Primary tabs
2.3. வேற்றுப்பொருள் வைப்பு அணி
தண்டியலங்காரத்தில் ஏழாவதாகக் கூறப்படும் அணி வேற்றுப்பொருள் வைப்பு அணியாகும். இலக்கியங்கள் பலவற்றிலும் குறிப்பாகக் கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் இவ்வணி மிகுதியாக இடம்பெற்றுள்ளது.
2.3.1 வேற்றுப்பொருள் வைப்பு அணியின் இலக்கணம்
முதலில் ஒரு பொருளினது திறத்தைத் தொடங்கிய கவிஞர் பின்னர் அதனைச் சிறப்பாக முடிப்பதற்கு ஏற்ற, வலிமை வாய்ந்த உலகறிந்த, வேறு ஒரு பொருளை, ஏற்றி வைத்துச் சொல்வது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆகும். இவ்வாறு கவிஞன் தான் சொல்லத் தொடங்கிய பொருளை உறுதிப்படுத்துவதற்காக வேற்றுப் பொருளைச் சொல்லி முடிப்பதால் இவ்வணிக்கு இப்பெயர் அமைந்தது.
முன்ஒன்று தொடங்கி மற்றுஅது முடித்தற்குப்
பின் ஒருபொருளை உலகுஅறி பெற்றி
ஏற்றிவைத்து உரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே
(தண்டி. 46)வேற்றுப்பொருள் வைப்பு அணியில் கவிஞர் முன்னர்க் கூறும் பொருளைச் 'சிறப்புப் பொருள்' என்றும், பின்னர் அதனை முடித்தற்கு அவர் கூறும் உலகு அறிந்த, வலிமையான பொருளைப் 'பொதுப் பொருள்' என்றும் குறிப்பிடுவர். சிறப்புப் பொருளைப் பொதுப் பொருள் கொண்டு முடித்தல் வேற்றுப்பொருள் வைப்பு அணி என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறலாம்.
2.3.2 வேற்றுப்பொருள் வைப்பு அணியின் வகைகள்
வேற்றுப்பொருள் வைப்பு அணி எட்டு வகைப்படும். குறிப்பிடுகிறார் (தண்டி. 48). அவை வருமாறு:
1) முழுவதும் சேறல்
2) ஒருவழிச் சேறல்
3) முரணித் தோன்றல்
4) சிலேடையின் முடித்தல்
5) கூடா இயற்கை
6) கூடும் இயற்கை
7) இருமை இயற்கை
8) விபரீதப்படுத்தல்
இவற்றுள், முழுவதும் சேறல், ஒருவழிச் சேறல், இரண்டையும் ஆகிய மேற்கோள் பாடல்கள் வழிநின்று விளக்கமாகக் காண்போம்.
- முழுவதும் சேறல்
பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் பொருந்துவதாக அமைவது முழுவதும் சேறல் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
புறம்தந்து இருள்இரியப் பொன்நேமி உய்த்துச்
சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் - மறைந்தான்
புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்?(நேமி = சக்கரத்தை உடைய தேர்;
உய்த்து = செலுத்தி; ஆழி = கடல்)இப்பாடலின் பொருள் :
உலகைக் காத்து, இருளை ஓடச்செய்து அழகிய சக்கரத்தைச் செலுத்திச் சிறந்த ஒளியைப் பரப்பும் தேரை உடையவனாகிய கதிரவன் மறைந்தான். புறத்தே கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பிறந்து இறவாமல் வாழ்பவர் யார்?
- அணிப் பொருத்தம் :
இப்பாடல் 'இருளை ஓடச்செய்து ஒளிபரப்பிய கதிரவன் மறைந்தான்' என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் பொருள் 'கடல் சூழ்ந்த உலகில் பிறந்து, இறவாமல் வாழ்வோர் யார்? என்பது அச்சிறப்புப் பொருளை முடிப்பதற்காகக் கூறிய உலகறிந்த பொதுப்பொருள். பொதுப் பொருள் கொண்டு சிறப்புப் பொருள் விளக்கப்பட்டமையால் இது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று. பிறந்தவர் இறத்தல் என்பது உலகம் முழுவதிற்கும் பொருந்திய பொதுப்பண்பு ஆதலின் இப்பாடல் முழுவதும் சேறல் என்னும் வகை ஆயிற்று.
- ஒருவழிச் சேறல்
பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ள பொருள்கள் முழுவதிற்கும் உரியதாகாது, ஒரு பகுதிக்கு அல்லது சிலவற்றிற்கு மட்டுமே உரியதாக அமைவது ஒருவழிச் சேறல் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
எண்ணும் பயன்தூக்காது, யார்க்கும் வரையாது
மண்உலகில் வாமன் அருள்வளர்க்கும்; -
தண்நறுந்தேன்பூத்துஅளிக்கும் தாராய்! புகழாளர்க்கு எவ்வுயிரும்
காத்துஅளிக்கை அன்றோ கடன்?(வரையாது - அளவில்லாமல்; வாமன் - திருமால்)இப்பாடலின் பொருள் :
குளிர்ந்த நல்ல தேனை மலர்ந்து கொடுக்கின்ற மாலையை அணிந்தவனே! கைம்மாறு கருதாமல், யாவர்க்கும் வரையறை இல்லாமல், இவ்வுலகில் திருமால் (வாமன்) கருணையை மிகுதியாகச் செய்தருள்கின்றான். புகழை உடையவர்களுக்கு எல்லா உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது கடமை அன்றோ?
- அணிப் பொருத்தம் :
இப்பாடலில், 'திருமால் யாவர்க்கும் கைம்மாறு கருதாமல் கருணை செய்கின்றான்' என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் பொருள் ஆகும். எல்லா உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது புகழ் உடையவர்களுக்குக் கடமை அன்றோ? என்பது, அச்சிறப்புப் பொருளை முடிப்பதற்குக் கூறிய உலகறிந்த பொதுப் பொருள் ஆகும். இவ்வாறு சிறப்புப்பொருளைப் பொதுப் பொருள் கொண்டு முடித்துக் கூறியமையால் இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று. பொதுப் பொருள் உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் பொருந்தாமல், 'புகழாளர்' என்னும் ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்துவதால் இப்பாடல், 'ஒருவழிச் சேறல்' என்னும் வகை ஆயிற்று.