தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெண்பால் கூற்று - I

  • 6.1 பெண்பால் கூற்று - I

    பெண்கள் தங்கள் வேட்கையை வெளிப்படுத்துதல், தலைவனிடம் அவன் அன்பை இரந்து நிற்றல், வேட்கையுடன் காத்திருத்தல், வருகையை எதிர்பார்த்திருத்தல், தலைவனைக் காணுதற்கு இரவென்றும் பாராமல் புறப்படுதல், தலைவன் செய்யாதனவற்றையும் செய்ததாகச் சொல்லி மகிழ்தல், ஊடல் மிகுதியால் வருந்துதல், மாலைப்பொழுதில் பிரிவால் வாடுதல் முதலானவை தாங்களே கொள்ளும் உணர்வுகள். இவை இப்பகுதியில் விளக்கப்படுகின்றன. வேட்கை முந்து உறுத்தல், பின்நிலை முயறல், பிரிவிடை ஆற்றல், வரவு எதிர்ந்து இருத்தல், வாராமைக்கு அழிதல், இரவுத் தலைச்சேறல், இல்லவை நகுதல், புலவியுள் புலம்பல், பொழுதுகண்டு இரங்கல் ஆகிய துறைகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.

    6.1.1 வேட்கை முந்து உறுத்தல்

    (காம) வேட்கையைத் தெரிவித்தல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    கைஒளிர் வேலவன் கடவக் காமம்
    மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று

    என விளக்குகிறது. ‘கையில் வேலினை ஏந்திய தலைவனிடம் தொடியணிந்த தோளினை உடையாள் தன் வேட்கையைக் கூறுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம்: ‘புலியை ஒத்த வலிமையுடைய தலைவனே! சந்தனம் குங்குமம் பூசப்பட்ட உன் மார்பு எனக்கே உரியதாக வேண்டுமென்று நாள்தோறும் அழுதழுது பொறுக்கமுடியாது வேண்டுகிறேன். வெற்றி வேலினை உடையவனே! நான் உயிர்வாழும் வண்ணம் உன் காதலை அருள்வாயாக!’

    6.1.2 பின்நிலை முயறல்

    (தலைவனிடம் இரந்து அவன்) பின் நிற்றலை மேற்கொள்ளல் என்பது இதன்பொருள். கொளு,

    முன்இழந்த நலன்நசைஇப் பின்நிலை மலிந்தன்று

    என்பது. ‘தலைவனைக் கண்டதால் இழந்த தன் அழகை மீண்டும் பெறவேண்டுமென்று தலைவி, அவன் காதலை இரந்து நிற்றல்’ என்பது இதன்பொருள். ‘மற்போர் செய்து திண்மையடைந்த தோள்களை உடைய வேல்வீரனான மேம்பட்ட இத்தலைவனைக் கண்டு நான் பசலையுற்று என் அழகிய நிறத்தை இழந்தேன்; யானையின்மீது அமர்ந்திருந்த அவனிடம் என்னைக் காணுமாறு கையைக் குவித்து வேண்டி நின்றேன்; அவனோ என்னைப் பார்க்கவே இல்லை’ என்று தலைவி கூற்றாகப் பின்நிலை முயறலை வெண்பா விளக்குகிறது.

    6.1.3 பிரிவிடை ஆற்றல்

    (தலைவனைப்) பிரிந்த காலத்து ஆற்றியிருத்தல் என்பது பொருள். கொளு,

    இறைவளை நெகிழ இன்னாது இரங்கிப்
    பிறைநுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று

    என்று விளக்குகிறது. 'முன்கையில் உள்ள வளையல்கள் கழலும் வண்ணம் வருந்தி, பிறை நுதலினை உடையாள் தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றியிருத்தல்’ என்பது இதன் பொருள். ‘வளையல்கள் கழன்று செல்லட்டும்; ஊர் என்னைப் பற்றி அலர் தூற்றட்டும்; ஆயினும் தாழை இதழ்கள் சங்குபோல் எங்கும் பூக்கும் கானலின் தலைவன், இந்த மயக்கம் தரும் மாலை நேரத்தில் என் நெஞ்சிலே நிலைபெற்று இருக்கிறான்.’

    ஓடுக கோல்வளையும் ஊரும் அலர்அறைக
    தோடவிழ் தாழை துறைகமழக் - கோடுடையும்
    பூங்கானல் சேர்ப்பன் புலம்புகொள் மால்மாலை
    நீங்கான்என் நெஞ்சத்துள் நின்று

    என வெண்பா விளக்குகிறது. தலைவனை நினைத்துக் கொண்டே தலைவி ஆற்றியிருக்கும் தன்மை இதில் புலப்படுகிறது.

    6.1.4 வரவு எதிர்ந்திருத்தல்

    (தலைவன்) வருகையை எதிர்நோக்கியிருத்தல் என்பது இதன்பொருள். கொளு,

    முகைபுணர முறுவல் முள்எயிற்று அரிவை
    வகைபுனை வளமனை வரவுஎதிர்ந் தன்று

    என விளக்கமளிக்கிறது. ‘முல்லை அரும்பு போன்ற பற்களையுடையாள், தன் பெரிய செல்வ மனையில் தலைவனது வருகையை எதிர்நோக்கியிருத்தல்’ என்பது இதன் பொருள். ‘நெஞ்சே! காமமாகிய பெரிய கடலை நீந்துவதற்குத் தலைவனொடு படுக்கையில் சேர்ந்திருத்தல் என்னும் தெப்பத்தைத் துணையாகக் கொள்ளவேண்டும். அதற்காகத் தலைவனிடம் வேண்ட நீ விரைந்து செல்ல மாட்டாய்! தலைவன் இங்கு வருவதற்கும் நினைக்கமாட்டாய் ; உன் மயக்கம் நீங்கிச் செயல்படுவாயாக!’ என்று வெண்பா அழகுற அவள் தவிப்பை விளக்குகிறது.

