Primary tabs
-
6.0 பாட முன்னுரை
புறப்பொருள் வெண்பா மாலையின் இறுதித்திணை, பெருந்திணை, கைக்கிளைத் திணை போல அகத்திணையாக இருந்து அகப்புறமாகவும் புறமாகவும் ஆனது பெருந்திணை. இதற்கு உரையாசிரியர்கள் பொருந்தாக் காமம், மடல் ஏறுதல், மூத்த பெண்ணுடன் கூடுதல், மூத்த ஆடவனுடன் கூடுதல், முதிர்ந்த வயதில் காமம் துய்த்தல், கழிகாமம் கொள்ளுதல், விரும்பாதாரை வலிதில் புணர்தல் என்றெல்லாம் பொருள் கூறுகின்றனர். ‘ஏற்றத்தாழ்வான இருபக்க உறவால் உண்டாகும் தாழ்ந்த இன்ப ஒழுக்கம்’ என்றும் விளக்குகின்றனர். பெருவழக்காக இருந்ததால் பெருந்திணை என்று பெயர் பெற்றதாக இளம்பூரணர் கூறுவார். இது பொருத்தமற்ற விளக்கம். நச்சினார்க்கினியர் ஆரியர் கூறும் எண்வகை மணங்களுள் பெரும்பான்மையாக நான்கினைக் கொண்டது என்பதால் பெருந்திணை இப்பெயர் பெற்றது என்பார். இதுவும் பொருத்தமற்ற விளக்கமேயாகும்.
தொல்காப்பியர் கருத்துப்படி பெருந்திணை என்பது காதல் மிகையே ஆகும். பெரும் என்ற அடை மிகுதியையே குறிக்கிறது. மடலேறுதலும், இளமைக்காலம் சென்ற பின்பும் காதல் நுகர்வில் ஈடுபாடு காட்டலும், பிரிவின்போது ஆற்றாது மிக்க காமத்தை வெளிப்படுத்துவதும், பிரிவில் ஆற்றாது மிகுந்த துன்பம் கொள்ளலும் பெருந்திணையாகும். இவற்றைத் தொல்காப்பியர் ஏறிய மடல்திறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் எனக் குறிப்பிடுவார்.
பிற்காலத்தில் இது பொருந்தாக் காமம் என்று கொள்ளப்பட்டது. நம்பி அகப்பொருள் இவ்வாறே குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பா மாலை பெருந்திணையில் பெண்ணின் உணர்வையே மிகுதியாகக் காட்டுகிறது. பெண்பாற் கிளவி, இருபால் கிளவி என்ற பகுதிகளில் இது விளக்கப்படுகிறது. இது தவிரப் பெருந்திணை வென்றி என்ற பகுதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
புறப்பொருள் வெண்பா மாலையில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலான போர்த்திணைகளிலும் வாகை, பாடாண் முதலான போர் தொடர்பான திணைகளிலும் கூறாது விடுபட்ட செய்திகளைப் பொதுவியல் திணை கூறுகிறது. கைக்கிளை, பெருந்திணை என்பவை அகமாக இருந்துபின் புறமான ஆன திணைகள். இவற்றில் பெருந்திணையில் பெண்பால் கூற்று, இருபால் பெருந்திணை என்று தலைவன் தலைவியரின் பெருந்திணை உணர்வுகளைக் கூறுகிறார். இத்துடன் பெருந்திணை வென்றி என்ற பகுதியும் நூலில் இடம்பெறுகிறது. பாடாண் திணையிலும் வாகைத்திணையிலும் கூறப்படாத செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இது ஒழிபு எனத் தரப்பட்டிருக்கிறது. பொதுவியல் போன்றதுதான் இப்பகுதி. இதில் கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல், வாணிக வென்றி, மல்வென்றி, உழவன் வென்றி, ஏறுகோள் வென்றி, கோழி வென்றி, தகர் வென்றி, யானை வென்றி, பூழ் வென்றி, சிவல் வென்றி, கிளி வென்றி, பூவை வென்றி, குதிரை வென்றி, தேர் வென்றி, யாழ் வென்றி, சூது வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி, பிடி வென்றி எனப் பதினெட்டுத் துறைகள் கூறப்பட்டுள்ளன. ஒழிபு எனும் தலைப்பில் தரப்பட்ட இவற்றுக்குக் கொளு கிடையாது. விளக்கம் தரும் வெண்பாக்கள் மட்டுமே உண்டு. பெருந்திணையோடு தொடர்பற்ற இப்பகுதிகள் இப்பாடத்தில் விளக்கப்படவில்லை.
பெண்பாற் கூற்று என்பது பெண்ணின் தனித்த உணர்வுகளைக் கூறுவது, பிறருடைய ஊடாட்டத்தால் ஏற்படும் உணர்வுகளைக் கூறுவது என இருபகுதியாக அமைந்துள்ளதால் பெண்பாற் கூற்று I, பெண்பாற் கூற்று II என விளக்கப்படுகிறது. இதேபோன்று இருபால் பெருந்திணை என்பதும் இருபால் பெருந்திணை I, இருபால் பெருந்திணை II என விளக்கப்படுகிறது.