Primary tabs
-
4.4 தொகுப்புரை
இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.
அகப்பாடல்கள் ஒவ்வொன்றும் பல உறுப்புகளை உள்ளடக்கியதாக அமைகின்றன என்பதைக் கண்டுணர்ந்தோம்.
களவு, கற்பில் எவரெவர் கூற்று நிகழ்த்துவதற்கு உரியவர் என்னும் வரையறையை அறிந்தோம். அவ்வாறே, கூற்றினைக் கேட்போர், கூற்று நிகழும் இடம் - காலம் - கூற்றின் பயன் முதலான உறுப்புளைப் பற்றிய விளக்கங்களைக் கண்டுணர்ந்தோம்.
ஓர் அகப்பாடல், செய்திகளைக் கருத்து வெளிப்பாடாகப் புலப்படுத்துவது இயல்பானது. அதற்கு மேலாக - அதைவிட முன்னதாக - உடல்வழிப் புலப்பாடாக - நகை, அழுகை முதலான உணர்ச்சிகளைப் புலப்படுத்துதல் உண்டு. அது மெய்ப்பாடு எனப்படும் என்னும் கருத்தினை உணர்ந்தோம்.
அகப்பாடல் செய்யுட்களில் சொற்கள் உள்ளது உள்ளபடியே வைத்துப் பொருள் காண்பது இயல்பானது. அதற்கு மாறாகச் சில பாடல்களில் சொற்களை முன்பின்னாகக் கொண்டு கூட்டிப் பொருள்கொள்ளும் முறையும், தேவையும் உண்டு. அதுவே பொருள்கோள் எனப்படும் என்னும் விளக்கத்தை அறிந்துகொண்டோம்.
அகப்பாடல் தலைமக்கள் கூற்று நிகழ்த்தாத சில இடங்களில், தேவை கருதிச் சிறப்புக் கருத்தாகப் பாடல் இயற்றும் கவிஞனே பேசும் இடங்களைத் துறை என்னும் இறுதி அகப்பாட்டு உறுப்பாக வரையறுத்துள்ளனர்.