தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

  • 2.1 மகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

    மகர மெய்யை ஈற்றிலே கொண்ட சொற்கள், ஈற்றிலே உள்ள மகரமெய் கெட்டு உயிர் ஈறாய் நின்றும், ஈற்றிலே உள்ள மகர மெய் கெடாமல் நின்றும் வருமொழிகளோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டும், சிறப்பு விதி கொண்டும் நன்னூலார் விளக்கிக் காட்டுகிறார். மேலும், நும், தம், எம், நம் என்னும் மூவிடப் பெயர்கள், அகம் என்னும் இடப்பெயர் ஆகியவை வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். அவற்றை ஈண்டுக் காண்போம்.

    2.1.1 மகர ஈற்றுப் புணர்ச்சி - பொதுவிதி

    மகர மெய் ஈற்றுப் புணர்ச்சிக்குரிய பொது விதியாக நன்னூலார் இரண்டனைக் குறிப்பிடுகிறார். அவை வருமாறு:

    1.
    நிலைமொழியில் உள்ள மகர மெய் ஈற்றுச் சொற்கள், வருமொழியின் முதலில் வரும் உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் நாற்கணங்களோடு புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு (நீங்கி), உயிர் ஈறாய் நிற்கும். அவ்வாறு நிற்கும் உயிர் ஈற்றின் முன்னர், வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும் வல்லினம் வந்தால் வருகின்ற அவ்வல்லின எழுத்து மிகும்; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும்.

    சான்று:

    அல்வழி

    இச்சான்றில் நிலைமொழியாக உள்ள பவளம் என்பது மகர மெய் ஈற்றுச்சொல். இச்சொல் வருமொழியில் இகர உயிரை முதலாகக் கொண்டு வரும் இதழ் என்ற சொல்லோடு புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டுப் பவள என அகர உயிர் ஈறாக நின்றது. இவ்வாறு நிற்கும் அகர உயிர் ஈற்றின் முன்னர், இதழ் என்னும் வருமொழி முதலில் வந்த இகர உயிர் வகர உடம்படுமெய் பெற்றுப் பவளவிதழ் என்றாயிற்று.

    (பவளவிதழ் – பவளம் போன்ற சிவந்த இதழ். உவமைத் தொகை; கமலக்கண் – கமலம் போன்ற சிவந்த கண். உவமைத்தொகை; கமலம் – தாமரை; வட்டமுகம் – வட்டமாகிய முகம். பண்புத்தொகை; பவளவாய் – பவளம் போன்ற சிவந்தவாய். உவமைத்தொகை)

    வேற்றுமை

    (மரவடி – மரத்தினது அடி; மரக்கிளை – மரத்தினது கிளை ; மரநார் – மரத்தினது நார்; மரவேர் – மரத்தினது வேர். இவை நான்கும் ஆறாம் வேற்றுமைத் தொகை.)

    2.
    வருமொழி முதலில் வல்லினம் வந்தால், ஈற்று மகரமெய் கெடாமல், வருகின்ற வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரியும்.

    சான்று:

    அல்வழி

    நாம் + சிறியேம் = நாஞ்சிறியேம்
    நிலம் + தீ = நிலந்தீ
    உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு

    (நாஞ்சிறியேம் – எழுவாய்த்தொடர்; நிலந்தீ – நிலமும் தீயும். உம்மைத் தொகை; உண்ணுஞ்சோறு – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்)

    இச்சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரமெய் அல்வழிப் புணர்ச்சியில் கெடாமல், வருமொழி முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தது காணலாம். சகரத்திற்கு இனமெல்லெழுத்து ஞகரம் ஆகும்; தகரத்திற்கு இனமெல்லெழுத்து நகரம் ஆகும்.

    வேற்றுமை

    மரம் + கண்டார் = மரங்கண்டார்
    அறம் + கூறவையம் = அறங்கூறவையம்

    (மரங்கண்டார் – மரத்தைக் கண்டார்; அறங்கூறவையம் – அறத்தைக் கூறும் அவையம்; பழங்காலத்தில் வழக்காடும் நீதிமன்றத்திற்குரிய பெயர்; இவை இரண்டும் இரண்டாம் வேற்றுமைத் தொகை)

    இச்சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரமெய், வேற்றுமைப் புணர்ச்சியில் கெடாமல், வருமொழி முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தது காணலாம். ககரத்திற்கு இனமெல்லெழுத்து ஙகரம் ஆகும்.

    மகர ஈற்றுப் புணர்ச்சிக்குரிய இவ்விரண்டு பொது விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    மவ்வீறு ஒற்றுஅழிந்து உயிர்ஈறு ஒப்பவும்,
    வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்   (நன்னூல், 219)

    (மவ்வீறு – மகரமெய் ஈறு; ஒற்று – மகரமெய்; அழிந்து – கெட்டு; உயிர்ஈறு ஒப்பவும் - உயிர் ஈற்றுச் சொற்களைப் போலப் புணர்வனவும்)

    2.1.2 மகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

    வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் வந்தால், நிலைமொழியின் இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு, வருகின்ற வல்லினமோ, அவ்வல்லினத்திற்கு இனமான மெல்லினமோ மிகும். அல்வழிப் புணர்ச்சியில் உயிரும் இடையினமும் வந்தால் இறுதியில் உள்ள மகரமெய் கெடாமல் இயல்பாகும். இதனை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும்,
    அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள (நன்னூல், 220)

    சான்று:

    வேற்றுமை

    குளம் + கரை > குள + கரை > குள + க் + கரை = குளக்கரை
    குளம் + கரை > குள + கரை > குள + ங் + கரை = குளங்கரை

    (குளக்கரை, குளங்கரை – குளத்தினது கரை; ஆறாம் வேற்றுமைத் தொகை)

    இச்சான்றுகளில் குளம் என்ற சொல் குள என மகரம் கெட்டு நின்று, கரை என்னும் வல்லின முதல் வருமொழியோடு புணரும்போது, குளக்கரை என வல்லினம் மிக்கும், குளங்கரை என வல்லினத்துக்கு இனமான மெல்லினம் மிக்கும் புணர்ந்தமை காணலாம்.

