தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அதிசய அணி

  • 3.2 அதிசய அணி

    பாடல் பொருளை உள்ளது உள்ளபடி அழகுபடுத்திக் கூறல் தன்மை அணி என்பதை முதல் பாடத்தில் பார்த்தோம். சில நேரங்களில் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தைப் புலப்படுத்த வேண்டியும், படிப்போரை வியப்பில் ஆழ்த்த வேண்டியும் பாடல் பொருளை உயர்வுபடுத்திக் கூறுவர். அவ்வாறு கூறும் அணியே அதிசய அணி. இவ்வணியை 'உயர்வு நவிற்சி அணி' என்று கூறுவர்.

    3.2.1 அதிசய அணி இலக்கணம்

    கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது அழகை உவந்து சொல்லும் போது, உலகவரம்பைக் கடவாதபடி உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசயம் என்னும் அணியாகும். அதிசய அணி மிகைப்படுத்திக் கூறுவதுதான். இங்கு 'உலகவரம்பு கடவாமல்' கூறுதல் என்பது, கவிஞர்கள் வழக்கமாக மிகைப்படுத்திக் கூறும் மரபுக்கு முரண்படாமல் கூறவேண்டும் எனப் பொருள்படும்.

    மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி
    உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி
    ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்
    (தண்டி, நூ. 54)
    (உவந்து = மகிழ்ந்து; உரைப்புழி= சொல்லும்போது;
    இறவா = கடவாத; சான்றோர் = உயர்ந்தோர்)

    3.2.2 அதிசய அணி வகைகள்

    அதிசய அணி ஆறு வகைப்படும். அவை வருமாறு:

    1) பொருள் அதிசயம் (ஒரு பொருளின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.)
    2) குண அதிசயம் (ஒரு குணத்தின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது)
    3) தொழில் அதிசயம் (ஒரு தொழிலின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.)
    4) ஐய அதிசயம் (ஐயப்பட்டுக் கூறுவதன் மூலம் ஒருபொருளைஉயர்த்திக் கூறுவது.)
    5) துணிவு அதிசயம் (ஐயம் தெளிந்து கூறுவதன் மூலம் ஒருபொருளை உயர்த்திக் கூறுவது)
    6) திரிபு அதிசயம் (ஒரு பொருளை வேறுவேறு பொருளாக மாற்றி (திரிபுற்று) வியக்குமாறு உயர்த்திக் கூறுவது.)

    இவற்றுள் பொருள் அதிசயம், திரிபு அதிசயம் ஆகிய இரு வகைகளை இங்கு விளக்கமாகக் காண்போம்.

    3.2.3 பொருள் அதிசயம்

    ஒரு பொருளின் இயல்பை அதிசயம் தோன்றக் கூறுவது 'பொருள் அதிசயம்' எனப்படும்.

    எடுத்துக்காட்டு:

    பண்டு புரம்எரித்த தீ மேல்படர்ந்து, இன்றும்
    அண்ட முகடு நெருப்பு அறாது - ஒண்தளிர்க்கை
    வல்லி தழுவக் குழைந்த வடமேரு
    வில்லி நுதல்மேல் விழி
    (புரம் - திரிபுரம், அரக்கர்களின் மூன்று கோட்டைகள்;
    முகடு - உச்சி; வல்லி - மலைமகள்; உமையம்மை;
    மேரு = மேருமலை; வில்லி = வில்லாக உடையவர்;
    நுதல் - நெற்றி.)

    பாடலின் பொருள்

    ஒளிமிக்க தளிர் போன்ற கைகளை உடைய மலைமகள் தழுவியதால் குழைந்த திருமேனியையும், வட மேருமலையாகிய வில்லினையும், நெற்றியின் மேல் கண்ணினையும் உடைய சிவபெருமான் முன்னொரு காலத்தில் திரிபுரத்தை நகைத்து எரித்த தீயானது மென்மேலும் படர்ந்து ஓடுதலால், இன்றும் அண்டத்து உச்சியில் நெருப்பு நீங்காமல் உள்ளது.

    • அணிப்பொருத்தம்

    இப்பாடலில் கூறப்படும் பொருள் 'திரிபுரத்தை எரித்த தீ' ஆகும். சிவபெருமான் நகையிலிருந்து புறப்பட்ட தீயானது இன்றும் அண்டமுகட்டில் அணையாமல் உள்ளது என்று யாவரும் வியக்கும்படி கூறியதால் இப்பாடல் பொருள் அதிசயம் ஆயிற்று.

    3.2.4 திரிபு அதிசயம்

    திரிபு என்பதற்கு ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கல் என்பது பொருள். ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கும்வழி அதிசயம் தோன்றக் கூறுதல் திரிபு அதிசயம் எனப்படும். இதனை மயக்க அணி என்றும் கூறுவர்.

    எடுத்துக்காட்டு:

    திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
    பைங்கிள்ளை பால் என்று வாய்மடுக்கும்; -
    அங்கு அயலே,
    காந்தர் முயக்கு ஒழிந்தார், கைவறிதே நீட்டுவரால்
    ஏந்திழையார் பூந்துகிலாம் என்று
    (வள்ளம் - கிண்ணம்; காந்தர் - காதலர், தலைவர்;
    முயக்கு - புணர்ச்சி; வறிதே = வீணாக; துகில் - ஆடை.)

    பாடலின் பொருள்

    நிலவு சொரிந்த வெள்ளிய வெண்ணிறக் கதிர்கள், நிலா முற்றத்தில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்தன. பசுங்கிளிகள், அக்கதிர்களின் ஒளியைப் பால் என்று மயங்கி, அதனை வாய்வைத்துப் பருக முயன்றன. அதுமட்டுமன்றி, அங்கு ஒரு புறத்தில் தம் காதலரைப் புணர்ந்து நீங்கிய மகளிர், நிலவுடைய வெள்ளிய நிலாக் கதிர்களைத் தமது வெண் துகிலாகக் கருதி, அதனைப் பற்றுவதற்காகக் கைகளை வீணாக நீட்டுவார்கள்.

    • அணிப்பொருத்தம்

    இப்பாடலில், வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்த நிலவின் ஒளியைப் பசுங்கிளிகள் பால் என்றும், மகளிர் தம்முடைய துகில் என்றும் திரித்து மயங்கியதை அதிசயித்துக் கூறியதனால் இது திரிபு அதிசயமாயிற்று.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1

    ஒட்டு அணியின் இலக்கணம் யாது?

    2

    ஒட்டு அணியின் வேறு பெயர்கள் யாவை?

    3

    ஒட்டு அணிக்குச் சான்றாகக் காட்டப்பட்ட பாடலில் தாமரை, காவி, வண்டு என்பனவற்றில் மறைத்துக் கூறப்படுவோர் யாவர்?

    4

    அகப்பொருளில் வரும் ஒட்டு அணிக்கும் புறப்பொருளில் வரும் ஒட்டு அணிக்கும் வழங்கப்படும் பெயர்களைக் குறிப்பிடுக.

    5

    பிறிது மொழிதல் அணிக்குத் திருக்குறள் ஒன்றைச் சான்று காட்டுக.

    6

    அதிசய அணி என்றால் என்ன?

    7

    அதிசய அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

    8

    ''திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப் பைங்கிள்ளை பால் என்று வாய்மடுக்கும்''

    - இதில் அமைந்துள்ள அணி யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 17:22:55(இந்திய நேரம்)