Primary tabs
-
2.0 பாட முன்னுரை
தமிழ்ச் சிறுகதை உலகிலும் புதின உலகிலும் தமக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தி. ஜானகிராமன் என்று சொல்லலாம். அவருடைய மோகமுள் என்ற புகழ்பெற்ற புதினம் திரைப்படமாகவும் வந்தது. அவ்வகையிலும் அவர் நன்கு அறிமுகமானவர். தஞ்சை மாவட்ட மணம் கமழச் சிறுகதைகளும், புதினங்களும், நாடகங்களும் படைத்தவர். உரையாடல், பேச்சு வழக்கு, சூழல் ஆகியவற்றால் தஞ்சை மண்ணையும், மக்களையும் கண்முன்னே நிறுத்துபவர். இவர் படைத்த சிறுகதைகள் எண்பதிற்கும் மேற்பட்டவை. இவை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகள் சுதேசமித்திரன், கல்கி, தினமணி கதிர், கலைமகள், அமுதசுரபி, சந்திரோதயம், கலாவல்லி, கணையாழி, உமா, காதல் ஆகிய இதழ்களில் வெளிவந்தன. பின்னரே சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.