தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒட்டு அணி

  • 3.1 ஒட்டு அணி.

    இலக்கியத்திற்கு உரிய பண்புகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பாற்றல் (Suggestiveness) என்பதாகும். கவிஞர் பாடலில் தாம் கூற விரும்பும் கருத்தினைக் குறிப்பாகக் கூறி, படிப்பவர் சிந்திந்து உணர்ந்து கொள்ளச் செய்தால் படிப்பவர்க்குக் கவிதைச் சுவை மிகுதியாகும். பாடல் பொருளை மிகக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர்கள் கையாண்ட அணிகள் பல. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஒட்டு அணி ஆகும்.

    3.1.1 ஒட்டு அணியின் இலக்கணம்.

    கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துவதற்கு அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைச் சொல்வது ஒட்டு என்னும் அணியாம். இதனை,

    கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு
    ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப
    (தண்டி. நூ. 52)

    என்ற நூற்பாவில் தண்டி ஆசிரியர் கூறுவர். இங்கு, 'ஒத்த வேறு ஒரு பொருள்' என்பது, கவிஞர் சொல்லக் கருதிய பொருளுக்கு உவமையாகத் தக்க பொருள் ஆகும். இவ்வாறு 'பிறிது' ஒரு பொருளை மொழிவதால் இவ்வணி 'பிறிதுமொழிதல் அணி' எனப் பெரும்பாலும் வழங்கப்படுகிறது.

    எடுத்துக்காட்டு:

    வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்தது ஓர் காவிக்
    குறைபடுதேன் வேட்டும் குறுகும்; -நிறைமதுச்சேர்ந்து,
    உண்டாடும் தன்முகத்தே, செவ்வி உடையது,ஓர்
    வண்தா மரைபிரிந்த வண்டு

    இப்பாடல், 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி சொல்லியது' என்னும் அகப்பொருள் துறையில் அமைந்தது.

    (வெறி- களிப்பு; இனச்சுரும்பு - பல வண்டுகள்;
    காவி - கருங்குவளைப்பூ; வேட்டும்- விரும்பி;
    குறுகும் - சேரும்; மது - தேன்; தன்முகத்தே - தன்னிடத்து;
    செவ்வி - வனப்பு; வண்தாமரை - வளமான தாமரை மலர்.)

    பாடலின் பொருள்:

    வனப்பையும் வளமையையும் உடைய தாமரை மலரில் குறைவற்ற நிறைந்த தேனை உண்டு களித்து விளையாடுகின்ற ஆண் வண்டானது, பல வண்டுகள் சேர்ந்து உண்டு வெறுத்து விட்ட ஒரு கருங்குவளைப் பூவில் உள்ள குறைபட்ட தேனை ஆசைப்பட்டுச் சேருகின்றதே!

    • அணிப்பொருத்தம்

    கவிஞர் கூறக் கருதிய பொருள் இதுவன்று; வேறு ஒன்றாகும். அதனை இப்பாடலில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறுகிறார். மறைத்துக் கூறும் அப்பொருள் வருமாறு:

    வனப்பையும் வளப்பத்தையும் உடைய தலைமகளிடத்தில் குறைவற்ற நிறைந்த இன்பத்தைத் துய்த்து மகிழ்ந்த தலைமகன், அவளை விட்டு நீங்கி, பலரும் துய்த்து வெறுத்து விலக்கிய ஒரு பரத்தையினது குறைவாகிய இன்பத்தை விரும்பி அவளைச் சேர்கின்றானே''

    கூறக் கருதிய பொருள்
    கூறிய பொருள்
    பலராலும் அனுபவித்து விடப்பட்ட பரத்தை
    வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்தது ஓர் காவி
    அப்பரத்தைபால் பெறும் குறைவாகிய இன்பம்
    குறைபடு தேன்
    வனப்பையும் வளப்பத்தையும் உடைய தலைவி
    செவ்வி உடையது ஓர்வண்தாமரை
    அத்தலைவிபால் பெறும் நிறைவாகிய இன்பம்
    நிறைமது
    தலைவியைப் பிரிந்த தலைமகன்
    வண்தாமரை பிரிந்த வண்டு

    இவ்வாறு கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறி, அதன் வாயிலாக வெளிப்படுத்தியமையால் இப்பாடல் ஒட்டு அணியாயிற்று. இங்கு உவமானம் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது; உவமேயம் குறிப்பாகப் பெறப்படுகின்றது.

    3.1.2 ஒட்டு அணியின் வேறு பெயர்கள்

    பின்னாளில் தண்டியலங்கார ஆசிரியர் கூறும் இந்த ஒட்டு அணியைத் தொல்காப்பியர் உள்ளுறை உவமம் என்றும் உவமப் போலி என்றும் குறிப்பிடுகிறார். வேறு சில அணி இலக்கண நூலாரும் பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, குறிப்பு நவிற்சி என்ற வேறு பெயர்களால் வழங்குகின்றனர்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமம் அல்லது உவமப் போலி என்பது அகப்பொருள் பாடல்களில் மட்டும் பயின்று வரும். தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும். மேலே ஒட்டு அணிக்குச் சான்றாகத் தண்டியலங்கார ஆசிரியர் காட்டிய ''வெறிகொள் இனச்சுரும்பு'' என்று தொடங்கும் பாடல், மருதத் திணைக்கு உரிய தாமரைமலர், காவிமலர் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டிருப்பதைக் காணலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணரும் இப்பாடலையே காட்டியுள்ளார்.

    அகப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியை 'உள்ளுறை உவமம்' என்றும், புறப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியைப் 'பிறிது மொழிதல் அணி' என்றும் இலக்கண விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் வேறுபடுத்திக் கூறுகின்றார்.

    3.1.3 இலக்கியங்களில் பிறிது மொழிதல் அணி

    திருக்குறள், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களில் பிறிது மொழிதல் அணி மிகுதியாகப் பயில்கிறது. திருவள்ளுவர் திருக்குறளில் பல குறள்பாக்களில் பிறிது மொழிதல் அணியைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இத்திறத்தை ஒரு திருக்குறள் வழிநின்று காண்போம்.

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்
    (குறள். 475)
    (சாகாடு - வண்டி; பீலி - மயில் இறகு;
    அச்சு - அச்சாணி; சால- மிகவும்.)

    பாவின் பொருள்:

    மென்மையான மயில் இறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப பண்டத்தை அளவோடு ஏற்றாமல் அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும்.

    • அணிப்பொருத்தம்

    திருவள்ளுவர் கூறக் கருதிய பொருள் இதுவன்று.

    ''ஓர் அரசன் தன் பகைவர்கள் தன்னைக் காட்டிலும் வலிமையில் குறைந்தவர்கள் என்று கருதி, அவர்கள் மீது ஆராயாமல் போர் தொடுத்தால் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடி அவனை எதிர்த்துப் போரிடும் பொழுது அந்த அரசன் தன் வலிமை கெட்டு அழிந்து போவான்.''

    இதுவே வள்ளுவர் கூறக் கருதிய பொருள். ஆனால் இதனை வெளிப்படையாகக் கூறாமல் மறைத்து இதைப் புலப்படுத்துவதற்காக இதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறினமையால் இக் குறள்பா பிறிது மொழிதல் அணியாயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 17:02:18(இந்திய நேரம்)