தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ணகர, னகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

  • 1.2 ணகர, னகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

    இதுவரை மெய் ஈறுகளுக்கு உரிய பொதுவான புணர்ச்சி விதிகள் பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். இனி நன்னூலார் மெய் ஈறுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு அவை வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார். மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள் ‘ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்’ என்னும் பதினொன்றாகும். இவற்றுள் ஞ் என்பது உரிஞ் (தேய்த்தல்) என்னும் ஒரு சொல்லிலும், ந் என்பது பொருந் (பொருநுதல் = ஒத்திருத்தல்; போல இருத்தல்) வெரிந் (முதுகு) என்னும் இரு சொற்களிலும், வ் என்பது அவ், இவ், உவ், தெவ் (பகை) என்னும் நான்கு சொற்களிலும் மட்டுமே ஈறாகும். ஆனால் இச்சொற்கள் காலப்போக்கில் வழக்கிழந்து மறைந்து போயின. ஏனைய ண், ம், ன், ய், ர், ல், ழ், ள் என்னும் எட்டு மெய்களே காலந்தோறும் பெருவாரியான சொற்களில் இறுதியாக இருந்து வருபவை ஆகும். எனவே இந்த எட்டு மெய் ஈறுகள் பற்றி நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகள் மட்டுமே இங்கே விளக்கிக் காட்டப்படுகின்றன.

    முதற்கண், ணகர, னகர மெய் ஈறுகள், வருமொழி முதலில் வரும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவின மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்கள் பற்றி நன்னூலார் குறிப்பிடும் புணர்ச்சி விதிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சான்றுடன் காண்போம்.

    1.2.1 ணகர, னகர ஈறுகள் இயல்பாதலும் திரிதலும்

    1.
    நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும்.

    சான்று:

    ண் + குடம் = மட்குடம்
    சிறுகண் + ளிறு = சிறுகட்களிறு
    பொன் + காசு = பொற்காசு
    பொன் + குடம் = பொற்குடம்

    (மட்குடம் – மண்ணால் ஆகிய குடம். மூன்றாம் வேற்றுமைத் தொகை; சிறுகட்களிறு – சிறிய கண்ணை உடைய களிறு. இரண்டாம் வேற்றுமைத் தொகை; பொற்காசு – பொன்னால் ஆகிய காசு; பொற்குடம் – பொன்னால் ஆகிய குடம். இவை மூன்றாம் வேற்றுமைத் தொகை.)

    இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவும் திரிந்தன.

    2.
    வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர, னகரங்கள் மெல்லினமும், இடையினமும் வந்தால் இயல்பாகும்.

    சான்று:

    ண் + மேடை = மண்மேடை
    பொன் + முடி = பொன்முடி
    ண் + வலி = கண்வலி
    பொன் + வளையல் = பொன்வளையல்

    (மண்மேடை – மண்ணால் ஆகிய மேடை; பொன்முடி – பொன்னால் ஆகிய முடி; முடி – கிரீடம்; இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத் தொகை. கண்வலி – கண்ணில் வலி. ஏழாம் வேற்றுமைத் தொகை; பொன்வளையல் – பொன்னால் ஆகிய வளையல். மூன்றாம் வேற்றுமைத் தொகை.)

    இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர னகரங்கள் மெல்லினமும், இடையினமும் வர இயல்பாயின.

    3.
    அல்வழிப் புணர்ச்சியில் ணகர, னகரங்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவினமெய்கள் வந்தாலும் இயல்பாகும்.

    சான்று:

    ண் + சரிந்தது = மண் சரிந்தது
    பொன் + பெரிது = பொன் பெரிது
    ண் + மங்கியது = கண் மங்கியது
    பொன் + மலிந்தது = பொன் மலிந்தது
    ண் + வலிக்கிறது = கண் வலிக்கிறது
    பொன் + வலிது = பொன் வலிது

    (இவையாவும் எழுவாய்த் தொடர்)

    இச்சான்றுகளில் அல்வழிப்புணர்ச்சியில் ணகர, னகரங்கள் மூவின மெய்களும் வர இயல்பாயின.

    மேலே சொல்லப்பட்ட மூன்று விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார்.

    ணன வல்லினம் வரட் டறவும், பிறவரின்
    இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு; அல்வழிக்கு
    அனைத்துமெய் வரினும் இயல்பு ஆகும்மே (நன்னூல், 209)

    1.2.2 சில ணகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்பு விதி

    1.
    சாதி பற்றி வரும் பாண், உமண் என்ற பெயர்களுக்கும், கூட்டம் பற்றி வரும் அமண் என்ற பெயர்க்கும், பரண், கவண் என்ற பெயர்களுக்கும் இறுதியில் உள்ள ணகர மெய், வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்.

