Primary tabs
- 4.1 அகநானூறு
ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. இது அருகிய வழக்காகவே உள்ளது. களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல். களவு, கற்பு என்ற இரு கைகோளிலும் (ஒழுக்கத்திலும்) அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது; இலக்கியத் தரம் மிக்கது.
எட்டுத்தொகை என்ற தொகுப்பில் உள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் முழுமையாக அகம் பற்றியே அமைந்துள்ளன; அகத்தைக் கூறவே எழுந்தன. இருப்பினும் இந்நூலுக்கே அகம் என்ற சொல் கொடுத்து அகநானூறு என்று வழங்கியுள்ளனர். இது இந்நூலில் அகப்பொருள் சிறந்திருத்தலைக் காட்டுகிறது
• நெடுந்தொகை - பெயர்ச் சிறப்பு
இந்நூலுக்குரிய நெடுந்தொகை என்னும் பெயருக்கும் தனிச்சிறப்பு உண்டு. மிக அதிகமான அடிகளைக் கொண்ட நெடும் பாட்டுகள், தனித் தனியாகப் பெயரிடப்பட்டுப் பத்துப்பாட்டு எனப் பெயரிடப்பட்டன. சிறு சிறு பாடல்களின் தொகுப்பே எட்டுத்தொகை எனப்பட்டது. எட்டுத்தொகையில் அகநானூற்றைக் காட்டிலும், பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்களும் மிகுதியான அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டவையாகும். இருப்பினும் அகநானூற்றிற்கே நெடுந்தொகை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 'நெடு' என்ற அடை, அடிகளின் மிகுதியைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது. 'நெடு' என்ற அடைமொழி அகநானூற்றுப் பாடல்களின் பொருட் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.
அகநானூறு மூன்று பெரும் பகுப்புகளை உடையது. இப்பகுப்பு ஐங்குறுநூறுபோலத் திணையையும் பாடல்களின் எண்ணிக்கையையும் கொண்டோ, கலித்தொகை போலத் திணையை அடிப்படையாகக் கொண்டோ பகுக்கப்பட்டது அல்ல. பாடல்களின் நடை அமைப்பைக் கொண்டு பகுக்கப்பட்டதாகும். இதுவும் இந்நூலுக்குரிய தனிச் சிறப்பாகும்.
அகநானூற்றின் பாயிரப் பகுதி (முன்னுரைப் பகுதி) இப்பகுப்பைச் சுட்டியுள்ளது. மூன்று பகுப்பிலும் இடம் பெற்றுள்ள பாடல்கள் எவை என்பதைப் பாயிரத்தைத் தொடர்ந்து வரும் உரைநடைப்பகுதி விளக்கியுள்ளது.
அதாவது, முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரை அமைந்த 180 பாடல்கள் மணிமிடை பவளம் என்றும், இறுதி 100 பாடல்கள் நித்திலக் கோவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன.
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந்தன்ன குன்றம்(14)மணிமிடை பவளம்போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப(304)என்ற அகநானூற்றுப் பாடற் பகுதிகள் மணிமிடை பவளம் என்ற சொல்லாட்சியை உவமைக்காகப் பயன்படுத்தியுள்ளன. இது கொண்டு மூன்று பகுப்புகளும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டுள்ளன என்று உணரமுடிகிறது.
சங்கப் பாடல்களின் முதல்பகுப்பு, பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பதாகும். நெடும்பாடல்கள் பத்து தனித்துக் கூறப்பட்டது. எட்டுத்தொகை நூல்களின் பகுப்பு, பல கூறுகளை உடையது. முதற்பகுப்பு பாடுபொருளை அடிப்படையாகக் கொண்டது. பாடுபொருள்கள் அகம், புறம் என்பனவாகும். பல்வேறு புலவர்களால் பாடப்பட்டு ஆசிரியப்பாவால் அமைந்த நானூறு புறப்பாடல்களின் தொகுப்பு புறநானூறு எனப்பட்டது. பத்துப் புலவர்கள் பாடிய பப்பத்துப் புறப்பாடல்களின் தொகுப்பு பதிற்றுப் பத்து எனப்பட்டது.
