தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.6 பிற்கால நீதி நூல்களும் பண்பாடும்

  • 3.6 பிற்கால நீதி நூல்களும் பண்பாடும்

    பிற்காலத்தும் பல நீதி நூல்கள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு காலத்திலும் பெரியோர்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பண்பாட்டைக் காக்கும் நீதிகளைக் கூறியுள்ளனர். ஒளவையார், குமரகுருபரர், அதிவீரராம பாண்டியர், சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் இவ்வாறு நீதி நூல்கள் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இயற்றியவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

    3.6.1 நீதி நெறி விளக்கம் காட்டும் பண்பாடு

    நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமரகுருபரர் என்ற புலவரால் இயற்றப்பட்டது. இவர் துறவியாகிச் சைவ மடம் ஒன்றைத் திருப்பனந்தாள் என்ற ஊரில் தோற்றுவித்தார்.

    கற்றார்க்குக் கல்வி நலனே கலனல்லால்
    மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
    முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா ; யாரே
    அழகுக்கு அழகு செய்வார்.

    Audio

    கற்றவர்களுக்கு ஆபரணம் என்பது கல்விதான். அதுவே பெரிய அழகு. அந்த அழகுக்கு மேல் அழகு செய்ய வேண்டுவதில்லை. இது போன்ற நீதிக் கருத்துகளை இந்நூல் கூறுகின்றது. பிறரை இகழாதீர்கள். ஒழுக்கத்தைப் போற்றுங்கள், எல்லோருக்கும் வழங்கி உண்ணுங்கள் என்பன போன்றவை இந்நூலில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன.

    3.6.2 சதகங்கள் காட்டும் பண்பாடு

    சதம் என்றால் நூறு என்று பொருள். சதகம் என்பது நீதி கூறும் நூறு பாடல்கள் கொண்ட நூல் என்பது பொருள். பல சதக நூல்கள் தமிழில் உள்ளன. உயர்ந்த பண்பாட்டு நெறிகளைக் கூறுவன இந்நூல்கள். தாம் அழிந்தாலும் தம் குணம் அழியாதவை எவை என்று குமரேச சதகம் கூறுவதைக் கேளுங்கள்.

    தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும்
         தன்னொளி மழுங்கிடாது
    சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே
         தன்மணம் குன்றிடாது.

    பொங்குமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே
         பொலிவெண்மை குறைவுறாது.
    போதவே காய்ந்துநன் பால் குறுகினாலும்
         பொருந்துசுவை போய்விடாது

    துங்கமணி சாணையிற் தேய்ந்துவிட்டாலும்
         துலங்குகுணம் ஒழியாதுபின்
    தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
         தூயநிறை தவறாகுமோ

    மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை
         மருவுதிண் புயவாசனே
    மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு
         மலைமேவு குமரேசனே.

    Audio

    பெரியோர் இறந்தாலும் அவர்கள் பெருமை மறையாது என்பதற்குப் பல உதாரணங்கள் இதில் தரப்பட்டுள்ளன.

    3.6.3 சிறுவர்களுக்கான நீதி நூல்கள்

    ஒளவையார் பாடிய ஆத்திசூடி இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்டது.

    அறம் செய விரும்பு
    ஆறுவது சினம்
    இயல்வது கரவேல்
    ஈவது விலக்கேல்

    போன்ற தொடர்களைக் கொண்ட எளிமையான நூல் இது. இதனை அடுத்துப் பலப்பல ஆத்திசூடிகள் தோன்றின. முனை முகத்து நில்லேல் என்று ஒளவையார் கூறினார். இதன் பொருள் போர் முனைகளில் போய் நிற்காதே என்பதாகும். பாரதியார் இதனை மாற்றி முனை முகத்து நில் என்று தன் ஆத்திசூடியில் கூறினார். ஒளவையார் பாடிய கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி, அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை போன்றவையும் சிறுவர் கற்பதற்குரிய நல்ல அறநூல்களாகும்.

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
    தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

    என்பன கொன்றை வேந்தன் எனும் நூலில் காணப்படும் செய்திகள் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 12:36:41(இந்திய நேரம்)