தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.3 தொகுப்புரை

    இதுகாறும் மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும், யகர, ரகர, ழகர ஈற்றுப்புணர்ச்சி பற்றியும் நன்னூலார் கூறியனவற்றை விரிவாகப் பார்த்தோம். ஈண்டு அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

    மகர ஈற்றுச் சொற்கள், ஈற்றில் உள்ள மகரமெய் கெட்டு உயிர் ஈறாய் நின்று நாற்கணங்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும். அவ்வாறு உயிர்ஈறாய் நிற்கும் சொற்களின் முன்னர் வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும்; வல்லினம் வந்தால் வருகின்ற வல்லினம் மிகும்; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும்.

    நீர், தாம், யாம், நாம் என்னும் மூவிடப் பன்மைப் பெயர்கள் புணர்ச்சியில் நும், தம், எம், நம் என நெடுமுதல் குறுகிய பெயர்களாக நின்று, வருமொழி முதலில் உள்ள ஞகர, நகர மெய்களோடு புணரும்.

    அகம் என்ற சொல், செவி, கை என்னும் சொற்களுடன் புணரும்போது அச்சொல்லின் இடையில் உள்ள ‘க’ என்ற உயிர்மெய் கெடும்.

    ய, ர, ழ என்னும் மெய் ஈறுகளில் முன் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் அல்வழியில் இயல்பாதலும், மிகுதலும் பெறும்; வேற்றுமையில் மிகுதலும், இனத்தோடு உறழ்தலும் பெறும்.

    வேற்றுமைப் புணர்ச்சியில் தமிழ் என்ற சொல் அகரச் சாரியை பெற்றுப் புணரும். கீழ் என்னும் சொல்லின் முன் வரும் வல்லினம் இயல்பாகவும் வரும்; மிக்கும் வரும். இவற்றை எல்லாம் இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    ய, ர, ழ ஈறுகளின் முன்வரும் வல்லினம் அல்வழியில் எவ்வெவ்வாறு புணரும்?
    2.
    பேய் + பூதம் = சேர்த்து எழுதுக.
    3.
    அல்வழியில் யகர ஈற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகுமா? சான்று தருக.
    4.
    வேற்றுமையில் ய,ர,ழ ஈறுகளின் முன் வரும் வல்லினம் மிகுதலுக்குச் சான்று தருக.
    5.
    வேற்றுமைப் புணர்ச்சியில் தமிழ் என்னும் சொல் பெறும் சாரியை யாது?
    6.
    தாழ் + கோல் – எவ்வாறு புணரும்?
    7.
    கீழ் என்ற சொல்லின் முன் வல்லினம் எவ்வாறு வரும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-10-2017 12:27:24(இந்திய நேரம்)