பாடுபொருளால் பிரிக்கப்பட்ட நூல்கள், யாப்பு வகையால் வேறு பகுக்கப்பட்டன. ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் என்ற யாப்பு வகைகள் இப்பகுப்பிற்கு உரியவை. பல்வேறு புலவர்கள் பாடிய அகமும் புறமும் தழுவிய பரிபாடல் யாப்பு, பரிபாடல் என்னும் தனி நூலாயிற்று. திணைக்கு ஒரு புலவர் என ஐந்து புலவர்கள் கலிப்பாவில் பாடிய அகப்பாடல்களின் தொகுப்பு திணை முறைவைப்பில் கலித்தொகை எனப்பட்டது.
பாடுபொருள்-யாப்பு எனப் பிரிக்கப்பட்டு, யாப்பு வகையில் மிகுந்து காணப்பட்ட ஆசிரியப்பாக்கள், அடிவரையறையால் பாகுபடுத்தப்பட்டன.
திணைக்கு ஒருவர், நூறு பாடல்கள் என ஐந்து புலவர்கள் பாடிய ஐந்நூறு பாடல்களின் தொகுப்பு ஐங்குறு நூறு எனப்பட்டது. இது மூன்று அடிகள் முதல் ஆறுஅடிகள் வரையிலான பாடல்களைக் கொண்டது. 205 புலவர்கள் பாடிய நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை எனப்பட்டது. 175 புலவர்கள் பாடிய 9அடிகள் முதல் 12 அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு நற்றிணை எனப்பட்டது. 145 புலவர்கள் பாடிய 13 அடிகள் முதல் 31 அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு அகநானூறு எனப்பட்டது.
பல புலவர்கள் பல திணைகளில் பாடிய பாடல்கள் ஒன்றோ பலவோ கொண்ட அகநூல்கள் மூன்று ஆகும். அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பனவாகும். இவற்றுள் அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.
!--s-->1. 3, 5, ............399 எனவரும் பாடல்கள் பாலைத்திணை -200(ஒற்றைப்படை எண்கள் அனைத்தும்)2. 8, 12, .........398 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணை- 80(பின்வருவன தவிர்த்த இரட்டைப்படை எண்கள் அனைத்தும்)4, 14, .................394 எனவரும் பாடல்கள் முல்லைத்திணை- 40(4இல் முடிவன)6, 16, .................396 எனவரும் பாடல்கள் மருதத்திணை - 40(6இல் முடிவன)10, 20,.................400 எனவரும் பாடல்கள் நெய்தல்திணை - 40(0இல் முடிவன)இதுவே அகநானூற்றில் காணப்படும் முறைவைப்பாகும். இச்சிறப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. இம்முறைவைப்பை,
ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறுதலைக் குறிஞ்சிக் கூற்றுஎன்ற பழம்பாடல் குறிப்பிடும்.
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறை, உரிப்பொருள் போன்றவை அகநானூற்றின் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளும் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன.
• உள்ளுறைச் சிறப்பு
உள்ளுறையைப் பயன்படுத்திய அக நூல்களில் அகநானூறு நான்காவது இடத்தில் உள்ளது. மொத்தம் 51 பாடல்களில் உள்ளுறை அமைந்துள்ளது.
குறிஞ்சித் திணையில் 22 பாடல்களிலும் மருதத் திணையில் 14 பாடல்களிலும், நெய்தல் திணையில் 11 பாடல்களிலும், பாலைத் திணையில் 4 பாடல்களிலும் ஆக 51 பாடல்களில் உள்ளுறை இடம் பெற்றுள்ளது. முல்லைத் திணைப் பாடல்களில் உள்ளுறை இடம்பெறவில்லை.
• உரிப் பொருள் சிறப்பு
தொல்காப்பிய அகத்திணை இயலில் ஐந்து திணைகளின் உரிப்பொருளுக்குச் சான்று காட்டியுள்ள உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல்களை மட்டுமே காட்டி உள்ளது இந் நூலுக்குக் கிடைத்த சிறப்பு எனலாம்.
• வரலாற்றுச் சிறப்பு
இந்நூலில் மிகுதியான அளவில் வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 116 பாடல்களில் ஏறத்தாழ 87 அரசர்கள் மற்றும் படைத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஒரே பாடலில் (44) ஒன்பது அரசர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவும் இந் நூலுக்குரிய சிறப்பு ஆகும்.