    (பாண் – இசை பாடுவதில் வல்ல சாதியார்; உமண் – உப்பு விற்கும் சாதியார்; அமண் – சமண சமயத்தைச் சார்ந்த கூட்டத்தார். இவர்கள் ஆடையில்லாமல் திரிவதால் அமண் எனப்பட்டனர்; பரண் – தினைப்புனம் காப்பதற்கு அதன் நடுவில் போட்டிருக்கும் மேடை; கவண் – கல் எறியும் கருவி.)

    சான்று:

    பாண் + சேரி = பாண்சேரி
    உமண் + குடி = உமண்குடி
    அமண் + சேரி = அமண்சேரி
    பரண் + கால் = பரண்கால்
    கவண் + கல் = கவண்கல்

    (கவண்கல் – கவணில் வைத்து எறியப்படும் கல். ஏழாம் வேற்றுமைத் தொகை. மற்றவை ஆறாம் வேற்றுமைத் தொகை)

    2.
    உணவுப்பொருளாகிய எள் என்பதைக் குறிக்கும் எண் என்ற பெயர்க்கும், ஒன்பது அங்குல அளவுள்ள சாண் என்ற நீட்டல் அளவைப் பெயர்க்கும் இறுதியில் உள்ள ணகர மெய், அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் டகரமாகத் திரியும்.

    சான்று:

    ண் + சிறிது = எட்சிறிது
    சாண் + கோல் = சாட்கோல்

    3.
    சாதிபற்றி வரும் பெயர்க்கும், கூட்டம் பற்றி வரும் பெயர்க்கும் இறுதியில் வரும் ணகர மெய் வேற்றுமையில் அகரச் சாரியை பெற்று வருவதும் உண்டு. (இவ்விதி நூற்பாவில் பிற என்று கூறப்படுவதால் பெறப்படுகிறது.)

    சான்று:

    பாண் + குடி = பாக்குடி
    அமண் + சேரி = அமச்சேரி

    இம்மூன்று, விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துத் தருகிறார்.

    சாதி, குழூஉ, பரண், கவண்பெயர் இறுதி
    இயல்பாம் வேற்றுமைக்கு; உணவு எண், சாண் பிற
    டவ்வா கலுமாம் அல்வழி யும்மே          (நன்னூல், 211)

    (குழூஉ - கூட்டம்; எண் - எள் என்னும் உணவு)

    1.2.3 னகர ஈற்றுச் சாதிப்பெயர்க்குச் சிறப்பு விதி

    னகரத்தை இறுதியில் உடைய சாதிப்பெயர், வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர, ஈறு திரியாமல் இயல்பாதலும், அகரச் சாரியை பெறுதலும் ஆகிய புணர்ச்சியைப் பெறும்.

    னஃகான் கிளைப்பெயர் இயல்பும், அஃகான்
    அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே (நன்னூல், 212)

    (கிளைப்பெயர் – சாதிப்பெயர்; அஃகான் – அகரச் சாரியை; அடைவும் - பெறுதலும்)

    சான்று:

    எயின் + குடி = எயின்குடி
    எயின் + குடி > எயின் + + குடி = எயிக்குடி

    (எயினக்குடி – எயினரது குடி. ஆறாம் வேற்றுமைத் தொகை)

    எயின் என்பது பாலை நிலத்தில் வாழும் வேட்டுவச் சாதியைக் குறிக்கும். இச்சாதிப்பெயரின் ஈற்று னகரமெய் வல்லினம் வர இயல்பானதுடன், அகரச் சாரியையும் பெற்று வந்தது.

    1.2.4. மீன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

    மீன் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய், வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர, இயல்பாவதோடு, றகர மெய்யாகவும் திரியும்.

    மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே (நன்னூல், 213)

    (பொரூஉம் – விகற்பமாகும்)

    சான்று:

    மீன் + கண் = மீன்கண் (னகரம் இயல்பானது)
    மீன் + கண் = மீற்கண் (னகரம் றகரமாகத் திரிந்தது)

    (மீன்கண் – மீனினதுகண். ஆறாம் வேற்றுமைத் தொகை)

    1.2.5 தேன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

    தேன் என்னும் சொல், அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழிகளோடு பின் வருமாறு புணரும்.

    1
    வருமொழி முதலில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூவின மெய்கள் வந்தால் தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாகும்.

