தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.1 தமிழ்நாடு

 • 3.1 தமிழ்நாடு

  Audio

  “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்" என்று பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பாயிரம் கூறுகின்றது. அன்றிருந்த நிலை மாறிவிட்டது. இன்று வடவேங்கடம் என்று கூறப்படும் திருப்பதி திருமலை ஆந்திர நாட்டிற்கு உரியதாகிவிட்டது.

  நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று
  நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட
  மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்
  மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

  (பாரதி - செந்தமிழ்நாடு : 5)

  /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

  என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார். அந்த நிலை மாறி இன்று திருத்தணியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதி 'தமிழ்நாடு' என வழங்குகிறது. சென்னை மாநிலம் என்றும் மெட்ராஸ் ஸ்டேட் (Madras State) என்றும் வழங்கிய இப்பகுதி அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் பெற்றது.

   


  பாரதியார்

  3.1.1 நிலவரையறை

  தமிழகம் இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடா இதன் கிழக்கு எல்லையாக நீண்டு கிடக்கின்றது. மேற்கே கேரளமும், வடக்கே ஆந்திரமும், வடமேற்கில் கர்நாடகமும், தெற்கில் இந்துமாக்கடலும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 1,30,057 சதுர கிலோமீட்டர். இதன் இன்றைய மக்கள் தொகை ஏறத்தாழ ஆறுகோடிப் பேர். வங்கக் கடற்கரையை ஒட்டிய சமவெளிப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு இணைந்து விளங்கும் மலை நிலப்பகுதி, இவ்விரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் என மூன்று பெரும்பகுதிகளாகத் தமிழகம் விளங்குகின்றது. மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள், கடற்கரைப்பகுதிகள், வயல்வெளிப் பகுதிகள் என நால்வகை நிலங்களும் தமிழகத்தில் உள்ளன.

  தேக்கு மரங்களும் சந்தன மரங்களும், வேங்கை, கோங்கு, ஆச்சா மரங்களும் வானுயர வளர்ந்து நிற்கும் தமிழகக் காட்டுப் பகுதிகளைக் காணுங்கள்! இத்தகைய காட்டைத்தான்

  "மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கம்"        (அக: 92-8)

  என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. மந்திக் குரங்கிற்கும் தெரியாத மரங்கள் நெருங்கிய மலைக்காடு என்பது இதன் பொருள். இதோ! குளிர் தூங்கும் குற்றால அழகைக் காணுங்கள்!

  வானரங்கள் கனிகொடுத்து மந்தியுடன் கொஞ்சும்
       மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

  (குற்றாலக்குறவஞ்சி)

  /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

  அருவிகள் வைரமாலை போலத் தொங்கும் அழகு காண்பதற்குரியது. ஆண்டில் பாதிநாள் சுறுசுறுப்பாய் வேலை நடக்கும் இந்த வயல்வெளிகளைப் பாருங்கள்! இந்த வயல் வெளிகளில் நாற்று நடுதல், களையெடுத்தல், அறுவடை போன்ற நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பண்பாட்டின் உயிர்மூச்சாய்த் திகழும் நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிப்பதைக் கேளுங்கள்!

   

  களை எடுக்கும் பெரியகுளம்
  கணக்கெழுதும் ஆலமரம்
  கொத்தடிக்கும் கொட்டாரம்
  கூறுவைக்கும் களத்துமேடு
  கண்ணாடி வளையல்போட்டு
  களையெடுக்க வந்த புள்ளே
  கண்ணாடி மின்னலிலே
  களை எடுப்புப் பிந்துதடி
  வெள்ளிப் புடி வளையல் - நல்ல
  விடலைப் பிள்ளை கைவளையல்
  சொல்லி அடிச்சவளை - நல்லா
  சுழட்டுதில்ல நெல்களையை
  /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

  கடற்கரைகளில் விடியற்காலையில் கட்டு மரங்களில் புறப்பட்டுக் கடலில் சென்று மீன்பிடித்துக் கொண்டு அந்தியில் திரும்பும் மீனவர்களின் பாடல்களைக் கேளுங்கள்.

  ஏலங்கடி ஏலோ ஏலங்கடி ஏலோ
  கட்டுமரம் ஏறிப்போனா ஐலேசா
       காத்தம்மா துணையிருப்பா ஐலேசா
  காத்தடிச்சாக் கடல் கலங்கும்
       கல்லு போட்டாத் தலை ஒடையும்
  கரையோரம் புன்னமரம் ஐலேசா
       கண்ணாட்டி நிக்குநெழல் ஐலேசா
  காத்திருக்க நா போறேன்
       கவலையெல்லாம் மாறிப்போகும்.
  /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

  3.1.2 நிலப் பாகுபாடு

  கிரீஸ் நாடு மிக அழகான ஒரு நாடு என்று குறிப்பிடுவார்கள். அதற்குக் காரணம் அந்த நாட்டின் நில அமைப்பு என்பார்கள். அதன் கடற்கரை பல வளைவுகளை (Gulf) உடையது. அதன் நதிகளும் தாழ்வான குன்றுகளும், ஓர் அழகான பரப்பளவு உடையதாக அமைந்திருக்கும். ஒரு பகுதியோடு இன்னொரு பகுதி மிக நெருக்கமாக இணைந்திருக்கும். அளவிலே சிறியதாக இருந்தாலும், சுய உணர்வும், சுயசிந்தனையும், தனித்தன்மையும், சுதந்திரமும் அங்குச் சிறப்பாக உள்ளன என்று கூறுவார்கள்.

