தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.4 வடிவ அடிப்படையிலான வகைகள்

  • 5.4 வடிவ அடிப்படையிலான வகைகள்

         வடிவ அடிப்படையில் நாட்டிய நாடகங்கள், குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம், இசை நாடகம், அரையர்சேவை, யட்சகானம், தெருக்கூத்து என்றெல்லாம் வகைப்படுத்தலாம். இதில் குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் மிக அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளதோடு,     அதிகமாக     அரங்கேற்றம் பெற்றவைகளாகவும் உள்ளன.

    5.4.1 குறவஞ்சி நாட்டிய நாடகங்கள்

        தமிழிசை நாட்டிய நாடகங்களில் குறவஞ்சி மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது. பக்தியில் பிறந்து, நாட்டுப் புறத்தாரால் தாலாட்டப்பட்டு, சிற்றிலக்கிய வகையுள் வளர்ந்தது, குறம், குளுவம், குறவஞ்சி என்ற பெயர்களைத் தாங்கி வளர்ந்த நாட்டிய நாடக வகையாகக் குறவஞ்சி விளங்குகிறது. இயலைச் சிறக்க வைத்து, இசையை மணக்க வைத்து நாடகத்தை மிளிர வைத்த முத்தமிழாக விளங்குகிறது. அகவன் மகளாகச் சங்க இலக்கியத்தில் காட்சி தந்து, குறம் என்னும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒருத்தியாகி, குறி சொல்லுதலைக் குறியாகக் கொண்டு, குறத்தி பாட்டாகி, குளுவ நாடகமாகி குறவஞ்சி வளர்ச்சி பெற்றாள். இன்று சுமார் 120-க்கும் மேற்பட்ட குறவஞ்சி நூல்கள் உள்ளன. இவை இறைவன் பெயராலும், தலத்தின் பெயராலும், வள்ளல்களின் பெயராலும் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மேடைகளில் அரங்கேறி, பாமர மக்களையும், பண்டிதர்களையும் இவை மகிழ வைத்துள்ளன. நாட்டுப்புறத்தில் உள்ள குறத்தி நடனம் குறவஞ்சியாக மலர்ந்து செவ்வியல் ஆடலும், நாட்டுப்புற ஆடலும் கலந்த ஓர் ஆடல் இலக்கியமாகத் திகழ்கிறது.

        குறவஞ்சி     நாட்டிய     நாடகத்தின்     வித்தினைத் தொல்காப்பியத்தில் காணமுடிகின்றது.

        கட்டினும் கழங்கினும் குறத்தி (குறிபார்த்தல்) வைத்துக் குறி சொல்வாள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

         குறத்தி சங்க இலக்கியத்தில் அகவன் மகள் என்று அழைக்கப்படுகிறாள். இவள் கைக்குறி, மெய்க்குறி, முகக்குறி பார்த்துத் தலைவியின் நிலையைக் கூறுவாள்.

    • குறம்

        குறம் என்ற தலைப்பில் நூல்கள் பல கிடைத்துள்ளன. இந்த நூலின் இலக்கணம் பற்றி எந்த நாட்டிய நூலும் கூறவில்லை. குறத்தி குறி கூறும் நிலையில் இது அமையும். முதல் குறநூலாக குமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை குறம் திகழ்கிறது.

    மதுரை மீனாட்சியம்மை குறம்

        மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ளது.

        இவள் பொதிய மலைக் குறத்தியாவாள். தனது பொதிய மலையின் சிறப்பைப் போற்றிப் பாடுகிறாள் :

        திங்கள் முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
        தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை
        அங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப்
        பொங்கருவி தூங்குமலை பொதியமலையே

    • குளுவ நாடகம்

        குறம், குறவஞ்சிக்கு அடுத்த நிலையில் தோன்றுவது குளுவ நாடகமாகும். இவ்வகை நாடகங்கள் குறம், குறவஞ்சி பெயரில் அதிகம் கிடைக்கவில்லை, ஐந்து வகையான குளுவ நாடகங்கள் இருந்துள்ளமையை டாக்டர். நிர்மலா மோகன் குறவஞ்சி இலக்கணம் என்ற தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    1. சின்ன மகிபன் குளுவ நாடகம்
    2. அருணாசலம் குளுவ நாடகம்
    3. கோட்டூர் கலியனார் குளுவ நாடகம்
    4. கறுப்பர் குளுவ நாடகம்
    5. ஏழு நகரத்தார் குளுவ நாடகம்

    இவற்றில் ஏழு நகரத்தார் குளுவ நாடகம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்கிறார். (ப.85) குறத்தியைப் பிரிந்திருந்த குறவன் தனது வேட்டைத் தொழிலைச் சிறப்புறச் செய்யாமல் தோல்வியுறுகிறான். இக்குறையைத் தீர்க்கும் வகையில் குளுவ நாடகம் தோன்றியது என்பர்.