    சான்று:

    அல்வழி
     
     
     
    தேன் + சிறிது
    தேன் + மாண்டது
    தேன் + யாது
    = தேன் சிறிது
    = தேன் மாண்டது
    = தேன் யாது
    னகரம் இயல்பானது

    (இவை மூன்றும் எழுவாய்த் தொடர்)

    வேற்றுமை
     
     
     
    தேன் + குடித்தான்
    தேன் + மாட்சி
    தேன் + வாங்கினான்
    = தேன் குடித்தான்
    = தேன் மாட்சி
    = தேன் வாங்கினான்
    னகரம் இயல்பானது

    (தேன் குடித்தான் – தேனைக் குடித்தான்; தேன் வாங்கினான் – தேனை வாங்கினான்; இவை இரண்டும் இரண்டாம் வேற்றுமைத் தொகை. தேன்மாட்சி – தேனினது மாட்சி; இது ஆறாம் வேற்றுமைத் தொகை.)

    2
    வருமொழி முதலில் மெல்லினம் வந்தால், தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாதலே அன்றிக் கெடுதலும் உண்டு.

    சான்று:

    அல்வழி

    தேன் + மொழி = தேன்மொழி (னகரம் இயல்பானது)
    தேன் + மொழி = தேமொழி (னகரம் கெட்டது)

    (தேன்மொழி – தேன் போன்ற இனிய மொழி. உவமைத்தொகை; மொழி – சொல்)

    வேற்றுமை

    தேன் + மலர் = தேன்மலர் (னகரம் இயல்பானது)
    தேன் + மலர் = தேமலர் (னகரம் கெட்டது)

    (தேன்மலர் – தேனை உடைய மலர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை)

    3
    வருமொழி முதலில் வல்லினம் வந்தால், தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெட்டு, வருமொழி முதலில் உள்ள வல்லினமோ அதற்கு இனமான மெல்லினமோ மிகுவதும் உண்டு.

    சான்று:

    அல்வழி

    தேன் + குழம்பு = தேன்குழம்பு (னகரம் இயல்பானது)
    தேன் + குழம்பு = தேக்குழம்பு (னகரம் கெட்டு, வல்லினம் மிக்கது)
    தேன் + குழம்பு = தேங்குழம்பு (னகரம் கெட்டு, மெல்லினம் மிகுந்தது)

    (தேன்குழம்பு – தேன் ஆகிய குழம்பு. இருபெயரொட்டுப் பண்புத்தொகை)

    வேற்றுமை

    தேன் + குடம் = தேன்குடம் (னகரம் இயல்பானது)
    தேன் + குடம் = தேக்குடம் (னகரம் கெட்டு வல்லினம் மிக்கது)
    தேன் + குடம் = தேங்குடம் (னகரம் கெட்டு மெல்லினம் மிகுந்தது)

    (தேன்குடம் – தேனை உடைய குடம். இரண்டாம் வேற்றுமைத் தொகை)

    மேலே கூறிய மூன்று விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    தேன்மொழி மெய்வரின் இயல்பும், மென்மை
    மேவின் இறுதி அழிவும், வலிவரின்
    ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி   (நன்னூலார், 214)

    1.2.6 தன், என், நின் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி

    தான் என்பது படர்க்கை ஒருமை இடப்பெயர். நான் என்பது தன்மை ஒருமை இடப்பெயர். நீ என்பது முன்னிலை ஒருமை இடப்பெயர். இம்மூன்று பெயர்களும் வேற்றுமை உருபு ஏற்கும்போது, அவற்றின் முதலில் உள்ள நெடிலானது குறிலாகக் குறுகும். எனவே, இவற்றை நெடுமுதல் குறுகும் பெயர்கள் என்பர்.

    தான் + ஐ = தன்னை
    நான் + ஐ = என்னை
    நீ + ஐ    = நின்னை

    தன், என் எனும் நெடுமுதல் குறுகிய இடப்பெயர்களின் ஈற்றில் உள்ள னகரம், வல்லினம் வந்தால் ‘ண வல்லினம் வரட் டவும்’ என்ற விதிப்படி றகரமாகத் திரிதலும், அவ்விதியை ஏற்காது இயல்பாதலும் உண்டு.

    சான்று:

    ன் + பகை = தற்பகை, தன்பகை
    ன் + பகை = எற்பகை, என்பகை

    (தற்பகை, தன்பகை – தனது பகை ; எற்பகை, என்பகை – எனது பகை; இவை ஆறாம் வேற்றுமைத் தொகை)

    நின் என்னும் நெடுமுதல் குறுகிய இடப்பெயரின் ஈற்றில் உள்ள னகரம், வல்லினம் வந்தால் திரியாமல் இயல்பாகும்.

    சான்று:

    நின் + பகை = நின்பகை

    (நின்பகை – நினது பகை. ஆறாம் வேற்றுமைத் தொகை)

புதுப்பிக்கபட்ட நாள் : 12-10-2017 12:01:09(இந்திய நேரம்)