தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சீர்க்கும் தளைக்கும் புறனடை

  • 5.4 சீர்க்கும் தளைக்கும் புறனடை

    பாக்களிலும் பாவினங்களிலும் எவ்வெச் சீர்கள், தளைகள் வரலாம், எவையெவை வரலாகாது என்னும் இலக்கணங்கள் செய்யுளியல் உரையில் சொல்லப்பட்டுள்ளன. செய்யுளியல் பாடத்தில் அவை சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன. அச்செய்திகளை நூலாசிரியர் அமிதசாகரர் இந்த ஒழிபியல் நூற்பாவில்தான் விளக்குகிறார்.

    5.4.1 கலிப்பா

    நேரீற்றியற் சீரும் (நேர் ஈற்று இயற்சீர்) (தேமா, புளிமா எனும் மாச்சீர்கள்) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கனி எனும் சீர்கள்) கலிப்பாவில் வாரா. இவையொழிந்த எல்லாச் சீர்களும் கலிப்பாவில் வரும். கலித்தளையுடன் பிற தளைகளும் கலிப்பாவில் மயங்கி வரும்.

    மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவில் நேரீற்றியற்சீரும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் அருகிவரும், வெண்கலியுள் நேரீற்றியற்சீர் வரும் எனும் செய்திகள் செய்யுளியல் உரையில் சொல்லப்பட்டிருப்பதை இங்குச் சொல்லப்படும் புறனடைக்குப் புறனடையாக நினைவில் கொள்ள வேண்டும்.

    எடுத்துக்காட்டு :

    குடநிலைத் தண்புறவில் கோவலர் எடுத்தார்ப்ப
    தடநிலைப் பெருந்தொழுவில் தகையேற மரம்பாய்ந்து
    வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்
    கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
    எனவாங்கு
    ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்
    கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.

            - (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (குடநிலை = கண்ணன் ஆடிய குடக்கூத்து ; தடநிலை = பெரிய ; தகை ஏறு = காளை ; ஒரீஇ = நீங்கி ; ஏறப்போய் = பாய்ந்து சென்று ; இரிய = அஞ்சி ஓட ; ஆன் = பசு ; முனையும் = செல்லும்)

    மேற்காட்டிய தரவு     கொச்சகக் கலிப்பாவில் நேரீற்றியற்சீரும், நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வரவில்லை. நிரையீற்று இயற்சீர் (குடநிலை, தடநிலை, கோவலர்), வெண்பாவுரிச்சீர் (தண்புறவில், எடுத்தார்ப்ப, தேறப்போய்), நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர் (வீங்-கு-மணி = தேமாங்கனி) ஆகிய சீர்கள் வந்துள்ளன.

    வெண்டளை
    -

    (குடநிலைத் - தண்புறவில் > விளமுன் நேர் > இயற்சீர் வெண்டளை ; கயிறொரீஇத் - தாங்குவனத் > காய்முன்நேர் > வெண்சீர் வெண்டளை)

    ஆசிரியத்தளை
    -

    (கோவலர்-எடுத்தார்ப்ப > விளமுன்நிரை > நிரை யொன்றாசிரியத்தளை)

    கலித்தளை
    -

    (பெருந்தொழுவில்-தகையேறு> காய்முன்நிரை> கலித்தளை)

    வஞ்சித் தளை
    -

    (வீங்குமணிக்- கயிறொரீஇ > ஒன்றிய வஞ்சித்தளை)

    எனப் பல தளைகளும் மயங்கி வந்துள்ளன.

    5.4.2 ஆசிரியப்பா

    (கருவிளங்கனி, கூவிளங்கனி) வாரா. ஏனைய எல்லாச் சீர்களும் வரும். ஆசிரியத் தளைகளுடன் பிற தளைகளும் மயங்கி வரும்.

    எடுத்துக்காட்டு :

    சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
    பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
    கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
    போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ
    ஊர்கொள வந்த பொருநனொ
    டார்புனை தெரியல் நெடுந்தகை போரே -

                         (புறநானூறு, 82)

    (சாறு = விழா ; தலைக்கொண்டென = தொடங்க ; பெண் = மனைவி ;மாரி = மழை ; ஞான்ற ஞாயிறு = ஞாயிறு மறைய; நிணக்கும் = பின்னும் ; இழிசினன் = புலையன் ;போழ்தூண்டு ஊசி = வாரைச் செலுத்தும் ஊசி ; பொருநன் = போரிடுபவன்; தெரியல் = மாலை)

    மேற்காட்டிய ஆசிரியப்பாவில், பட்ட, மாரி, ஞான்ற, நினைக்கும், ஊர்கொள எனும் ஆசிரிய உரிச்சீர்களும் விரைந்தன்று என வெண்பா உரிச்சீரும் சாறுதலை (சா-று-தலை) என நேர்நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் வந்துள்ளன. நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீர் வரவில்லை.

