தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இருபால் பெருந்திணை - I

  • 6.3 இருபால் பெருந்திணை - I

    தலைவன் தலைவியைப் பிரிய மனமின்றித் தன் பயணத்தைத் தவிர்த்தல், தலைவியின் காதலைப் பெற மடல் ஊர்தல், தோழி தலைவிக்காகத் தலைவனிடம் தூதாகச் சொல்லுதல், தலைவியின் துயரைத் தலைவனுக்குக் கூறுதல், தலைவியின் நிலைகண்டு தோழி சோர்தல், தலைவன் வரும் காலம் அன்று என மயங்குதல், வேட்கை மிகுதியைத் தலைவி கூறுதல் ஆகிய இருபால் சார்ந்த உணர்வுகள் இப்பகுதியில் கூறப்படுகின்றன. செலவு அழுங்கல், மடல் ஊர்தல், தூது இடை ஆற்றல், துயர் அவற்கு உரைத்தல், கண்டு கைசோர்தல், பருவம் மயங்கல், பெண்பால் கிளவி ஆகிய துறைகள் இப்பகுதியில் அடங்குகின்றன.

    6.3.1 செலவு அழுங்கல்

    போதலைத் தவிர்த்தல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    நிலவுவேல் நெடுந்தகை நீள்கழை ஆற்றிடைச்
    செலவுமுன் வலித்துச் செலவுஅழுங் கின்று

    என்பது. ‘நிலவு போல் ஒளிவிடும் வேலினையும் பெரும் மேம்பாட்டினையும் உடைய தலைவன் உயர்ந்த மூங்கில்கள் நிறைந்த வழியில் போகக் கருதிப் பின்னாப் போதலைத் தவிர்த்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம்: ‘மணம் கமழும் நெற்றியையுடைய தலைவி நடுங்கிப் பீர்க்கம்பூப் போலப் பசப்பு உற்று மெலிந்து வருந்துதலைத் தவிர்க்கும் வண்ணம், கொடிய அம்பினையுடைய வேடர்கள் இருக்கும் உயர்ந்த மலை வழியில் செல்ல வேண்டாம். போதலைத் தவிர்ப்பாய் நெஞ்சே !’

    6.3.2 மடல் ஊர்தல்

    மடல் ஏறுதல் என்பது இதன் பொருள் (மடல் மாவைச் செலுத்துதல்). இதன் கொளு,

    ஒன்றுஅல்ல பலபாடி
    மன்று இடை மடல் ஊர்ந்தன்று

    என விளக்கம் அளிக்கிறது. ‘ஒன்று அன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின் நடுவே மடல்மாவைச் செலுத்துதல்’ என்பது பொருள். மடல் ஏறும் தலைவன் கூற்றாக வெண்பா அமைந்துள்ளது : ‘மான் போன்ற பார்வையை உடையவளின் மிகுந்த அழகைக் கொண்டாடி அம்பத்திலே நான் பனை மடலில் குதிரை செய்து மடல் ஏறக் கருதியதால், காமன் தன் வெற்றிக்கொடியை உயர்த்துகிறான்’.

    6.3.3 தூது இடை ஆடல்

    தூது செல்லுதல் என்பது பொருள். கொளு இதற்கு,

    ஊழி மாலை உறுதுயர் நோக்கித்
    தோழி நீங்காள் தூதிடை ஆடின்று

    என விளக்கமளிக்கிறது. காதலில் ஏங்கும் தலைவிக்கு மாலைக்காலம் ஊழி போல் தோன்றித் துன்புறுத்த அதனைப் பார்த்த தோழி தலைவனிடத்தே தூதாகிச் செல்லுதல்’ என்பது இதன் பொருள். தலைவனிடம் தூதுரைக்கும் தோழி கூற்றாக வெண்பா விளக்கமளிக்கிறது : ‘வண்டுகள் மொய்க்கும் மாலை அணிந்த மலைபோன்ற மார்பனே உன்னை வணங்கித் தூதுரைக்கின்றேன் ; இந்த வாள் போன்ற மாலை வேளையிடமிருந்து அவள் பிழைக்க வேண்டும். உன் தேரினைச் செலுத்துவாயாக’.

    6.3.4 துயர் அவற்கு உரைத்தல்

    (தலைவியின்) துயரை அவனுக்குக் (தலைவனுக்கு) கூறுதல் என்பது இதன் பொருள். கொளு,

    மான்ற மாலை மயில்இயல் வருத்தல்
    தோன்றக் கூறித் துயரவற்கு உரைத்தன்று

    என விளக்குகிறது. ‘மயில் போன்ற பெண்ணை மயக்கம் தரும் மாலைக்காலம் வருத்துதலைத் தோழி தலைவனுக்குச் சொல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : வேலினையுடையவனே! நெஞ்சில் துயரம் மிகத் தலைவி இந்த மாலைவேளையை இகழ்கிறாள் ; இந்த இருள்மிக்க மாலை வெள்ளத்தைக் கடக்க உன் மார்பினைத் தெப்பமாகக் கொடுத்தால் அவள் உயிர் பிழைப்பாள்’.

