தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.3 தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று மூலங்கள்

 • 3.3 பண்பாட்டு வரலாற்று மூலங்கள்

  Audio

  தமிழ்நாட்டின் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும் மூலச்சான்றுகள் பல உள்ளன.

  1. இலக்கியப் பதிவுகள்
  2. கல்வெட்டுகள்
  3. அகழ்வாய்வுகள்
  4. அயலகப் பயணிகளின் குறிப்புகள்

  என்பவை இந்த வகையில் முக்கியமானவை. இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் மீட்டுருவாக்கம் (Reconstruction) செய்ய இயலும்.

  3.3.1 இலக்கியப் பதிவுகள்

  பண்பாட்டுப் பதிவுகளாகப் போற்றத்தக்க இலக்கியங்கள் சங்ககாலத்தில் எழுதப்பெற்ற பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், கி.பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு அளவில் தோன்றிய திருக்குறள், சிலப்பதிகாரம், கி.பி. ஆறிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தோன்றிய சைவத் திருமுறைகள், வைணவ இலக்கியமான நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பெரிய புராணம், கம்ப இராமாயணம் ஆகியவை, கி.பி. பதினைந்து வரை தோன்றிய சிற்றிலக்கியங்கள். ஐரோப்பியர் வருகைக்குப்பின் தோன்றி வளர்ந்த உரைநடை, நாவல், சிறுகதை, நாடகங்கள் ஆகியன எல்லாம் பண்பாட்டு மீட்டுருவாக்கம் செய்யத்தக்க கருவிகளாகும். இலக்கியம் காட்டும் சான்றாதாரம் ஒன்றை இங்கு எடுத்துக்காட்டாகக் காணலாம்.

  சேரநாட்டின் அரசவை கூடியிருக்கிறது. அரசன் இமயவரம்பனும், அவனுடைய மகன்கள் இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது நிமித்திகன் (சோதிடன்) ஒருவன் வருகிறான். இமயவரம்பனை அடுத்து அரசாளும் பேறு இளைய மகனுக்கே உண்டென்று கூறுகிறான். மூத்த அரசகுமரனாகிய செங்குட்டுவன் துன்பம் நீங்கும் வகையில் இளையவன் நிமித்திகனைக் கோபத்தோடு பார்த்துவிட்டு அரசவையைவிட்டு வெளியேறுகிறான். வெளியேறிய இளங்கோ துறவுக்கோலம் பூண்டு அரசவைக்குள் நுழைகிறான். அந்த இளங்கோவே இளங்கோ அடிகள். இந்தக் கதை சிலப்பதிகாரத்தின் இறுதியில் இடம்பெறுகிறது. நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன், இளங்கோ ஆகிய மூவர் வரலாற்றையும் கூறுவதோடு இளங்கோ அடிகளின் பண்பாட்டுப் பெருமையையும் கூறக் காணலாம்.

  3.3.2 அகழ்வாய்வுகள்


  முதுமக்கள் தாழி

  இதோ பாருங்கள்! எவ்வளவு பெரிய தாழி! இதனை முதுமக்கள் தாழி என்று கூறுவர். பழங்காலத்தில் மிக வயது மூத்தவர்களை இத்தகைய பெரிய பானைகளில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இதைப்போன்ற தாழிகள் தமிழகத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இறந்தவர்களைத் தாழியில் இடுதல், புதைத்தல், எரித்தல் போன்ற வழக்கங்கள் இருந்திருக்கின்றன. தாழியில் இடும்போது, அவர்கள் பயன்படுத்திய சில பொருள்களையும் அவர்களோடு புதைப்பது வழக்கமாய் இருந்திருக்கிறது. அகழ்வாய்வுகளில், பழங்காலத்துப் பானை ஓடுகள், மணிகள், சிறு கலங்கள், உமி, இரும்புக் கருவிகள், கற்கருவிகள் ஆகியன கிடைக்கின்றன. ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல், நாகைப்பட்டின மாவட்டப் பூம்புகார், தஞ்சை மாவட்டப் பழையாறை, தாராசுரம், திருநெல்வேலி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ள அகழ்வாய்வுகள் குறிப்பிடத்தக்கன.

  3.3.3 கல்வெட்டுகள்


  கருவூர் கல்வெட்டு

   

  கருவூர் மாவட்டத்தில் புகளூர் என்ற ஊரில் உள்ள மலையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டைக் காணுங்கள்! இந்தக் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா? ஓர் இயற்கைக் குகைத்தளத்தில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ஆற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்ற சமணப் பெரியவருக்குச் செல்லிரும்பொறை என்ற சேர அரசனின் மகன் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கடுங்கோன், இளவரசாக இருந்தபொழுது இந்தக் குகைத் தளத்தை உருவாக்கிக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. மூன்று தலைமுறை அரசர்களை இக்கல்வெட்டுக் குறிக்கின்றது.

  மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன்
  கோ ஆ . . . . . . . ல்லிரும்பொறை மகன் பெருங்
  கடுங்கோன் மகன் கடுங்கோன் இளங்கடுங்கோ
  இளங்கோ ஆக அறுப்பித்த கல்.
  c03110ad.gif (1294 bytes)

  இதுபோலப் பலப்பலக் கல்வெட்டுகள் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் காட்டுகின்றன. ஐரோப்பியர் வரவு அகத்திலும் புறத்திலும் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்துவிட்டன. அவை எல்லாவற்றையும் நன்மைகள் என்று கூறிவிடுவதற்கில்லை. நம் பண்பாட்டில் சில நலிவுகளையும் ஐரோப்பியப் பண்பாடு ஏற்படுத்திவிட்டது.

  3.3.4 அயலகப் பயணிகளின் செய்திகள்

  தாலமி, பிளினி ஆகிய அயல்நாட்டுப் பயணநூலாரும் பெரிப்ளூஸ் என்னும் நூலின் ஆசிரியரும் பழங்காலத்தில் தமிழ்நாடு மேற்கு நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை விளக்குகின்றனர்.  தமிழ்நாட்டின் விலை உயர்ந்த முத்துக்கள் ரோமாபுரியில் அரசகுடியினரால் விரும்பி ஏற்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து மிளகு, ஏலம், இலவங்கம், யானைத்தந்தம், சந்தனம், அகில் ஆகியன மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருக்கின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு வந்த மார்க்கோபோலோ குதிரைகளை இறக்குமதி செய்வதில் பாண்டியநாடு பெரும் பொருளைச் செலவிட்டதைக் கூறுகின்றார். வாசப் என்பவரும் ஆண்டு ஒன்றுக்குப் பாண்டியர்களுக்காக மலபார் கடற்கரையில் 1400 குதிரைகள் வந்து இறங்கின என்கிறார். மார்க்கோபோலோ கூறும் செய்திகளில் மிகவும் கவனிக்கத்தக்கன கீழ்வருமாறு :

   


  மார்க்கோபோலோ

  • பாண்டியநாட்டு மக்கள் நாள்தோறும் இருமுறை குளித்தனர்.

  • குளிக்காதவர்களைத் தூய்மைக் குறைவாகக் கருதினர்.

  • நீரை உதட்டுக்கு மேலே தூக்கிப் பருகினர்.

  • வலது கையால் சாப்பிட்டனர்.

  • மன்னராயினும் தரையில் உட்கார்ந்து பேசுவதைக் குறைவாகக் கருதவில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2017 11:01:39(இந்திய நேரம்)