    குறவஞ்சி

        குறம் என்ற இலக்கிய வகையையொட்டி எழுந்த இலக்கியமாகக் குறவஞ்சி விளங்குகின்றது. ஆயினும் குறத்தில் குறத்தி கூற்று மட்டும் அமைந்திருக்கும். குறவஞ்சியில் வேறு பலரின் கூற்றும் இடம்பெறும்.

        குறவஞ்சி இலக்கியங்கள் கடவுள், அரசர், வள்ளல்கள் ஆகியோரில் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவன் உலா வருகின்றான். இதனைக் கண்ட தலைவி தலைவன் மீது மையல் கொள்கிறாள். மையலுற்ற தலைவி நிலா, தென்றல் போன்றவற்றைக் கண்டு காம மிகுதியால் புலம்புகிறாள். காம மிகுதியினால் துயர் உறும் தலைவிக்குக் குறத்தி ஒருத்தி குறி கூறி ஆறுதல் சொல்கிறாள். குறத்தியைக் காணாமல் குறவன் புலம்புகிறான். வேட்டையாடிக் கொண்டு வரும் குறவன் குறத்தியைச் சந்திக்கிறான். இருவரிடையே உரையாடல்கள் நிகழ்கின்றன. இருவரும் பாட்டுடைத் தலைவனை வாழ்த்தி விடை பெறுகின்றனர். இந்நிலையில் குறவஞ்சி நூல்கள் அமைந்துள்ளன.

        கும்பேசர் குறவஞ்சி, அர்த்த நாரீசுவரர் குறவஞ்சி முதலான குறவஞ்சி நூல்கள் இறைவன் பெயரால் பெயர் பெற்றுள்ளன.

        கிருட்டிணமாரி     குறவஞ்சி,     மாத்தளைமுத்து மாரியம்மன் குறவஞ்சி ஆகியவை இறைவியின் பெயரால் பெயர் பெற்றுள்ளன.

        குறுக்குத் துறைக் குறவஞ்சி, சிதம்பரக் குறவஞ்சி, சிவன்மலைக் குறவஞ்சி போன்றவை தலத்தின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன.

        குன்றக்குடி சிவ சுப்பிரமணியக் கடவுள் குறவஞ்சி, சிக்கல் நவநீதேசுவர சுவாமி குறவஞ்சி ஆகியவை தலப்பெயருடன்     இறைவன்     பெயரையும்     சேர்த்துப் பெயரிடப்பட்டுள்ளன.

        சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, சக்கிராசன் குறவஞ்சி ஆகியன மன்னன் பெயராலும் தமிழரசி குறவஞ்சி பாட்டுடைத் தலைவி பெயராலும் தலைப்பிடப்பட்டுள்ளன.

        பாம்பன் காங்கேயன் குறவஞ்சியும், சுப்பிரமணிய முதலியார் குறவஞ்சியும் வள்ளல்கள் பெயராலும், ஞானக் குறவஞ்சி, மெய்ஞானக் குறவஞ்சி, முத்தானந்தர் ஞானக் குறவஞ்சி ஆகியவை உள்ளடக்கமாகிய ஞானத்தின் பெயராலும் பெயர் பெற்றுள்ளன.

        குறவஞ்சி நூல்கள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

    • குறவஞ்சியில் நாடகக் கூறுகள்

        நாடகத்திற்குரிய ஐவகைச் சந்திகள், பாத்திரங்கள், பாத்திர உரையாடல்கள், இசையமைதிகள், எண்வகைச் சுவைகள் போன்ற நிலைகளைக் குறவஞ்சி இலக்கியங்கள் பெற்றுள்ளன. இசை, ஆடல் இவற்றின் துணை கொண்டு கதையின் கருவளர்ச்சிக்கான உள்நிகழ்வுகளின் இயக்கப் போக்கு நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.