  அதைப்போல, தமிழ்நாட்டின் நிலப்பரப்பும், பிளவுபட்ட சிறிய மலைகளும், காடுகளும், நதிகளும், கடலும் இயற்கையிலேயே மிக அழகாக அமைந்திருக்கின்றன. கிரீஸைப்போல, சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் உருவாவதற்கும் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு வாய்ப்பு அளித்தது. இந்த நில அமைப்பு பல பிரிவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.

  எனவே, சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர்.

  மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர்.

  பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள்.

  3.1.3 நிலம் சார்ந்த வாழ்வுமுறை

  ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) எனும் நிலவியல் அறிஞர் குறிப்பிடுவார். இக்கூற்று பண்டைத் தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.

  ஐந்து வகை நிலப்பாகுபாட்டுடன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, செய்த தொழில், வழிபாடு ஆகியவை ஹோட்ஜின் கருத்தை உறுதிப்படுத்தும்.
   

 • குறிஞ்சி நிலம்
 • குறிஞ்சி நிலம்

  குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் குறவர், குறத்தியர் என்று அழைத்தனர். இவர்கள் தினை பயிரிடுதல், தேன் எடுத்தல், வேட்டையாடல் போன்ற தொழிலைச் செய்தனர். இவர்களது கடவுள் முருகன்.
   

 • முல்லைநிலம்
 •  

  முல்லைநிலம்

  முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர் எனக் குறிக்கப்பட்டனர். இவர்கள் ஆடு, மாடு மேய்த்தலைத் தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். முல்லை நிலக் கடவுள் திருமால். திருமாலைக் கண்ணன் என்றும் அழைப்பார்கள். கண்ணனாகிய திருமால் ஆயர்குலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறான்.
   

 • மருதநிலம்
 • மருதநிலம்

  மருதநில மக்கள் உழவர், உழத்தியர் என்போர் ஆவர். இந்நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள், நெல், கரும்பு முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். வாணிகத்தையும் செய்தனர். மருத நிலத்தில் விளைந்த நெல் முதலிய தானியங்களைப் பிற நிலத்தைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்து, பண்டமாற்ற வாணிபம் செய்தனர். இந்திரன், மருத நிலக் கடவுள்.
   

 • நெய்தல் நிலம்
 • நெய்தல் நிலம்

  நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களைப் பரதர் என அழைத்தனர். மீன் பிடித்தல், உப்புத் தயாரித்தல், கடல்கடந்து வாணிபம் செய்தல் முதலிய தொழில்களை இவர்கள் செய்தார்கள்.

  நெய்தல் நிலக்கடவுள் வருணன். மழைதரும் கடவுளாக வருணனை வழிபாடு செய்தனர். வருண பகவானால் மழைவரும் என்று நம்பினர். கடல்நீர், சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறி, மழையைத்தரும் மேகம் ஆகிறது. மழை தோன்றுவதற்குக் காரணமாக நெய்தல் நிலம் இருப்பதால், மழைக்கு உரிய காரணகர்த்தாவாக வருணனை வழிபட்டனர்.
   

 • பாலை
 • பாலை

   

  பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் எயினர், எயிற்றியர் என்று கூறப்படுகின்றனர். வழிப்பறி செய்தல் அவர்கள் இயல்பாகச் சுட்டப்படுகிறது. நிலம் வமில்லாது வறட்சியாகும்போது நிலத்தில் வாழ்வோரும் தம் வறுமையின் காரணமாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.
   

  3.1.4 நிலம் சார்ந்த இலக்கியம்

  சங்ககாலத் தமிழ்ப்புலவர்களின் கவிதைகளின் ஊற்று அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த நிலமே. ஐந்து நிலத்திற்கும், ஐந்து வகையான திணையை அமைத்து அவற்றின் அடிப்படையில் தம் பாடுபொருளை வைத்து இலக்கியம் படைத்த பெருமை சங்க காலப் புலவர்களுக்கு உண்டு. முல்லைநில வாழ்க்கையில் மனைவி அந்திப்போதில் கணவன் வரவுக்காகக் காத்திருத்தலையும், குறிஞ்சி வாழ்க்கையில் நள்ளிரவில் காதலர் கூடி மகிழ்ந்திருத்தலையும், மருத வாழ்க்கையில் விடியற் காலையில் கணவனும் மனைவியும் ஊடல் அல்லது மனப்பிணக்குக் கொண்டிருத்தலையும், நெய்தல் வாழ்க்கையில் முன்னிரவில் கணவன் வரவு நோக்கி வருந்தி நிற்கும் மனைவியின் வருத்தத்தையும் இலக்கியங்கள் அழகாகப் பாடுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2017 11:39:23(இந்திய நேரம்)