தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.2 மதுரை நகரின் சிறப்பு

  • 3.2 மதுரை நகரின் சிறப்பு

    பாண்டிய மன்னர்களின் தலைநகரம் மதுரை ஆகும். இதன் சிறப்பினை 51-67 அடிகளில் சிறுபாணாற்றுப்படை எடுத்துக் கூறுகிறது.

    3.2.1 உமணர்

    பாண்டி நாட்டில் கிடைக்கும் பொருள்களில் குறிப்பிடத்தக்கது முத்து ஆகும். சோழ நாடு சோறு உடைத்து என்பதுபோல, பாண்டி நாடு முத்து உடைத்து என்று கூறுவது வழக்கம். பாண்டி நாட்டு முத்துக்கு (கொற்கை முத்து) உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது.

    பாண்டிய அரச மரபினர் பலரும் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று வைத்திருந்தனர். தமிழ்மொழி என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்று கருதினர். அதனால் முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங்களை ஏற்படுத்தினர். அச்சங்கங்கள் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் முழுக் கவனம் செலுத்தின. அச்சங்கங்கள் ஆய்ந்த பழந்தமிழ் நூல்கள் பற்பல. ஆயினும் அவற்றுள் எண்ணில் அடங்காத நூல்கள் அழிந்து போயின.

    சங்கம் கண்ட சிறப்பால் மதுரை மாநகரம் முழுவதும் தமிழ் மணம் கமழ்ந்தது என்று கூறலாம். இங்ஙனம், முத்தையும் முத்தமிழையும் ஒரு சேரப் பெற்ற பெருமைக்கு உரியது பாண்டிய மன்னனின் மதுரை நகரம் ஆகும்.

    3.2.2 வணிகரும் வானரமும்

    பாண்டிய நாட்டில் கிடைத்த மற்றொரு பொருள் உப்பு. கொற்கை மாநகர உப்பு வணிகர் உமணர். இவர்கள் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி ஊர்கள் தோறும் சென்று விற்பர். அப்பொழுது தம் மனைவி மக்களையும் உடன் அழைத்துச் செல்வர். அதுமட்டுமன்றித் தம் குழந்தைகளைப் போல வளர்த்த மந்தியையும் உடன் அழைத்துச் செல்வது உண்டு. அம்மந்தியை ஆடை, அணிகலன்கள் முதலியவற்றை அணிவித்து அலங்காரம் செய்து தம்முடன் அழைத்துச் செல்வர்.

    அம்மந்திகள் அவர்தம் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் முத்துகள் பெய்த கிளிஞ்சல் சிப்பிகளைக் கொண்டு கிலுகிலுப்பை (விளையாட்டுப் பொருள்) ஆட்டி மகிழும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    மூவேந்தர் யாவர்?

    2.

    சேர மன்னர்களின் தலை நகரம் எது?

    3.

    சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மன்னர் யார்?

    4.

    உமணர் என்பதன் பொருள் தருக.

    5.

    உமணர்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதுக.


புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 10:17:11(இந்திய நேரம்)