தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01125-5.5 தோழி

  • 5.5 தோழி

    அகப்பொருள் மாந்தர்களில் முதன்மையான இடம் வகிப்பவள் தோழி ஆவாள். தலைமக்களுக்குக் களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் இடையறாது துணை புரிபவள். செவிலித் தாயின் மகளாகப் பிறந்து, தலைவிக்கு உற்ற துணையாக இருந்து, அவளது வாழ்க்கைப் பயணம் சிறக்கப் பாடுபடுபவள். தலைவன், தலைவி, செவிலி, பாணன் ஆகியோரிடம் தோழி கூற்று நிகழ்த்துவாள்.

    5.5.1 தோழி -> தலைவன்

    தோழி தலைவனுடன் களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் தலைவன், தலைவி இருவருக்கும் இடையே ஒரு பாலம் போன்று உடன் இருப்பாள். தோழி, தலைவனுடன் கூற்று நிகழ்த்துவதே அகநானூற்றில் மிகுதி. களவில் பாங்கியிற் கூட்டம் என்ற பெரும்பகுதியே உண்டு. மதி உடன்பாடு, பகற்குறி; இரவுக்குறிகள், அலர், சேட்படை, மடல்திறம், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, வரைவு கடாஅதல், அறத்தொடு நிற்றல், ஒருவழித் தணத்தல், உடன்போக்கு என்ற நிலைகளில் அவற்றின் உட்கூறுகளில் தோழி கூற்று நிகழ்த்துவாள்.

    இப்பாடத்தில் குறிஞ்சி உரிப்பொருள் பற்றிய விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் (218) தோழி கூற்றாக அமைந்ததுதான்.

    கற்பு வாழ்க்கையில் வினையின் பொருட்டுப் பிரிகின்ற தலைவனைச் செலவழுங்குவித்தலும் (பிரிவைத் தவிர்த்தல்), பரத்தையர் பிரிவு மேற்கொண்டு திரும்பும் தலைவனுக்கு வாயில் மறுத்தலும் வாயில் நேர்தலும் எனத் தோழி கூற்றுகள் நிகழும். செலவு அழுங்குவித்தல் துறையில் தோழி கூற்றாக அமைந்த ஒரு பாடலில் (215), “பாலை நிலத்தைக் கடந்து செல்வோர் அடையும் துன்பங்களை விரிவாக எடுத்துரைத்து, அத்தகைய கடுவழியில் சென்று வெற்றியோடு திரும்பிவா என்று உன்னிடம் சொல்லும் உள்ளத்தின் வலிமை தலைவிக்கு இல்லை” என்று அழகாகச் சொல்கிறாள் தோழி.

    5.5.2 தோழி -> தலைவி

    களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் தோழி தலைவியுடன் கூற்று நிகழ்த்துவாள்.

    களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன், திருமணம் செய்யும் ஏற்பாட்டுடன் தலைவியின் ஊருக்கு வருகிறான். இது வரைவு மலிதல் எனப்படும். “மழை பெய்யாமையால் நாடு வறுமையுற்று ஏர்த்தொழில் இன்றிக் கலப்பைகள் உறங்கிப்போன வறட்சிக் காலத்தில், பெரு மழை பொழிந்து குளங்கள் நிரம்பினால் மக்கள் மனங்களில் எவ்வளவு மகிழ்ச்சி பொங்குமோ அவ்வளவு மகிழ்ச்சியை என் மனத்தில் நிரப்பியது இச்செய்தி” என்கிறாள் தோழி (பாடல் 42). இது 'தலைமகன் வரைவு மலிந்தமையைத் தோழி, தலைமகளுக்குச் சொல்லியது' என்னும் துறையாகும்.

    கற்புக் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கும் போது ஆற்றாமல் தலைவி புலம்புவாள். அவளை ஆற்றுவித்துத் தோழி பேசுவாள்.

    5.5.3 தோழி -> செவிலி

    தோழி, தலைவியின் களவொழுக்கத்தைத் தன் தாயாகிய செவிலியிடம்தான் தெரிவிப்பாள். இது அறத்தொடு நிற்றல் எனப்படும். இத்துறையில் சிறந்த பாடல்கள் அகநானூற்றில் உள்ளன (48, 110, 190).

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:28:11(இந்திய நேரம்)