    ஆசிரியத் தளைகளும் (பட்ட - மாரி> நேரொன்றாசிரியத் தளை ; ஆர்புனை - தெரியல் > நிரையொன்றாசிரியத் தளை), வெண்டளைகளும் (கட்டில்-நிணக்கும் > இயற்சீர் வெண்டளை ; ஞாயிற்றுக் கட்டில் > வெண்சீர் வெண்டளை), வஞ்சித் தளையும் (சாறுதலைக் - கொண்டென > ஒன்றாத வஞ்சித்தளை) வந்துள்ளன.

    5.4.3 வெண்பா

    ஆசிரியம், கலி, வஞ்சி ஆகிய பாக்களில் அவற்றுக்குரியவை எனச் சொல்லப்பட்ட சீர்களும் தளைகளும் அல்லாத பிற சீர்களும் தளைகளும் மயங்கி வருமென மேலே கண்டோம். ஆனால் வெண்பாவில் மட்டும் அதற்குரியதல்லாத வேறு சீரும் (வஞ்சியுரிச்சீர்கள்), வேறு தளையும் (வெண்டளையல்லாத வேறு தளைகள்) கலக்கக் கூடாது. கலந்தால் செப்பலோசை கெட்டு வெண்பா இலக்கணம் சிதையும். (இந்தக் கருத்து செய்யுளியலில் வெண்பாப் பற்றிய இலக்கணத்தில் முன்பே சொல்லப்பட்டுள்ளது.)

    ஆக, சீர் தளை இலக்கணத்தைப் பொறுத்தவரை வெண்பாவுக்குப் புறனடை எதுவும் இல்லை.

    கனிச்சீர் வெண்பாவில் வருவது தவறு என்பதே இலக்கண, இலக்கிய ஆசிரியர் அனைவரின் கருத்தும் ஆகும்.

    5.4.4 வஞ்சிப்பா

    கலிப்பா, ஆசிரியப்பா ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட மிகச் சில சீர், தளை வரையறைகள் கூட வஞ்சிப்பாவுக்கு இல்லை. எல்லாச் சீரும் எல்லாத் தளையும் வஞ்சிப்பாவில் வரும். பிற பாக்களில் பெரும்பாலும் வாராத பொதுச்சீர்கள் கூட (நாலசைச்சீர்) வஞ்சிப்பாவில் வரும் என்பதை உறுப்பியல் பாடத்தில் படித்தீர்கள்.

    எடுத்துக்காட்டு :

    மண்டிணிந்த நிலனும்
    நிலனேந்திய விசும்பும்
    விசும்புதைவரு வளியும்
    வளித்தலைஇய தீயும்
    தீமுரணிய நீருமென்றாங்
    கைம்பெரும் பூதத் தியற்கை போல

                  - (புறநானூறு, 2)

    (நிலன் ஏந்திய விசும்பு = நிலத்தின் மேல் ஓங்கிய ஆகாயம் ;தைவரு = தடவுகிற ; வளி = காற்று ; தலைஇய = தொடர்புடைய ; முரணிய = மாறுபட்ட)

    மேற்காட்டியவை வஞ்சி அடிகள். புறநானூற்று ஆசிரியப் பாவின் தொடக்கத்தில் இவை வருகின்றன. இவ்வஞ்சி யடிகளில் நிலனும், விசும்பும், வளியும், தீயும் ஆகியவை நேரீற்று இயற்சீர்கள் ; மண்டிணிந்த - வெண்பாவுரிச்சீர் ; நிலனேந்திய , தீ முரணிய என்பன வஞ்சியுரிச்சீர்கள். விசும்-பு-தை-வரு, வளித் - தலை- இ - ய என நாலசைச் சீர்களும் வந்துள்ளன.

