தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.4 வைணவம் வளர்த்த பண்புகள்

 • 4.4 வைணவம் வளர்த்த பண்புகள்

  AudioE

  திருமாலிடம் அன்பு பூண்டவர்கள் வைணவர்கள்; அவனே முழுமுதல் தெய்வம் என்ற கருத்துடையவர்கள். உலகம் எல்லாவற்றையும் உயிர்கள் எல்லாவற்றையும் காக்கும் தொழிலைத் திருமால் செய்கிறார் எனக் கூறுகிறது வைணவம். இறைவனிடம் 'நீயே சரணம்' என்று அடைக்கலம் கொண்டால் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடலாம் என்று கூறுகிறது வைணவம். இந்திரலோகத்தை ஆளும் பேற்றைவிடத் திருமாலின் இணையடிகளைத் தொழும்பேறு உயர்ந்தது என்கிறார் ஆழ்வார்.

  பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமலச் செங்கண்
  அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
  இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!

  (நாலா, மர்ரே: 872)

  என்பது தொண்டரடிப்பொடியாழ்வாரின் கூற்றாகும்.

  4.4.1 வைணவம் காட்டும் சமரசம்

  Click here to view big image

  திருமாலும் சிவனும் இணைந்த காட்சி

   

  "அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு" என்பது பழமொழி. இரு சமயங்களுக்கிடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. அறியாதவர்கள் வேறுபாடுகளைக் கற்பித்து மதச்சண்டைகளை உருவாக்கி விட்டனர். ஆழ்வாருக்குத் திருமாலும் சிவபெருமானும் வேறு வேறாகத் தோன்றவில்லை.

  தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
  சூழ் அரவும் பொன்நாணும் தோன்றுமால்
  சூழும்
  திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
  இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

  (நாலா, மர்ரே: 2344)

  என்கிறார் பேயாழ்வார். தாழ்சடை, மழுவாயுதம், அரவு (பாம்பு) ஆகியன சிவபெருமானுக்கு உரியன; நீண்டமுடி, சக்கரம், பொன்நாண் ஆகியன திருமாலுக்கு உரியன. இவையெல்லாம் ஒன்றாகத் தோன்றுகின்றன என்கிறார் ஆழ்வார். இதுவே தமிழர் கண்ட சமரச ஞானம்.

  4.4.2 வைணவ மெய்ப்பொருள்

  Click here to view big image

  உலகத் தோற்றத்திற்கு முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்ற மூன்றாகவும் இருப்பவன் திருமால். ஒரு பானை உருவாவதற்கு முதற்காரணம் மண்; பானையை உருவாக்கும் குயவன் நிமித்த காரணம்; சக்கரம் துணைக்காரணம். இதேபோல உலகம் உருவாக அனைத்துமாகவும் இருப்பவன் திருமால் என்கிறது வைணவம். வைணவத்தில் பக்தி நெறி என்பது விரதம், தவம், தியானம், பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி ஆகியவற்றையெல்லாம் உட்கொண்டது. இந்த நெறி எல்லாராலும் பின்பற்ற முடியாது. எனவே வைணவம் பிரபத்தி நெறி என்ற ஒன்றை வகுத்துத் தந்தது. பிரபத்தி என்றால் சிறந்த பக்தி என்பது பொருள். இந்த நெறிக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. நீராடுதல், மந்திரம் சொல்லுதல் போன்றவையெல்லாம் பிரபத்தி நெறியில் இல்லை.

  புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்
       அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!

  என்ற எளிமையே இறைவனை அடையப் போதுமானது.

  4.4.3 திவ்வியப் பிரபந்தம்

  Nammalvar

  ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடிய நாலாயிரம் பாசுரங்கள் திவ்விய பிரபந்தம் எனப்பெறும். இது திராவிட வேதசாகரம் அதாவது தமிழ் வேதக்கடல் எனப்பட்டது. நாலாயிரத்தில் 1296 பாசுரங்கள் நம்மாழ்வாரால் பாடப்பட்டவை. நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைமையானவர். இவர் பாடிய 1296 பாசுரங்களில் 1102 பாசுரங்கள் திருவாய்மொழி எனப்படும்.

  இதனை,

  "சாந்தியினை நேராக உடைய நல்ல
       சடகோபர் அமுதத்தைத் தாமே உண்டு
  தீந்தமிழ் என்று ஒருகோடி வேதமாகும்
       செய்ய திருவாய்மொழிந்தார் ......"

  என்று பிற நூலும் பாராட்டக் காணலாம். “வடமொழி வேத வேதாந்தங்களில் தோன்றுகிற ஐயந்திரிபுகளைத் திருவாய்மொழியினைக் கொண்டு தெளிகின்றோம்" என்று வேதாந்த தேசிகர் என்ற பேரறிஞர் கூறுகின்றார். இந்தத் திருவாய்மொழிக்கு ஐந்து உரைகள் உள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-10-2017 14:13:17(இந்திய நேரம்)