        குறவஞ்சி இலக்கியம் நாட்டிய நாடகமாக விளங்கி வருகின்றது. இதில் இயல், இசை, நாடகம், நாட்டியம் ஆகியவை இணைந்து திகழ்கின்றன. இவை நாடகத் தன்மையோடு விளங்கும் நாட்டியமாகும்.

        தமிழகத்தில் ஆடரங்கு ஏறிய நாட்டிய நாடகங்களில் குறவஞ்சி நாட்டிய நாடகமே அதிகம் ஆகும். தெய்வ வழிபாட்டோடு மிக நெருங்கிய தொடர்புடைய இந்நாட்டிய நாடகங்கள் ஆலயத் திருவிழாக் காலங்களில் ஆடப்பட்டு வந்துள்ளன. பெரும்பாலும் ஆலய வழிபாட்டிற்காகவே இவை படைக்கப்பட்டு அந்த அந்த ஆலயங்களில் ஆடப்பட்டு வந்துள்ளன.

        பாபநாச     முதலியாரின் கும்பேசர் குறவஞ்சி கும்பகோணத்தி்லும், வாணிதாச வீர பத்திரக் கவிராயரின் குன்றக்குடி சிவசுப்ரமணியக் கடவுள் குறவஞ்சி குன்றக் குடியிலும், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், செல்லப்பிள்ளையின் சிதம்பரம் குறவஞ்சி சிதம்பரத்திலும், குமண பாரதியின் சிவன் மலைக் குறவஞ்சி சிவன் மலையிலும் நடைபெற்றுள்ளன.

        குறவஞ்சி நாட்டிய நாடகங்களை மக்களிடம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் திருமதி ருக்மணி அருண்டேல் அம்மையாரும் ஒருவராவார். அம்மையார் திருக்குற்றாலம் சென்றிருந்த பொழுது திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியின் நுட்பங்களையும் சிறப்புகளையும் கண்டு இதனை ஆடும் முயற்சியில் ஈடுபட்டார். இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் இப்பணியில் ஈடுபட்டு அம்மையாருக்கு ஊக்கமளித்தார். இதன் முதற்பகுதி செவ்வியல் ஆடலாகவும், பிற்பகுதி நாட்டுப்புற ஆடலாகவும் அமைந்திருந்தமையை அறிந்து மகிழ்ந்தார். டைகர் வரதாசாரியார், வீணை கிரு좮ணமாசாரியார் உதவியோடு குற்றாலக் குறவஞ்சி பாடல்களையும் இசையைமைத்துக் கொண்டார். குறவஞ்சி நாட்டிய மரபினை அறியக் காரைக்கால் சாரதாம்பாள் உதவியையும் பெற்றார். தஞ்சையில் நிலவிய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி அமைதியையும் அறிந்து கொண்டார். சென்னை கலா சேத்ராவில் தன் மாணவியர்கள் மூலம் 1944ஆம் ஆண்டு திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார். இதனைப் பல இடங்களிலும் அரங்கேற்றினார். மக்களை இந்நாட்டிய நாடகம் பெரிதும் கவர்ந்தது.

    விராலிமலைக் குறவஞ்சி

        1958இல் சென்னையில் நடைபெற்ற தமிழிசை விழாவில் மதுரை காந்தி இராமகான குழுவினர் விராலிமலைக் குறவஞ்சியை அரங்கேற்றினர். இசைவாணர் வி.வி. சடகோபன் இசை அமைத்திருந்தார். திருமதி. வி. இலட்சுமி காந்தம் நடனம் அமைத்திருந்தார்.

    தமிழிசைச் சங்கத்தில் அரங்கேறியவை

        சென்னை தமிழிசைச் சங்கத்தில் 1966ஆம் ஆண்டு சென்னை சரசுவதி நிலையக் குழுவினர் அளித்த தியாசேகர் குறவஞ்சி நாட்டிய நாடகம் நடந்தது.

        1967இல் தமிழிசைச் சங்க விழாவில் சென்னை நாட்டிய கலாலயத்தினரின் பாபவினாச முதலியார் இயற்றிய கும்பேசர் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.

        1974ஆம்     ஆண்டு     தமிழிசைச்     சங்கத்தில் திரு.சு. சொக்கலிங்கம் பிள்ளை இயற்றிய சிக்கல் நவநீத ஈசுவரக் குறவஞ்சி அரங்கேற்றம் பெற்றது.