    6.3.5 கண்டு கை சோர்தல்

    (தலைவியின் நிலை) கண்டு செயலறுதல் என்பது இதன் பொருள். கொளு,

    போதார் கூந்தல் பொலம்தொடி அரிவை
    காதல் கைம்மிகக் கண்டுகை சோர்ந்தன்று

    என விளக்குகிறது. ‘மலர்க்கூந்தலையும் வளையலையும் உடைய தலைவியின் அன்பு எல்லை மீறிச் செல்லக் கண்ட தோழி தன் செயலில் சோர்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தோழி கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது : ‘ஆம்பல் தண்டு போன்ற வளையல் கழலும் ; கயல்போலும் விழிகளும் துயில் இழந்தன ; மூங்கிலைவிட அழகுவாய்ந்த தோளினை உடையாள், கடற்கரைச் சோலை தரும் தனிமையில் என்ன ஆவாளோ?’

    6.3.6 பருவம் மயங்கல்

    (தலைவன் வரும்) காலம் அன்று என வருந்துதல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    உருவ வால்வளை உயங்கத் தோழி
    பருவம் மயங்கிப் படர்உழந்தன்று

    என்பது. ‘அழகிய வளையலையுடைய தலைவி வருந்தத் தோழி இது (தலைவன் வருகைக்கு) உரிய காலம் அல்ல என்று மருண்டு வருத்தமுறுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : மூங்கில் தோள்களைப் பிரிந்து சென்ற தலைவர் என்னை நினைத்து வரும் காலம் இல்லையோ? அல்லது உரிய காலம்தானோ? கொன்றைக் காடெல்லாம் பொன்போல் பூத்திருக்கிறது ; அழகிய மயிலும் மலையிடத்தே அகவுகிறது’. இத்துறைக்கு இன்னுமொரு விளக்கமும் உள்ளது. அது ‘தலைவன் வரும் காலம் அன்று என்று தலைவி தெளிதல்’ என்பது. இதற்கான கொளு,

    ஆங்கவர் கூறிய பருவம் அன்றுஎனத்
    தேன்கமழ் கோதை தெளிதலும் அதுவே

    என்பது. ‘மயில் அகவியது ; சோலை மலர்கள் தேன்துளியைச் சிதற, முல்லையும் தோன்றியும் கார்காலமெனக் கருதித் தவறாகப் பூத்துவிட்டன ; தலைவர் வரும் காலம் இது அன்று’ என்பது வெண்பா தரும் விளக்கம்.

    6.3.7 ஆண்பால் கிளவி

    (வேட்கை மிகுந்து) தலைவன் சொல்லுதல் என்பது இதன் பொருள். இதற்கான கொளு,

    காமுறு காமம் தளைபரிந்து ஏங்கி
    ஏமுற்று இருந்த இறைவன் உரைத்தன்று

    என்பது. ‘வேட்கை மிகும் ஆசை எல்லை கடந்துவிடக் காதல் ஏக்கமுற்று மயங்கியிருக்கும் தலைவன் சொல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா இதனை நயமுற விளக்குகிறது. ‘இரண்டு கயல்களையே கண்களாகக் கொண்ட தலைவியைத் தழுவக் கருதிய எனக்குப் பகலிலும் இரவிலும் மகிழ்ச்சி இல்லாமல் போனது. ஒருவேளை (தலைவியின் முகம் போன்ற) நிலவைக் கண்டால் நான் பிழைத்திருக்கக் கூடும்.’ தலைவன் கூற்றில் அவனது வேட்கை வெளிப்படுகிறது.

    6.3.8 பெண்பால் கிளவி

    (வேட்கை மிகுந்து) தலைவி சொல்லுதல் என்பது பொருள். இதன் கொளு,

    வெள்வளை நெகிழவும் எம்உள் ளாத
    கள்வனைக் காணாதுஇவ் ஊர்எனக் கிளந்தன்று

    என்பது. காதல் ஏக்கத்தால் வளையல் கழலவும், ‘என்னை நினைக்காமல் இருந்து என் வளையல்களைக் கவர்ந்தவனை இந்த ஊர் அறியவில்லை’ எனத் தலைவி சொல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா இதனை அழகுற விளக்குகிறது : ‘இந்த ஊர் வானகத்திலுள்ள நிலவில் கானகத்து முயலையே காணும்; ஆனால் என் வளையல்கள் கழலக் காரணமானவனைக் காணமாட்டாது’.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-11-2017 13:09:00(இந்திய நேரம்)