Primary tabs
-
1.0 பாட முன்னுரை
நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் மூன்றாம் இயல் வரைவியல் ஆகும். அது களவியலுக்கு அடுத்து அமைந்துள்ளது.
களவு வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை - தடைகளை- நீக்கி, காதல் வாழ்வை நிலைபெறச் செய்ய விழையும்போது அதற்குரிய தீர்வாக அமைவதே வரைவு (திருமணம்) ஆகும். அது பற்றிய இலக்கணச் செய்திகளை வரைவியல் வழங்குகிறது.
வரைவியல் என்னும் மூன்றாம் இயலில் இடம் பெறும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இம்முதல் பாடமும் இதனை அடுத்து வரும் ஒரு பாடமும் அமைகின்றன. வரைவியலின் முதல் ஒன்பது நூற்பாக்களை உள்ளடக்கி விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.
(1) வரைவின் இலக்கணம்
(2) வரைவின் இருவகைக் கிளவிகள்
(3) வரைவு மலிதலின் வகை
(4) வரைவு மலிதலின் விரி
(5) அறத்தொடு நிற்றலின் இருவகை
(6) தலைவி அறத்தொடு நிற்கும் கிளவிகள்
(7) பாங்கி அறத்தொடு நிற்கக் காரணம்
(8) செவிலி அறத்தொடு நிற்கும் முறை
முதலான செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.