Primary tabs
-
6.10 கருவறையும் விமானமும்
கருவறைக்கு மேல் கட்டப்படும் விமானங்களில் பல வகைகள் உள்ளன. அதுபோலக் கருவறைத் தரையமைப்பினைப் பொறுத்தும் கலை நுட்ப வகைகள் உண்டு.
கோயில்களில் கருவறை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கருவறை அமைப்பு முறையிலும், பல்வேறு வகையான கலை நுட்பங்கள் காணப்படுகின்றன. மூலவரையே கருவறையாக அமைக்கின்ற தன்மையும் காணப்படுகின்றன.
- சதுரவகைக் கருவறை
தமிழகத்தில் பல கோயில்களில் இவ்வகைக் கருவறைகளைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிற் கருவறை (29’.6”x 29’,6”) உள்ளது; இங்கு இறைவனின் நின்ற கோலத்தைக் காணலாம்.
- நீள் சதுரவகைக் கருவறை
வைணவக் கோயில்களில் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருவறை (10’.6”x 16’.6”) - நின்ற கோலம் உள்ளது.
திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமாள் கோயிலில் கருவறை (13’.8”x 23’.6”) - கிடந்த கோலம் உள்ளது.
- வட்டவகைக் கருவறையமைப்பு
மதுரைக்கு அருகிலுள்ள கள்ளழகர் கோயிலில் வட்டவகைக் கருவறை (85 அடி - சுற்றளவு) உள்ளது; சுவாமி நின்ற கோலம். தமிழகத்தில் வட்டவகைக் கருவறை அமைப்பதில்லை. இங்கே சோதனை முறையில் இவ்வாறு அமைத்திருக்கலாம் எனக் கருதுவர்.
உலகிலே எந்த மதக் கோயிலாயினும் கூரைப் பகுதியாகிய விமானமே மிகச் சிறப்புடையதாகும். வைதிக சமயமாயினும் வைதிகமல்லாத பௌத்த சமயமாயினும், சமண மதமாயினும் சீக்கிய சமயமாயினும், கிறித்துவ மதமாயினும், இசுலாம் மதமாயினும் வழிபாடு என்பது பொதுவாக எல்லோரிடமும் உண்டு. அந்த நோக்கில் அமையப்பெறும் வழிபாட்டுத் தலங்களில் மேற் பகுதியாகிய கூரையைக் கொண்டே அடையாளம் கண்டு கொள்ளப்படும்.
- விமானத்தின் சிறப்பு
வானில் இயங்கும் அற்புத சக்திகளைத் தக்க வண்ணம் வாங்கிக் கருவறையில் செலுத்தக்கூடிய ஆற்றலுடையது அஃதென்பர். எனவே மூலத்தானமாகிய கருவறை மீது கட்டப்படும் விமானத்தைத் தூலலிங்கம் என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடும்.
தஞ்சைப் பெரிய கோயில் கருவறை மீது, மாமன்னன் முதலாம் இராசராசன் கட்டிய, பிரமாந்திரக் கல்லுடன் கூடிய விமானம் உலகப் புகழ் பெற்றது. “தஞ்சை விமானம் திராவிடச் சிற்பியரின் தனிச் சிறப்புமிகு கலைப்படைப்பாகும்; இஃது இந்தியக் கட்டடக் கலை மேம்பாட்டிற்கு ஒர் உரை கல்லாகும். (Unquestionably, the finest single creation of Dravidian craftsmen, the Tanjore Vimanam is the touch store of Indian architecture as a whole)” என்று வரலாற்று அறிஞர் பெர்சி பிரவுன் கூறியுள்ளார்.
கோயிலமைப்பிலே தூங்கானை மாடம் (கஜப் ருஷ்டம்) விமானத் தொடர்பில் சாதித்த பெரும் செயலாகும். திருவீழிமிழலைக் கோயிலுள்ள விண்ணிழி விமானம் திருமாலால் சிவபூசனை புரிவதற்காகவே விண்ணிலிருந்து கொணர்ந்த விமானம் என்பது புராணக் குறிப்பு. இவ்வாறெல்லாம் சிவாலயங்களில் சிறப்பிற்குரிய சில விமானங்கள் இருப்பினும், வைணவ திவ்ய தேசங்களில் அமைந்துள்ள விமானங்களே கட்டடக் கலைநுட்ப நோக்கில் சிறப்பாகப் போற்றக் கூடியவையாகும்; சமய நோக்கிலும் பெரிதும் சிந்திக்கக் கூடியவையாகும்.