    அல்வழி

    குளம் + அழகியது = குளமழகியது
    ஆளும் + அரசன் = ஆளுமரசன்
    மரம் + வளர்ந்தது = மரம் வளர்ந்தது
    கொல்லும் + யானை = கொல்லும் யானை

    (குளமழகியது, மரம் வளர்ந்தது – எழுவாய்த் தொடர்; ஆளுமரசன், கொல்லும் யானை – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்)

    இச்சான்றுகளில் உயிரும், இடையினமும் வர, ஈற்று மகரமெய் கெடாமல் இயல்பாயிற்று.

    2.1.3 நும், தம், எம், நம் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி

    நீர் என்பது முன்னிலைப் பன்மை இடப்பெயர்; தாம் என்பது படர்க்கைப் பன்மை இடப்பெயர்; யாம், நாம் என்பன தன்மைப் பன்மை இடப்பெயர். இந்நான்கு பெயர்களும் வேற்றுமை உருபு ஏற்கும்போது, அவற்றின் முதலில் உள்ள நெடிலானது குறுகும். எனவே இவற்றை நெடுமுதல் குறுகும் பெயர்கள் என்பர்.

    நீர் + ஐ   = நும்மை
    தாம் + ஐ = தம்மை
    யாம் + ஐ = எம்மை
    நாம் + ஐ = நம்மை

    எனவே வேற்றுமை உருபு ஏற்கும் போது நீர், தாம், யாம், நாம் என்பன முறையே நும், தம், எம், நம் என நெடுமுதல் குறுகும் பெயர்களாக மாறும் என்பது பெறப்படும்

    நும், தம், எம், நம் என்னும் நான்கு சொற்களின் இறுதியில் உள்ள மகர மெய்யானது, வருமொழி முதலில் வருகின்ற ஞகர மெய்யாகவும், நகர மெய்யாகவும் திரியும்.

    நும், தம்
    எம், நம் ஈறாம் மவ்வரு ஞநவே      (நன்னூல், 221)

    சான்று:

    நும் + ஞாண் = நுஞ்ஞாண்
    ம் + ஞாண் = தஞ்ஞாண்
    ம் + ஞாண் = எஞ்ஞாண்
    ம் + ஞாண் = நஞ்ஞாண் (ஞாண் = கயிறு)

    நும் + நூல் = நுந்நூல்
    ம் + நூல் = தந்நூல்
    ம் + நூல் = எந்நூல்
    ம் + நூல் = நந்நூல்

    2.1.4 அகம் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

    அகம் என்னும் இடப் பெயரின் முன் செவி, கை என்னும் சினைப்பெயர்கள் வந்தால், அச்சொல்லின் இறுதியில் உள்ள மகரமெய், வருமொழியின் முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமாகிய மெல்லெழுத்தாகத் திரிதலேயன்றி, அதன் நடுவில் நிற்கும் ககரமெய்யும் அதன் மேல் ஏறிய அகர உயிரும் கெடும்.

    அகம்முனர்ச் செவி, கை வரின் இடையன கெடும் (நன்னூல், 222)

    (முனர் – முன்னர்; இடையன – இடையில் உள்ள ‘க’ என்னும் உயிர்மெய்)

    சான்று:

    அகம் + கை > அகங் + கை > அங் + கை = அங்கை
    அகம் + செவி > அகஞ் + செவி > அஞ் + செவி = அஞ்செவி

    ‘அங்கைப் புண்ணிற்கு ஆடியும் வேண்டுமோ? என்பது ஒரு பழமொழி. இதில் அகம் + கை என்பது அங்கை என வந்துள்ளது. (அங்கை – உள்ளங்கை.)

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    மகர மெய் ஈற்றுச் சொற்கள், ஈற்று மெய் கெட்டு வருமொழியில் உள்ள உயிரோடு எவ்வாறு புணரும்?
    2.
    கமலக்கண் – பிரித்துக் காட்டுக.
    3.
    வட்டம் + முகம் – சேர்த்து எழுதுக.
    4.
    மரம் + வேர் – சேர்த்து எழுதுக.
    5.
    குளம் முன் வரும் கரை என்னும் சொல் எவ்வாறு புணரும்?
    6.
    தாம், யாம், நாம் – இச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு அமையும்?
    7.
    நந்நூல் – பிரித்துக் காட்டுக.
    8.
    அகம் முனர்ச் செவிகை வரின் இடையன கெடும் – இந்நூற்பாவில் வரும் இடையன என்பது எதைக் குறிக்கும்?
    9.
    அகம் + கை = சேர்த்து எழுதுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 12-10-2017 12:23:01(இந்திய நேரம்)