தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-இந்தியப் பண்பாடு

  • 3.2 இந்தியப் பண்பாடு

    காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் வாழும் இந்திய மக்கள் பல்வேறு மொழியினர்; பல்வேறு மதத்தினர்; பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர். எனினும் அவர்களின் பண்பாட்டில் ஒரு பொதுமை இருந்தது; இருக்கிறது. கணவன் மனைவி என்ற பிணைப்பும், பிள்ளைகளைக் பேணிக் காக்கும் குடும்ப உறவும், திருமணத்தை முறிக்க முடியாத விதியின் விளைவாகக் காணும் கருத்தும், பிறவிகளில் நம்பிக்கையும், அறம் தழுவிய வாழ்க்கைப் போக்கும் இப்பண்பாட்டின் அச்சாணிகள். இந்தப் பண்பாடு பல சிறப்புக் கூறுகளைக் கொண்டது.

    3.2.1 இந்தியப் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள்

    வேற்றுமைகளுக்கிடையில் ஓர் ஒற்றுமை என்ற நிலையில் பல மொழிகளும், பல இனங்களும், பல மதங்களும், பல வாழ்க்கைப் போக்குகளும் நிறைந்த இந்தியா ஒரு பொதுப் பண்பாட்டைக் கொண்டிருந்தது.

    இந்தியப் பண்பாட்டின் கூறுகளை இன, மத, மொழி, கால, இட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான நம்பிக்கைகள், பொதுப்படையான வாழ்க்கை நெறிகள் என்ற இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். வாழ்க்கை நெறிகளுக்கு உட்பட்ட கூறுகளை நம் வசதிக்காகச் சிறு உட்கூறுகளாகக் கொள்ளலாம்.

    பொதுவான நம்பிக்கைகள்

    • நல்வினை, தீவினைகளில் நம்பிக்கை
    • மறுபிறப்புப் பற்றிய எண்ணம்

    வாழ்க்கை நெறிகள்

    குடும்பம்

    • வரையறுக்கப்பட்ட உரிமைகளும், இல்லறக் கடமைகளும் கொண்ட பெண்.
    • தன் விருப்புரிமையுடைய ஆண்.
    • குடும்ப அமைப்பில் பிடிப்பு.
    • கணவன் மனைவி உறவு நிலையானது, பிறவிதோறும் தொடர்வது என்ற கருத்து.
    • பொருள் ஈட்டுவதோடு, பிறர்க்கு உதவுதல், ஒப்புரவு, ஈகை போன்ற பண்புகளுக்கும் வாழ்க்கை இடமளிக்க வேண்டும் என்ற கோட்பாடு.

    சடங்குகளும் நம்பிக்கைகளும்

    • சமயம் சார்ந்த வாழ்க்கைச் சடங்குகளில் பற்றும் விடாப்பிடியும்
    • விதியின் தீர்ப்பு என வருவதை ஏற்றுக் கொள்ளுதல்.
    • காரணத்தை ஆராயாமல் சிலவற்றைப் பாரம்பரிய உணர்வுடன் பின்பற்றும் நெறி.

    சாதியப் பாகுபாடு

    • சாதியப் பாகுபாடுகளைத் தள்ளிவிடாமலும் அவற்றிலேயே மீண்டு விடாத அளவுக்கு அழுந்திவிடாமலும் அமைந்த ஒரு நடுவுநிலை.
    • திருமணம், மகப்பேறு, தெய்வ வழிபாடு, நோன்பு, இழவு, இறந்தார், நினைவு ஆகியவற்றில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றல்.

    பிணி தீர்த்தல்

    • பேய், ஆவி நம்பிக்கை
    செய்வினை, மந்திரித்தல், பில்லிசூனியம் வைத்தல் ஆகியவற்றில் நம்பிக்கை
    • இலை தழை, பட்டை வேர் பிற இயற்கை மூலங்களிலிருந்து மருந்து ஆக்கிக் கொள்ளும் அறிவு.

    சமயம் போற்றல்

    • கோயில்களைச் சார்ந்த வாழ்க்கைப் போக்கு
    • புண்ணியத் தலப்பயணம், புண்ணிய நதிகளில் ஆடுதல்.
    • பெரியோரைப் போற்றுதல், மரியாதை வழக்கங்களைப் பேணுதல்.

    ஆகியன எல்லாம் இந்தப் பொதுப் பண்பாட்டில் அடங்கும்.

