தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5 வைணவப் பெரியார்கள் வளர்த்த பண்பாடு

 • 4.5 வைணவப் பெரியார்கள் வளர்த்த பண்பாடு

  AudioE

  வைணவப் பெரியார்கள் திருமாலின் அவதாரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். இராம அவதாரத்தையும் கிருஷ்ண அவதாரத்தையும் மனம் குளிரப் பாடுபவர்கள். கொடியவர்களை அடக்கி நல்லோர்களைக் காக்கின்ற இறைவனின் திருக்குணத்தை இவர்கள் பெரிதும் போற்றக் காணலாம். மனிதர்களைப் பாடுவதில்லை என்று உறுதி பூண்ட பெரியோர்கள் இவர்கள்.

  என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்!
  மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்

  (நாலா, மர்ரே: 3212)

  d00204nl.jpg (9143 bytes)

  என்று கேட்கிறார் நம்மாழ்வார். இந்தப் பொருள் எதற்கு? எத்தனை நாளைக்குப் போதும்? என்று கூறி இறைவனைப் பாடி இந்தச் சன்மத்தை அதாவது பிறவியை ஒழித்துக் கொள்வதே நல்லது என்கிறார் அவர். இறைவனையே வணங்கும் பெருமை, அடியார்களின் முன் எளியவராய்ப் பணிந்து வாழும் தன்மை, இறைவனின் அவதாரப் பெருமைகளைப் பேசுதல் ஆகியவற்றை வைணவப் பெரியோர்கள் தம் பண்புகளாகக் கொண்டிருந்தனர்.

  இராமானுஜர் வைணவ சமயத்தை நாடெங்கும் பரப்பியவர். வைணவர்களால் மதிப்புக்குரியவராக வணங்கப்பட்டவர். அவர் ஒருமுறை திருப்பதி சென்றார். திருப்பதி கோயில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த பெரிய திருமலைநம்பி என்ற முதியவர் இராமானுஜரை வரவேற்க ஏழு மலைகளையும் கடந்து கீழே வந்து காத்திருந்தார். இராமானுஜர் அவரிடம் “என்னை வரவேற்க யாராவது ஒரு சிறியவரை அனுப்பியிருக்கக் கூடாதா?" என்று கேட்டார். அதற்குத் திருமலைநம்பி “நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனால் என்னைவிடச் சிறியவர் யாரும் இல்லையே" என்றார். இந்த எளிமை வைணவர்கள் வளர்த்த பண்பாடாகும்.

  4.5.1 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

  Andal
  ஆண்டாள்

  பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெண். அவர்தாம் ஆண்டாள். திருவில்லிப்புத்தூர் நந்தவனத்தில் பெரியாழ்வார் தாம் கண்டெடுத்த குழந்தையைக் கோதை என்று பெயர் சூட்டி வளர்த்தார். இக்கோதையே ஆண்டாள் எனும் ஆழ்வார். பெரியாழ்வார் திருமாலுக்கென்று கட்டி வைத்த மாலையை ஆண்டாள் தான் சூடிக்கொண்டு கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள். ஒருநாள் இதைக்கண்ட ஆழ்வார் ஆண்டாளைக் கோபித்துக்கொண்டார்; மாலை புனிதம் கெட்டுவிட்டது என்றார். ஆனால் திருமால் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே தமக்கு வேண்டும் என்று கேட்டார்.

  d00204pv.jpg (11537 bytes)

  பெரியாழ்வாரும் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையைத் திருமாலுக்குச் சூட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார். இறுதியில் ஆண்டாள் திருமாலோடு இரண்டறக் கலந்தார். பெரியாழ்வார்,

  ஒருமகள் தன்னை உடையேன்
       உலகம் நிறைந்த புகழால்
  திருமகள் போல வளர்த்தேன்
       செங்கண்மால் தான்கொண்டு போனான்

  (நாலா, மர்ரே: 299)

  என்று பாடுகிறார். ஆண்டாளின் திருப்பாவை, தமிழகத்து வீதிகளில், மார்கழி மாதத்தில் பாடப்பெறுகின்றது.

  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
  சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
  ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
  கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
  நாராயணனே நமக்கே பறை தருவான்
  பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

  (நாலா, மர்ரே: 273)

  Audio

  4.5.2 குலசேகரர்

  பன்னிரண்டு ஆழ்வார்களில் மற்றொருவர் குலசேகரர். இவர் சேரமன்னர். திருமாலிடம் பேரன்பு கொண்டவர். திருப்பதி மலைமீது மீனாகவும் வண்டாகவும் குருகுப் பறவையாகவும் நடந்து செல்லும் படியாகவும் விளங்க வேண்டுமென்று நெஞ்சுருகப் பாடும் அவர்,

  Kulasekara Alwar

  "எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே"

  (நாலா, மர்ரே: 1440)

  Audio

  என்று கூறுகிறார். குலசேகரர் ஒருமுறை இராமாயணக் கதை கேட்டுக் கொண்டிருந்தார். காட்டில் இருந்த இராமனோடு போரிடக் கரன் முதலான 14000 வீரர்கள் திரண்டனர் என்று கதை சொல்லும் பாகவதர் சொல்லிக் கொண்டிருந்தார். குலசேகரர் நடப்பது கதை என்பதை மறந்தார். அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கப் போவதாக நினைத்தார்; இராமனைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கருதினார். எனவே தம் அமைச்சரை அழைத்து 'நம் படைகளை உடனே புறப்படச் செய்யுங்கள். இராமனைக் காக்க வேண்டும்' என்று கூறினார். அந்த அளவு பெருமாள்மீது குலசேகரருக்கு அன்பு இருந்தது. தானே தசரதனாக இருந்து அவர் பாடியுள்ள பாடல்கள் கல்லையும் உருக்கிவிடும். இது மட்டுமா? இந்த அரசர் தன்னையே தசரதனாக நினைத்துக் கொண்டு, இராமன் காட்டுக்குப் போவது பற்றிக் கருதினார், அவர் உள்ளம் அழுதது.

  4.5.3 இராமானுஜர்

  வைணவ சமயத்தைப் பிற்காலத்தில் வளர்த்த பெருமை இராமானுஜரையே சாரும். இவர் பெரிய சீர்திருத்தவாதி. இவர் எம்பெருமானார் என்றும் யதிராஜர் என்றும் அழைக்கப்பட்டார். திருக்கோஷ்டியூர் நம்பி என்ற பெரியவர் “யாருக்கும் சொல்லக்கூடாது, நீ மட்டும் கேட்டுக்கொள்" என்று கூறிய நாராயண மகா மந்திரத்தை இராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் மதிலேறி நின்று ஊரார் எல்லாரும் கேட்க உரைத்தார். “குருவாகிய நான் சொன்னதை விட்டு விட்டுத் தவறு செய்த உனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெரியுமா?" என்று கேட்டார் திருக்கோஷ்டியூர் நம்பி. அதற்கு இராமானுஜர் "தெரியும். நான் ஒருவன் நரகத்துக்குப் போனாலும் மகாமந்திரம் கேட்ட எல்லாரும் வைகுந்தமாகிய சொர்க்கத்துக்குப் போவார்களே என்றுதான் அப்படிச் செய்தேன்" என்றார். இராமானுஜர் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்து அவர்களைத் திருக்குலத்தார் என்று அழைத்தார். சமய உலகில் இராமானுஜர் வளர்த்த பண்பாடு மிகவும் போற்றத்தக்கது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:51:48(இந்திய நேரம்)