Primary tabs
-
2.5 வரைதல்
வரைதல் எனப்படும் திருமணம் சார்ந்த சிந்தனைகளையும், அதனை ஒட்டி நிகழும் செயல்பாடுகளையும் விளக்கி உரைத்த காரணத்தாலேயே இவ்வியலுக்கு வரைவியல் என்னும் பெயர் வந்தது. களவியல் கற்பியலாக மாறுவதற்கு இடைப்பட்ட காரண காரியமாக அமைவது வரைவு என்னும் திருமண நிகழ்வே ஆகும். இவ்வரைவு
(1) உடன்போக்காகச் சென்று வரைந்து கொள்ளுதல்.
(2) உடன்போக்கு இடையில் தடைப்பட்டு, மீண்டு வந்து தலைவன் தன் மனையில் வரைதல்.
(3) உடன்போக்கு இடையில் தடைப்பட்டு, மீண்டு வந்து தலைவன் தலைவியின் மனையில் வரைதல்.
என மூன்று நிலைப்பாடுகளை உடையது.
இவற்றுள் தன் மனை வரைதல் என்பதற்கு மட்டும் வகையும், விரிவுக் கிளவிகளும் இங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
உடன்போக்காகச் சென்ற தலைவன் திரும்பி வருவது மீட்சி எனப்படும். அவ்வாறு மீண்டு வந்த தலைவன் தலைவியைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தன் மனையில் திருமணம் செய்து கொள்வது, தன்மனை வரைதல் எனப்படும்.
தன்மனை வரைதலின் வகைகள்
தலைவன் தலைவியைத் தன் மனையின்கண் வரைந்துகொள்ளும் நிகழ்ச்சியில் மூன்று உட்பிரிவுகள் வகைகளாக அமைந்துள்ளன. அவையாவன :
வினாதல்
நற்றாய் “நம் வீட்டிற்கு வந்து தலைவிக்குத் திருமணம் நடத்தும்படியாகத் தலைவனின் நற்றாயிடம் கேட்கலாமா?” என்று செவிலியைப் பார்த்து வினவுதல் வினாதல் எனப்படும்.
செப்பல்
தலைமகன், தலைவியைத் தன் மனையின் கண்ணேயே மணந்து கொண்ட செய்தியைத் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் என்றவாறு ஒருவர் பிறருக்குச் சொல்லுதல் செப்பல் எனப்படும்.
மேவல்
தலைமகன் தன் மனையிலேயே தலைவியை மணந்துகொண்ட செய்தியை ‘உன் உறவினரிடம் கூறுக’ என்று தோழிக்குக் கூறுதல் மேவல் எனப்படும்.
தன்மனை வரைதலின் விரிவுக் கிளவிகள்
வினவுதல், செப்புதல், மேவுதல் என்னும் மூன்று நிலைப்பாடுகளில் நிகழ்ந்த தன்மனை வரைதலின் விரிவுக் கிளவிகளாகப் பலவற்றை நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். அவை யாவும் தன்மனை வரைதல் என்னும் நிகழ்ச்சியின் வகைகளை விளக்குவன. அவையாவன :
(1) தலைவியின் மணவிழாவினைத் தன் மனையின்கண்ணே காணும் வேட்கையுடன் (விருப்பத்துடன்) நற்றாய், ''நம் மனைக்கு அழைத்து வந்து நம் புதல்வியைத் தலைவன் திருமணம் செய்து கொள்ளும்படி அவனுடைய அன்னையரைக் கேட்கலாமா?'' என்று செவிலியிடம் வினவுதல்.
(2) தலைவன் தன் மனைக்கண் மணந்து கொண்ட செய்தியைச் செவிலி தோழி வாயிலாக அறிந்து கொள்ளுதல்.
(3) தான் அறிந்த செய்தியைச் செவிலி நற்றாய்க்குக் கூறுதல்.
(4) தலைவன், தங்கள் வரைவைச் சுற்றத்தவரிடம் சொல்லுமாறு தோழியிடம் கூறுதல்.
(5) அச்செய்தியை "நான் முன்பே சொல்லிவிட்டேன்" என்று தோழி கூறுதல்.
இவ்வைந்தும் தன்மனை வரைதலின் விரிவுகள் ஆகும்.