    3.2.2 தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள்

    தமிழர்க்கே உரியன என்ற அளவில் சில பண்புகள் மேற்கூறிய இந்தியப் பொதுப் பண்புகளுக்குக் கூடுதலாகக் குறிக்கத்தக்கன.

    1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வதை ஒரு நியதியாகக் கருதுதல்.
    2. கூட்டுக் குடும்ப வாழ்வில் சண்டைகள் சச்சரவுகளுக்கிடையில் அறுந்து போகாத ஓர் இறுகிய உறவுப்பிணைப்பு.
    3. எவ்வளவு தாழ்ந்த வறுமையிலும் விருந்தோம்பும் ஈரம்.
    4. புலால் உண்ணுதல், உயிர்ப் பலியிடல் ஆகியவற்றுக்கிடையிலும் சீவகாருணியத்திற்கும் இடம் கொடுத்தல்.
    5. எந்தச் சூழலிலும் அழிந்து போகாத மனித நேயம்.
    6. சமய சாதி வட்டங்களைத் தாண்டிப் பிறரோடு உறவுக்குக் கைநீட்டும் பண்பு.
    7. தம்முடைய கோட்பாடுகளையே பெரிதென்று வியந்து கொள்ளாத சமரசம்.
    8. நட்பு, காதல், அன்பு, நேயம் ஆகியவற்றுக்காகத் தம்மையே பலி கொடுத்து விடும் தியாகம்.
    9. அடுத்த வீடு, தெரு, ஊர் ஆகியவற்றில் உள்ளவர்களோடு விலகியிருக்க முடியாத ஒட்டுறவு.
    10. மறுமை உலக வாழ்வைவிட இருக்கும் உலக வாழ்வைச் செம்மையாகப் பேணும் மனம்.
    11. வறுமையில் நற்பண்புகளை இழந்து விடாத நிலை

    ஆகியவற்றில் தமிழ்நாடு அதிக அழுத்தம் கொண்டிருந்தது.

    3.2.3 தமிழர் பண்பாட்டில் பிற பண்பாட்டு நுழைவுகள்

    இரண்டாயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் தமிழ்நாட்டில் நுழைந்து தம் சுவடுகளைப் பதித்த அயலகப் பண்பாடுகள் பல. ஆரியப் பண்பாடு, கிரேக்கப் பண்பாடு, பிரெஞ்சுப் பண்பாடு, உருதுப் பண்பாடு, வடஇந்தியப் பண்பாடு, ஆங்கிலப் பண்பாடு எனப் பல பண்பாடுகள் தமிழரிடையே தம் பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அன்றாட வாழ்வில்,

    அதிசயம், ஆச்சரியம், அநீதி, அநியாயம், உபயோகம், கிராமம், சத்து, சாட்சி, தாமதம், சுலபம்
     
    - சமஸ்கிருதம்
    தகராறு, வசூல், லாயக்கு, ரத்து
    மகசூல், முகாம், பக்கிரி, மாமூல், மிட்டாய், டமாரம், சோம்பு, சொக்காய், கொலுசு, பவனி, பவிசு,
    ஒட்டாரம், கண்ணராவி, லாகிரி
     
    - அரபி
    இரவிக்கை, எக்கச்சக்கம்
     
    - தெலுங்கு
    டப்பி, டப்பா, சௌடால், தாயத்து, பேமானி, பேட்டி, போணி, இனாம்,
    கசகசா, கச்சா, கசாப்பு
     
    - இந்தி
    சப்பாத்தி, தமாஷ், திவால், நகாசு, கலாட்டா, ஏலம், சாவி, கோப்பை, சன்னல், அலமாரி
     
    - உருது
    மேசை, கடிதம், கிராதி, மேஸ்திரி, டிக்கெட், டிகிரி, டிபன், சினிமா, ஓட்டல், ஏக்கர், சோப்பு, பேனா,
    பென்சில்
     
    - போர்த்துக்கீசு
    ஈரங்கி, ஐட்டம், ஒரிஜினல்
     
    - ஆங்கிலம்

    போன்ற சொற்கள் இன்று தமிழில் வந்து கலந்து சில சமயங்களில் விலக்க முடியாதனவாகவும் உள்ளன. இச்சொற்கள் பண்பாட்டுப் பாதிப்பையும் காட்டும். ஓட்டல், சோப்பு, சினிமா போன்ற சொற்கள் வெறும் சொற்களாக மட்டும் இல்லை. இவை தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவை. தமிழர் வாழ்வில் ஆழமான பதிவை ஏற்படுத்தி உள்ளவையும் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:03:24(இந்திய நேரம்)