன் பொன்னை உடையவன் என்பது பொருள். இதைப் பிரித்தால் (பொன்+அன்) பொருள் தரக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது. எனவே இது பொன் என்னும் பொருள் அடிப்படையாகப் பிறந்த பொருட் பெயர்ப் பகுபதம் ஆகும். ( இதைப் போலவே, பிற பெயர்ப் பகுபதங்களும் அமைகின்றன.)

  (2) இடப் பெயர்ப் பகுபதம்

  இடத்தின் அடிப்படையில் அமைவது இடப்பெயர்ப் பகுபதம் ஆகும்.

  எடுத்துக்காட்டு :

  விண்ணோர் - ‘விண்‘ என்னும் இடப்பெயரால் அமைந்த பகுபதம்.

  அகத்தான் - ‘அகம்‘ என்னும் இடப்பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் இது இடப் பெயர்ப் பகுபதம் என்று அழைக்கப்படுகிறது.

  (3) காலப் பெயர்ப் பகுபதம்:

  நாள், திங்கள், ஆண்டு எனவரும் காலப் பெயர்களின் அடிப்படையில் அமையும் பகுபதங்கள் காலப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படுவன.

  எடுத்துக்காட்டு :

  கார்த்திகையான் - இது கார்த்திகைத் திங்களில் பிறந்தவன் என்று பொருள்படும். இது காலப் பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் காலப்பெயர்ப் பகுபதம் ஆகும்.

  ஆதிரையாள் - ஆதிரை நாளில் (நட்சத்திரத்தில்) பிறந்தவள் என்று காலப் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதம் ஆகும்.

  (4) சினைப் பெயர்ப் பகுபதம்

  சினை என்பது உறுப்பு என்று பொருள்படும். உறுப்பின் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதங்கள் சினைப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.

  எடுத்துக்காட்டு :

  கண்ணன் - இச் சொல்லில் ‘கண்‘ என்பது உடலின் உறுப்பு (சினை). அதன் அடிப்படையில் கண்ணன் எனும் பெயர் அமைந்துள்ளது. இதனை கண் + அன் என்று பிரித்தால் ‘கண்‘ என்பது பொருள்தரும் சொல்லாக அமைகின்றது. எனவே இது சினைப் பெயர்ப் பகுபதம் ஆகும்.

  இதைப் போலவே, மூக்கன், பல்லன் என்னும் சினைப் பெயர்ப் பகுபதங்களையும் அறிந்து கொள்ளலாம்.

  (5) குணப் பெயர்ப் பகுபதம்:

  ஒரு பண்பைக் (குணம்) குறிக்கும் சொல்லின் அடிப்படையில் அமையும் பெயர் குணப் பெயர்ப் பகுபதம் எனப்படும்.

  எடுத்துக்காட்டு :

  கரியன, - இச் சொல் கருமை என்னும் பண்புப் பெயரின் அடிப்படையில் அமைந்தது.

  (6) தொழிற் பெயர்ப் பகுபதம்:

  தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ச் சொற்கள் தொழிற் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.

  எடுத்துக்காட்டு :

  தட்டான், தச்சன் எனவரும் பெயர்ச் சொற்கள் தொழிற்பெயரால் அமைந்தவை.

  5.2.4 வினைப் பகுபதங்கள்

  பெயர்ப் பகுபதங்கள் ஆறு வகைப்படும் என்பதைக் கண்டோம். இனி, வினைப் பகுபதங்களின் வகைகளைக் காண்போம்.

  தெரிநிலை (வெளிப்படையாக)யாகவும் குறிப்பாகவும் காலத்தைக் காட்டும் வினைச் சொற்கள் வினைப் பகுபதங்கள் எனப்படுவன. வினைப் பகுபதங்களை முதலில் இரு வகையாகப் பிரித்துக் காணலாம். அவை,

  (1)
  வினைமுற்றுப் பகுபதம்
  (2)
  வினையாலணையும் பெயர்ப் பகுபதம்

  என்பன.

  வினைமுற்றுப் பகுபதம் இருவகைப்படும். அவை,

  (1)
  தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்
  (2)
  குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்

  என்பன.

  தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுப் பகுபதங்களின் விளக்கங்களைக் காணலாம்.

  (1) தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தை வெளிப்படையாகக் காட்டுமானால் அது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எனப்படும்.

  எடுத்துக்காட்டு :

  நடந்தான், நடக்கின்றான், நடப்பான் - எனவரும் வினைமுற்றுகளில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று காலங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இவ்வாறு வினை நிகழ்ந்த காலம் வெளிப்படையாகத் தெரிவதால் இவை தெரிநிலை வினைமுற்றுகள் எனப்படுகின்றன. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையாகவும் வரும்.

  எடுத்துக்காட்டு : நடவான்

  (2) குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தைக் குறிப்பால் உணர்த்துமானால் அது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எனப்படும். குறிப்பு வினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையாகத் தோன்றி, வினைச்சொல்லின் பொருளைத் தருவது எனப்படும்.

  எடுத்துக் காட்டு :

  பொன்னன், ஊணன், அற்று, இற்று எனவரும் சொற்களில் காலம் தெரிநிலையாக வெளிப்படவில்லை. ஆனால் இச்சொற்களில் காலம் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. அவன் பொன்னனாக இருந்தான், பொன்னனாக இருக்கிறான், பொன்னனாக இருப்பான் எனப் பொருள் வரும் போது காலம் குறிப்பாக உணரப்படுகிறது. எனவே இவை குறிப்பு வினை முற்றுகள் எனப்படுகின்றன.

  குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையிலும் வரும்.

  எடுத்துக் காட்டு : அவன் இல்லாதவன்.

  • தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலம் காட்டும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் வினைப் பகுபதங்களே.

  பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.

  எடுத்துக் காட்டு :

  (1)
  உண்ட பையன்
  (2)
  ஓடாத குதிரை

  இத் தெரிநிலை வினைகள் பையன், குதிரை என்ற பெயர்ச்சொற்களைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. எனவே, இவை தெரிநிலைப் பெயரெச்சப்பகுபதம் எனப்படும்.

  மற்றொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் நிறைவடையும் வகையில் அமையும் எச்சம் வினையெச்சப் பகுபதம எனப்படும்.

  எடுத்துக்காட்டு :

  உண்டு வந்தான்
  உண்ண வருகின்றான்

  உண்டு, உண்ண எனவரும் வினைகள், வந்தான், வருகின்றான், என்னும் வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவைப் பெறுகின்றன.

  குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன.

  எடுத்துக்காட்டு :

  பெரிய பையன் - பெயரெச்சம்
  மெல்ல வந்தான் - வினையெச்சம்

  இதுவரையில் வினைமுற்றுப் பகுபதங்களை மட்டும் கண்டோம். இனி வினையாலணையும் பெயர்ப் பகுபதங்களைப் பற்றிக் காணலாம். அவை, இருவகைப் படும்.

  (1) தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம்.

  எடுத்துக்காட்டு : நடந்தானைக் கண்டேன், நடந்தவனைக் கண்டேன் என்பன. இவை காலத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

  (2) குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம்:

  எடுத்துக்காட்டு : பொன்னனைக் கண்டேன்,

  இது காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. குறிப்பாகவே காலம் உணர்த்தும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 17:24:15(இந்திய நேரம்)