        1970இல் வழுவூர் இராமையா பிள்ளை கமலா குழுவினர் மூலம்     கலிகுஞ்சர     பாரதியார் இயற்றிய அழகர் குறவஞ்சியையும் இதே ஆண்டில் திருமலை ஆண்டாள் குறவஞ்சியையும் 1971இல் ருக்மணி அருண்டேல் அம்மையார் திருவேற்காடு கருமாரி அம்மன் மேல் அமைந்த கிருட்டிணமாரி குறவஞ்சியையும், 1972இல் நிருத்யோதயா இயக்குநர் பத்மா சுப்ரமணியன்,     திருச்செங்கோட்டு     அர்த்தநாரீசுவரர் குறவஞ்சியையும், 1973இல் நாட்டியப் பேராசான் அடையாறு இலட்சுமணன், சென்னை தமிழிசை விழாவில் வருணாபுரிக் குறவஞ்சியையும் அரங்கேற்றினர்.

        இன்றும் செவ்வியல் அரங்க மேடைகளில் குறத்தி நடனம் ஆடப்பட்டு வருகிறது.

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

        தொடர்ந்து பல ஆண்டுகளில் மேடையேறிய குறவஞ்சி நாட்டிய நாடகமாகச் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி திகழ்கிறது. இக்குறவஞ்சி நடந்தேறிய அரங்கம் குறவஞ்சி மேடை என்ற பெயரில் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் இன்றும் உள்ளது. இக்குறவஞ்சியை ‘அட்டக்கொடி குறவஞ்சி’ என்றும் கூறுவர். இதனை எழுதியவர் சிவக்கொழுந்து தேசிகர் ஆவார். தஞ்சைப் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவின் அட்டக்கொடி விழாக்களில் இக்குறவஞ்சி நடைபெற்றதால் அட்டக்கொடிக் குறவஞ்சி என்று பெயர் பெற்றது என்பர்.

        இந்நாட்டிய நாடகம் தஞ்சை மராட்டிய மன்னர்களின் திருமணக் காலங்களிலும், சிறப்புத் தினங்களிலும் தஞ்சை அரண்மனையில் உள்ள சந்திர மௌலீசுவார் ஆலயச் சன்னதியில் நடிக்கப் பெற்றது.

        தஞ்சை அரண்மனை சங்கீத மேளப் பரம்பரையாரால் இந்நாடகம் தொடர்ந்து 1940ஆம் ஆண்டு வரையிலும் நடத்தப்பெற்றது. பிறகு நின்று விட்டது. 1956இல் சென்னை தமிழிசைச் சங்கத்தில் இந்நாட்டிய நாடகம் நடத்தப் பெற்றது. 1990இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இந்நாட்டிய நாடகம் நடத்தப் பெற்றது.

    5.4.2 அரையர் சேவை

        வைணவ ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். வைணவ இலக்கியங்களான நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடலுக்கான அவிநயம், இச்சேவையில் முக்கியமாக இடம்பெறும். அவிநயித்துக் காணப்படும் நிலையில் இதுவும் நாடகத் தகுதியைப் பெறுகிறது. இது கதையைத் தழுவியமையாமல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமையும்.

        அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர்,     தம்பிரான்மார்     என்றெல்லாம்     இவர்கள் அழைக்கப்படுகின்றனர். நெல்லை மாவட்டம்     ஆழ்வார் திருநகரியிலும், விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரிலும், திருச்சி மாவட்டம் திருவரங்கத்திலும் இன்றும் இச்சேவையைக் காண இயலும்.     மார்கழி     மாதம்     இராப்பத்து,     பகல்பத்து விழாக்காலங்களிலும், ஆடிப்பூர விழாவின் பொழுதும், சில ஆலயங்களில் வருடம் முழுவதும், இச்சேவை நடைபெற்று வருகிறது.

        அரையர் சேவை, திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும். அரையரின் இரு பக்கங்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். இவ்வமைப்பு நாட்டுப்புற அரங்க அமைப்புப் போல் இருக்கும். இந்நிலையில் அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அவிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பஞ்சகச்ச வேட்டியும், திருமண்ணும் தரித்துக், தலையில் கூம்பு வடிவக் குல்லாய் அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை திருமால் ஆலயங்களில் மட்டும் காணப்படும். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அவிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.