    6.1.5 வாராமைக்கு அழிதல்

    (தலைவன்) வாராததால் வருந்துதல் என்பது இதன் பொருள். கொளு,

    நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட
    வடிவேல் அண்ணல் வாராமைக்கு அழிந்தன்று

    என விளக்கமளிக்கிறது. ‘மூங்கில் தோள்களையுடையாள் தலைவனை எதிர்பார்த்து இருக்கையில் எதிரான நிமித்தத்தால் அவன் வாரான் என வருந்துதல்’ என்பது இதன்பொருள். ‘அருவி ஆரவாரித்து விழும் மலைப்பகுதியில் மயக்கம்தரும் மாலை வேளையில் என் காதலன் வாரான் போலும்; என் பெரிய கண்கள் வலப்பக்கம் அல்லவா துடிக்கின்றன!’ என்று வெண்பா இந்நிலையை விளக்குகிறது. அன்புடையாரின் வரவுக்கு வரும் தடைகளை எண்ணித் துன்புறும் நிலை இதில் விளக்கப்படுகிறது.

    6.1.6 இரவுத் தலைச்சேறல்

    இரவிலே (தலைவனைக் காணப்) புறப்படுதல் என்று பொருள். கொளு இதனை

    காண்டல் வேட்கையொடு கனையிருள் நடுநாள்
    மாண்ட சாயல் மனைஇறந்து அன்று

    என விளக்குகிறது. ‘தலைவனைக் காணவேண்டுமென்ற ஆசையால் இருள் செறிந்த நள்ளிரவில் மென்மையான இவள் தன் வீட்டினின்றும் புறப்படுதல்’ என்பது இதன் விளக்கம். இதற்கான வெண்பா,

    பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன்
    பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க்
    கழிகாமம் உய்ப்பக் கனைஇருட்கண் செல்கேன்
    வழிகாண மின்னுக வான்

    என அழகுறப் புலப்படுத்துகிறது; ‘வீரமுரசு கொட்டுவது போல அருவி பாறையில் மோதி ஒலிக்கும் நாடனுடைய மார்பினைத் தழுவ என் ஆசையே துணையாகக் கொண்டு இருளில் செல்கிறேன்; எனக்கு வெளிச்சம் தரும் வகையில் மேகம் மின்னட்டும்!’ என்று தலைவி கூறுவதை வெண்பா உணர்த்துகிறது.

    6.1.7 இல்லவை நகுதல்

    இல்லாதனவற்றைச் சொல்லிச் சிரித்தல் என்பது இதன் பொருள். கொளு,

    இல்லவை சொல்லி இலங்குஎயிற்று அரிவை
    நல்வயல் ஊரனை நகைமிகுத்து அன்று

    என விளக்கமளிக்கிறது. ‘அழகிய பற்களை உடைய பெண் உள்ளன அல்லாதவற்றை உரைத்து வயல்கள் சூழ்ந்த ஊரனை நகைத்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தலைவி கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது; ‘இளம் மார்பினை உடைய பெண்கள் தழுவ உன் பூமாலை வாடிய தோற்றம் சிரிப்பைத் தருதலின், உன்னைச் சேரவேண்டாம் எனக் கருதினாலும் தலைவனே உன்னோடு ஊடேன்; ஏனெனில் உன்னுடன் ஊடினால் என்னால் தாங்க இயலாது.’

    6.1.8 புலவியுள் புலம்பல்

    ஊடலால் வருந்துதல் என்பது இதன் பொருள். கொளு இதனை,

    நல்வளை மடந்தை நல்தார் பரிந்து
    புலவி ஆற்றாள் புலம்புஉற்று அன்று

    என விளக்குகிறது. ‘அழகிய வளையல்களை அணிந்த பெண், ஊடலால் தலைவனின் மாலையை அறுத்து ஆற்றாளாய்த் தனிமையுறுதல்’ என்பது பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘வேலினை உடைய தலைவன் அவளது ஊடலைத் தணிக்க வணங்கியும், தன் சினத்தை அடக்காதவளாய் அவனுடைய மாலையை அறுத்து எறிந்து அதனால் ஏற்பட்ட துயரத்தால் அவள் கண்கள் கண்ணீரில் மிதக்கின்றன.’

    6.1.9 பொழுதுகண்டு இரங்கல்

    (மாலைப்) பொழுதைக் கண்டு வருந்துதல் என்பது இதன் பொருள். இதற்குக் கொளு,

    நிற்றல் ஆற்றாள் நெடிதுஉயிர்த்து அலமரும்
    பொன்தொடி அரிவை பொழுதுகண்டு இரங்கின்று

    என விளக்கம் தருகிறது.

    கழலும் பொன்வளையல் அணிந்த தலைவி மாலைப் பொழுதைக் கண்டு உயிர் போகுமாறு ‘பெருமூச்செறிதல்’, வருந்துதல் என்பது இதன்பொருள்.

    வெண்பா தரும் விளக்கம் : ‘கைகளிலிருந்து வளையல்கள் கழலுகின்றன; மைபூசிய கண்கள் கண்ணீரைச் சொரிதலையும் நிறுத்தவில்லை ; கதிரவன் மறைந்த இம்மாலைப் பொழுதில் காதல்நோய் மிகுந்து என் உயிர் கரைந்து வருந்தும்.’

புதுப்பிக்கபட்ட நாள் : 07-11-2017 13:15:50(இந்திய நேரம்)