    மண்டிணிந்த
    -
    நிலனும் > கலித்தளை
    நிலனேந்திய
    -
    விசும்பும் > ஒன்றிய வஞ்சித்தளை
    தீ முரணிய
    -
    நீரும் > ஒன்றாத வஞ்சித்தளை
    நிலனும்
    -
    நிலனேந்திய > இயற்சீர் வெண்டளை
    தீயும்
    -
    தீ முரணிய > நேரொன்றாசிரியத் தளை

    இவ்வாறு எல்லாத் தளைகளும் மயங்கி வந்துள்ளன.

    5.4.5 பாவினங்கள்

    செய்யுளியலில் பாவினங்களின் இலக்கணம் படித்தபோது அவற்றுக்கு அடி எண்ணிக்கையும், சீர் எண்ணிக்கையுமே இலக்கணங்களாகச் சொல்லப்பட்டன என்பதைப் பார்த்திருப்பீர்கள். சீர் வரையறை இல்லை என உரையாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். எந்தச் சீரும் வரலாம் எனும்போது எந்தத் தளையும் வரலாம் என்பதுதானே புலப்படுகிறது அல்லவா ! அதனை ஒழிபியலில் காரிகையாசிரியரும் உரையாசிரியரும் வெளிப்படையாகச் சொல்கின்றனர்.

    ‘முழங்குதிரைக் கொற்கை வேந்தன். . . . .’ எனத் தொடங்கும் வெண்டுறையில் (பார்க்க, இணைய நூலகம் -செய்யுளியல் வெண்பாவின் இனங்கள்)

    முழங்குதிரை, வழங்குதல் என்பன வஞ்சியுரிச்சீர்கள்.

    கோமான், பாடி > இயற்சீர்கள்
    முழுதுலகம் > வெண்சீர்
    முழங்குதிரைக் கொற்கை வேந்தன் > ஒன்றாத வஞ்சித்தளை
    கைவேல் - பாடி > ஆசிரியத்தளை
    பாடிக் - கலங்கிநின் > இயற்சீர் வெண்டளை
    பொலங் கொள்பூ - தடங்கட்கே > கலித்தளை

    இவ்வாறு எல்லாச் சீரும் தளையும் மயங்கி வந்துள்ளன.

    நூற்பாவின் பொருள் :

    மாச்சீர்கள் கலிப்பாவில் வாரா ; விளங்கனிச் சீர்களும் வாரா ; ஆசிரியப்பாவிலும் விளங்கனிச் சீர்கள் வாரா. அல்லாத எல்லாச் சீர்களும் எல்லாப் பாவிலும், பாவினத்திலும் வரும். தளையும் அவ்வாறே. எல்லாத் தளையும் எல்லாப் பாக்கள், பாவினங்களில் வரும். ஆனால் வெண்பாவில் கனிச்சீர் வாரா ; வெண்டளை தவிரப் பிற தளைகள் வாரா.

    மாணவர்களே !

    மாச்சீருக்கும் விளங்கனிச்சீருக்கும் இங்குச் சொல்லப்பட்ட இலக்கணங்கள் முன்பு நூலாசிரியரால் சொல்லப்படாத புதிய செய்திகளே. தளை பற்றிய இலக்கணமும் புதிய செய்தியே. உறுப்பியல், செய்யுளியல் நூற்பாக்களை மீண்டும் படித்து இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    ஒழிபியலில் சொல்லப்படும் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் யாவை?
    2.
    சீரும் தளையும் சிதையுமானால் குற்றியலிகரமும் குற்றியகரமும் எவ்வாறு அலகிடப் பெறும்?
    3.
    அருளல்ல - தியாதெனில் - இதனைப் புளிமாங்காய் - கருவிளம் > கலித்தளை என அலகிடுவது சரியா?
    4.
    சீரும்     தளையும்     சிதையுமானால் உயிரளபெடையை     எவ்வாறு     அலகிட வேண்டும்?
    5.
    ஐகாரக் குறுக்கம் எவ்வாறு அலகிடப் பெறும்?
    6.
    ஒற்று அளபெடுக்கும் போது அது எவ்வாறு கொள்ளப்படும்?
    7.
    சீரின் முதலில் தனிக்குறில் நேரசையாக வரும் இடம் எது?
    8.
    ஏஎர், எலாஅநின் - இவற்றை எவ்வாறு அலகிட வேண்டும்?
    9.
    கலிப்பாவில் வாராத சீர்கள் யாவை?
    10.
    அகவற்பாவில் வாராத சீர்கள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 19:03:38(இந்திய நேரம்)