- விமானப் பெயர்கள்
திருமாலின் திருவுருவச் சிலைகளை அர்ச்சாவதார மூர்த்திகளாகவே வைணவர்கள் வழிபடுவர். அவர்கள் ஆலய விமானத்திற்குப் பெயரிடுகையில் சுக நாக்ருதி விமானம், புண்ணியகோடி விமானம், பிரவண விமானம், சாத்துவிக விமானம், அட்டாங்க விமானம் முதலிய பெயர்களை இட்டுப் பெரிதும் கொண்டாடுகின்றனர்.
- இந்திரவிமானம்
மதுரையில் அருள்மிகு சொக்கநாதப் பெருமான் எழுந்தருளியுள்ள கருவறையில், மேலே காணப்படும் இந்திரவிமானம் புராணச் சிறப்பும் கலை நுட்பமும் வாய்ந்தது. இந்திர விமானத்தின் ஒவ்வொரு பக்கமும் இரண்டு யானைகள், சிங்கங்கள் வீதம் நான்கு பக்கங்களில் எட்டு யானைகளும், பக்கத்துக்கு எட்டு வீதம் நான்கு பக்கங்களுக்கு முப்பத்திரண்டு சிங்கங்களும், பக்கத்துக்குப் பதினாறு பூதகணங்கள் வீதம் நான்கு பக்கங்களுக்கு அறுபத்து நான்கு பூதகணங்களும் உள்ளன. எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் யானை நம்மையே பார்க்குமாறு அமைந்துள்ளது.
- பொன் விமானம்
சைவர்களுக்குக் கோயில் எனப் போற்றப்பெறும் சிறப்பினைக் கொண்ட சிதம்பரம், மிகச் சிறந்த பொன்விமானம் பெற்றது. எனவே, பொற்றகடுகளால் போர்த்தப் பெற்ற அந்தப் பொன்விமானத்தால் பொன்னம்பலம் என்றும், கனகசபை என்றும் தில்லைக் கோயில் சிறப்பினைக் கொண்டுள்ளது.
வைணவர்களுக்குக் கோயில் எனச் சிறப்புற விளங்கும் திருவரங்கத்திலே, அரங்கநாதப் பெருமான் பள்ளி கொண்டிருக்கும் கருவறை உள்ளது. அதற்கு மேலுள்ள விமானம் பொற்றகடு போர்த்தப் பெற்ற சிறப்பினையுடையது; அதனைப் பிரணவாகர விமானம் அல்லது பிரணவாக்ருதி விமானம் என அழைப்பர். சடாவர்மன் சுந்தர பாண்டியனது திருப்பணி இது, என்பது கல்வெட்டுச் செய்தி.
-
திட்டைச் சிவாலய விமானம்
தஞ்சாவூருக்கு அருகில் (9 கி.மீ.) உள்ள திட்டை எனும் திருத்தலத்தில் கட்டடக் கலைச் சிறப்புமிகு சிவாலயம் உள்ளது.
சூரிய சந்திர காந்தக் கற்கள் பதிக்கப்பட்ட விமானம் கருவறைக்கு மேலே காணப்படுவது.
இந்தக் கற்கள் சூரிய ஒளியினால் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கல்லிலிருந்து ஈரத்தை நீராக மாற்றி மூலவராகிய சிவலிங்கத்தின் மீது 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு சொட்டாக அபிடேகம் புரிகின்ற விந்தை உள்ளது. மூலவர் மீது நீர்த்துளி விழும்வகையில், கருவறை மேல் விதானத்தில் சதுரத்துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டடக் கலை உத்தியுடன் இவ்வாறு அமைந்துள்ளது பாராட்டற்குரியது.