தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.0 பாட முன்னுரை

 • 3.0 பாட முன்னுரை

  c03110ad.gif (1294 bytes)

  உலகம் என்ற சொல்லை ஒரு மங்கலச் சொல்லாகக் கருதியவர் தமிழர். வான ஊர்தியில் ஒரு பறவையைப் போல் பறந்து இந்த உலகத்தைப் பார்க்கும்போது எவ்வளவு இனிய காட்சி நல்குகின்றது! வையத்தில் மூன்று பகுதி கடல்; ஒருபகுதி நிலம். கண்டங்களாகக் கடலால் துண்டாடப்பட்ட நாடுகளின் தொகை. இதோ பூகோள உருண்டையைச் சுற்றினால் நம் கண்முன் தோன்றும் உலகப்படம்!

  கடலால் வளைக்கப்பட்டது இந்த உலகம். "பெருங்கடல் வளைஇய உலகம்" என்று கூறுகிறது குறுந்தொகை என்ற இலக்கியம். கடலை ஆடையாக உடுத்த நில மங்கை என உருவகம் செய்கிறார் மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. உலகிலேயே நாட்டை ஒரு பெண்ணாக முதன் முதல் உருவகித்த பெருமை தமிழ்ப் புலவனுக்கே உரியது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் இந்தியத் திருநாட்டை ஒரு பெண்ணாக இளங்கோவடிகள் ஓவியப்படுத்திக் காட்டுகின்றார். "அலைகளைக் கொண்ட நீரை ஆடையாக உடுத்தவள். மலைகளை மார்பகங்களாகக் கொண்டவள். ஆறுகளை முத்தாரமாக அணிந்தவள். மழை முகில்களைக் கூந்தலாகப் பெற்றவள்" என்பது அவர் காட்டும் சொல்லோவியம்.

  உலகப் படத்தில் இந்தியாவைக் காணுங்கள்! இமயம் தலையாக அமைந்துள்ளது. குமரி திருவடிகளாக உள்ளது. மகவை அணைக்க எழுந்த இரு கைகளாக மேற்கிலும் கிழக்கிலும் அகன்ற நிலப்பகுதிகள் அமையக் காணலாம்.

  வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
        வாழும் குமரிமுனை பாப்பா

  (பாரதி - பாப்பாப்பாட்டு: 13)

  c03110ad.gif (1294 bytes)

  வாழும் குமரி என்றும் பிறிதொரு இடத்தில் நித்தம் தவம்செய் குமரி என்றும் பாரதியார் கூறியது குறித்துச் சுவாமி விபுலானந்தர், "மேலும் கடல் நிலத்தைக் கொண்டு விடாமல் இருக்க வேண்டும்" என்று கருதியதைக் காட்டும் என்பர். இந்தியாவின் இன்றைய தென்னெல்லைதான் கன்னியாகுமரி! முன்னொரு காலத்தில் அதற்கப்பால் பல நூறு கற்கள் நிலமாக இருந்தமையினை வரலாறு காட்டுகின்றது. அவ்வாறு இருந்த காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

  சங்ககாலத் தமிழ் மக்கள், தாம் வாழ்ந்த நிலத்தை அதன் பூகோள அமைப்பிற்கும் (Geographical Structure) தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப, ஐந்து வகையாகப் பிரித்தனர். அவர்கள் வாழ்க்கை முறையும் நிலப்பாகுபாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அவர்களால் படைக்கப்பட்ட, கலைகளும், பிறபண்பாட்டுக் கூறுகளும் நிலப்பிரிவினைப் பின்புலமாகக் கொண்டே அமைந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2017 11:24:08(இந்திய நேரம்)