தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.6 ஆடல் மற்றும் நாடக அமைதிகள்

  • 5.6 ஆடல் மற்றும் நாடக அமைதிகள்

    நாட்டிய நாடகங்கள் என்ற பெயருக்கேற்ப ஆடற் கலைகள் நிறைந்த நாடகங்களாக இவை அமையும். கதை அமைப்பில் பாடல் வகைகள் இடம் பெறுவதோடு ஆங்காங்கே விளக்கம் தரும் வகையில் உரைநடைப் பகுதிகளும் இடம் பெறும்.

    5.6.1 ஆடல் அமைதி

    நாட்டிய நாடகங்களில் இருந்த, நிருத்திய ஆடல் நிலைகளும், அடவு வகைகளும், அவிநயங்களாகிய ஆங்கிக, ஆகார்ய, சாத்விக அவிநய வகைகளும் அமையும். புட்பாஞ்சலி, அலாரிப்பு, சதிஸ்வரம், வர்ணம், பதம் போன்றவற்றைக் கொண்டசெவ்வியல்     நடனங்களில்     நாட்டுப்புற நடனங்களான குறவன் - குறத்தி நடனம், மயில் நடனம், பாம்பு நடனம் போன்றவைகளும் ஆங்காங்கே கதைப் போக்கிற்கு ஏற்ப அமைக்கப்படும்.

    நாட்டிய நாடகங்களில் பாத்திர அறிமுகப் பகுதி மிகச் சிறப்பான, ஆடலமைதி கொண்ட பகுதியாக அமையும். கட்டியங்காரன் வருகை, தலைமை மாந்தர்களான தலைவன், தலைவி அறிமுகம், துணை மாந்தர்களான பாங்கன் பாங்கி அறிமுகம்     போன்ற     பாத்திர     நிலைக்கேற்ற ஆடற்சொற்கட்டுகளுடன் அமையும்.

    இதில் தலைவி பாத்திர அறிமுகத்தின் பொழுது ஆடலின் அனைத்துச் சிறப்புக் கூறுகளும் பெற்ற நிலையில் அமைக்கப்படும். இருவர் திரையைப் பிடித்துக் கொண்டு வர திரை மறைவில் இருக்கும் தலைவியின் முதலில் பாதநிலையில் அமையும் ஆடல்களும் பிறகு படிப்படியாக தலைவியின் உருவம் காண்போர்க்குப் புலப்படும் வகையில் அமைக்கப்பட்டு, பிறகு திரையிலிருந்து வெளியே வரக்கூடிய நிலையில் அமைக்கப்படும்.

    இராகம் : சௌராட்டிரம் தாளம் - மிச்ரம்

    பல்லவி

    மோகினி வந்தாள் - அதிரூப மோகினி வந்தாள்

    தீர்மானம்

    தாம் - தீத்தாம் - தாம் - தெய் - தா - தெய் - தெய்
    தாம் - தீத்தாம் - தாம் - தெய் - தந்தெய் - தெய்
    தந் - தக - தக - தக - தக - தீந் - திகி - திதிகி
                     - திகி - திகி
    தக - தக - தக - திகி - திக - திகி - தளாங்கு தகதிக
                    ததிங்கிணதாம்.

    5.6.2 நாடக அமைதி

    நாட்டிய     நாடகங்களில் முதன்மையானது கதைக் கோப்பாகும். கதைக் கோப்பு என்பது நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியைக் குறிக்கும். நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக அமைய வேண்டும். காரண காரிய முறையில் அமைய வேண்டும். இதனை ஐவகைச் சந்திகள் என்பர்.

    1. அறிமுகம் - முகம்
    2. வளர்ச்சி - பிரதிமுகம்
    3. உச்சிநிலை - கருப்பம்
    4. வீழ்ச்சி - விளைவு
    5. பயன் - துய்த்தல்

    நாடகத்திற்குரிய இன்றியமையாததாக அமையும், பாத்திரம், உரையாடல், பாடல், காட்சி, களன், ஒப்பனை முடிவு போன்ற அங்கங்கள் கொண்டு நாட்டிய நாடகங்கள் அமையும். இவற்றில் ஒப்பனை பற்றிப் பார்ப்போம்.

    5.6.3 ஒப்பனை

    உயிருக்கு உடல் எப்படித் தேவையோ அதுபோல நாட்டிய நாடகத்திற்கு ஒப்பனை மிக அவசியமான தொன்றாகும். மேடையில் நடிகன் கதைமாந்தரின் ஆளுமையை முழுமையாக அடைவதற்குஒப்பனை பயன்படுகிறது. பாத்திரத்துக்கேற்ப நடிகனை உருமாற்றம் செய்கிறது. அரங்கில் உள்ள நடிகர் எந்தப் பாத்திரத்தை எதிரொலிக்கிறார் என்பதைக் காட்ட ஒப்பனை உதவுகிறது.

    இதனை அவிநய வகைகளுள் ஒன்றான ஆகாரிய அவிநயம் என்பர். ஆடை அலங்காரங்கள், முகமுடிகள், முகவண்ணம் பூசுதல் ஆகியவை மிக முக்கியப் பங்கு பெறுகின்றன.

    வீர உணர்வுடைய மாந்தர்க்குச் சிவப்பு நிறமும் கண்ணன் போன்ற மாந்தர்க்கு நீல நிறமும் சூர்ப்பனகை, கூனி போன்ற பாத்திரத்திற்குக்              கறுப்பு நிறமும் என

    நிறங்களை முகத்தில் பூசுவர்.

    நாட்டிய நாடகங்களில் முகமூடி பயன்படுத்தப்படுவதும், சிகை அலங்காரம் கதைமாந்தர்க்கு ஏற்ப அமைக்கப்படுவதும் உண்டு.

    பாத்திரத்திற்கேற்ற அணிகலன்கள் அணிவிக்கப்படுகின்றன. தலைநகைகள், மகுடம், சுட்டிகை, ஆரம், கைவங்கி, வளையல்கள், மேகலை, சலங்கை போன்ற அணிகலன்கள் அணிவிக்கப்படும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-11-2017 12:25:54(இந்திய நேரம்)