Primary tabs
-
3.1 வஞ்சி நகரின் சிறப்பு
சேர மன்னர்களின் தலைநகரம் வஞ்சி ஆகும். இதன் சிறப்பினை 41-50 அடிகளில் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. சேர நாட்டின் வளம், அரசியல், மன்னன் குடிமக்களைக் காக்கும் சிறப்பு உள்ளிட்ட செய்திகள் இவ்வடிகளில் கூறப்பட்டுள்ளன.
சேர நாடு வளம் மிக்கது. இந்நாட்டின்கண் ஐந்திணை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) வளமும் நிறைந்து விளங்கியது. இந்நாட்டில் எங்கும் மீன்கள் கொழுத்து விளையாடின. வளவிய இதழை உடைய செங்கழுநீர் மலரை எருமை மாடுகள் மேய்ந்தன. வயிறு நிறைய மேய்ந்த அம் மாடுகள் மிளகுக்கொடி படர்ந்த பலாமர நிழலில் படுத்துத் தூங்கின. அம்மாடுகளின் முதுகை மஞ்சள் செடிகள் தடவிக் கொடுத்தன. காட்டு மல்லிகைச் செடியாகிய படுக்கையின் மேல் அம்மாடுகள் கவலையில்லாது ஆழ்ந்து உறங்கின.
சேர நாடு நீர் வளமும் நில வளமும் நிரம்பியது என்பதை மேற்கண்ட செய்தி வெளிப்படுத்துகிறது. கொழுத்த மீன்கள் விளையாடுவது நீர் வளத்தைச் சுட்டுகிறது. சேர நாட்டுச் செல்வங்களுள் தலைசிறந்தது மிளகு. மிளகுக்கொடி, பலாமரம், காட்டு மல்லிகை, மஞ்சள் என்பன நில வளத்தைக் காட்டுகின்றன. இவ்வளத்தை,
கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயரா,
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குடபுலம்.......................(சிறுபாணாற்றுப்படை 41-46)
(கயவாய் = பெரியவாய் ; பைங்கறி = பசிய மிளகுக்கொடி; பலவு = பலாமரம் ; மயிர்ப்புறம் = மயிர் நிரம்பிய முதுகு ; இளங்கள் = முற்றாத தேன்; மெல்குபு = மென்று ; குளவிப்பள்ளி = காட்டு மல்லிகையாகிய படுக்கை ; பாயல்கொள்ளும் = உறங்கும்)
என்று புலவர் காட்சிப்படுத்துகிறார்.
சேரர்களின் ஆட்சியில் மனிதர்களே அன்றி விலங்குகள் கூட எவ்விதத் துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக இந்நூல் கூறுகிறது.
நாட்டில் எவ்வளவு வளம் இருந்தாலும் அதை அந்நாட்டில் வாழும் உயிரினங்கள் பெற்று இன்பமாக வாழ வழி வகை செய்வது அரசனின் திறம் ஆகும். அரசனின் அறம் தவறாத அரசியலும் எவருக்கும் அஞ்சாத அவனது வீரமும் சேரநாட்டு மக்களே அன்றி விலங்குகள் கூட மகிழ்வுடன் வாழ்வதற்குக் காரணமாயின.
அறநெறி தவறாமலும் வீர உணர்வுடனும் ஓர் அரசன் ஆட்சி செய்தால் அந்நாட்டில் உள்ள உயிரினங்கள் துன்பம் இல்லாமல் இன்பத்துடன் வாழும். இதன் குறியீடு தான் சேர நாட்டின் எருமை துயில் கொண்ட செய்தி.