    5.4.3 யட்சகானம்

        யட்சகானம் மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகமாகும். திறந்த வெளியில் சதுர வடிவமான அரங்கில் இரவு முழுவதும் நடைபெறும் பழமையான நாட்டிய நாடகம் இது. கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகம் காணப்பட்டாலும் தமிழில், சுந்தரமூர்த்தி யட்சகானம், சிறுத்தொண்டர் யட்சகானம், நீலா யட்சகானம் போன்றன உள. இவை வட ஆர்க்காடு மாவட்டங்களில் ஆடப்பட்டு வருகின்றன.

        யட்சகானத்தில் கணபதி வழிபாடு, விதூசகன் வருகையைத் தொடர்ந்து நாட்டிய நாடகம் தொடங்கும். பரதரின் நாட்டிய சாத்திரத்தி்ல் கூறப்படும் பூர்வாங்க அவிநயம் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படும். கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து நாடகத்தைத் தொடங்குவர். சிறப்பான இசைவளமும், நாட்டிய வளமும் கொண்ட நாடகமாக விளங்கும். உணர்ச்சிக்குத் தக்கவாறு காலடி அசைவுகளும் பொருளுக்கேற்ற அவிநய முத்திரைகளும் சிறப்பான இசையமைப்பும் கொண்ட நாட்டிய நாடகமாக இது விளங்குகிறது.

    5.4.4 இசை நாடகங்கள்

        இசைநாடகம் என்ற பெயரில் நாட்டிய நாடகங்கள் பல உள. இதனைச் சங்கீத நாடகம் என்றும் (ஆங்கிலத்தில் OPERA) அழைப்பர். ஒரு கதையைத் தழுவி, தரு, கீர்த்தனை, சிந்து முதலிய இசை     வடிவங்களுடன் கலித்துறை, வெண்பா, ஆசிரியப்பா, தாழிசை, விருத்தம் என்ற யாப்பு வடிவங்களில் இந்த இசை நாட்டிய நாடகங்கள் அமையும். கதைத் தொடர்பிற்காக இடையிடையே உரைநடை (வசனங்களும்) இடம்பெறும். முதல் தமிழ் இசை நாடகப் படைப்பாகச் சீர்காழி அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை விளங்குகிறது. இது இசை நயமும், கவிதை நயமும் பின்னிப் பிணைந்த நாட்டிய நாடகமாக அமைந்துள்ளது. கோபால கிருட்டின பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மிகச் சிறப்பான நாடகமாக விளங்கியுள்ளது. மேலும் இவர் திருநீலகண்ட நாயனார் சரித்திரம், இயற்பகை நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம் என்ற இசை நாடகங்களையும் தந்துள்ளார்.

        கம்பரின் இராம காதையைத் தழுவி இசை நாடகமாக அருணாச்சல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை அமைந்துள்ளது. இதில் 258 இசைப் பகுதிகள் அமைந்துள்ளது.

    தோடயம்
    -
    1
    தரு என்ற கீர்த்தனைப் பகுதி
    -
    197
    திபதை என்ற பகுதி
    -
    60
    ------
    258
    ------

        கதைப் பகுதியை விளக்கும் கீர்த்தனையைத் தரு என்பர். இவ்வகையில் அமைந்த எட்டு வகையான தருக்கள் நாட்டிய நாடகங்களில் இடம் பெறும்.

    (1) பிரவேசிகா தரு

        நாடக மாந்தர்களை அறிமுகப்படுத்தும் பகுதியைப் பிரவேசிகா தரு என்பர்.

        “கூனி வந்தாளே பொல்லாத கூனி வந்தாளே”

    (2) வருணனைத் தரு

        நிகழ்ச்சியை வருணிக்கும் நிலையில் அமைவதனை, வருணிப்பதை, வருணனைத் தரு என்பர். இயற்கை எழிற்காட்சி, வருணனை, பண்புநல வருணனை, செயல்நிலை வருணனைகள் இவ்வகையில் அமையும். இவ்வாறே சம்வாத தரு முதலிய 8 தருக்கள் இடம் பெறுகின்றன.

        திபதை என்பதும் ஒரு வகைக் கீர்த்தனையாகும். இதன் மூலம் நாடகத்தில் நீண்ட உரையாடலை அமைக்க முடியும். இதில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற நிலைகள் இடம் பெறாமல் கண்ணிப்பாடல்களாகவும் அமையும்.

        இசை நாடகங்களின் தொடக்கப் பகுதியாகத் தோடயம் அமையும். பழந்தமிழ் நூல்கள் இதனைத் தேவபாணி என்று குறிப்பிடுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2018 17:00:36(இந்திய நேரம்)