Primary tabs
-
2.6 தொகுப்புரை
தி.ஜா.வின் ஏழு சிறுகதைத் தொகுதிகளிலும் மொத்தம் 80க்கும் மேம்பட்ட சிறுகதைகள் உள்ளன. மனிதனும், அவன் உணர்வுகளும் என்ற அடிப்படையில் தீட்டப்பட்ட ஓவியங்களாக இச்சிறுகதைகள் அமைந்துள்ளன. கதைமாந்தர் அனைவரும் இவ்வுலகில் நாம் காணும் மனிதர்களே. ஆகவே படிப்பவர்கள் இப்படைப்புகளை ரசித்துப் படிக்க முடியும்.
மனித மனத்தின் உயர்வையும், தாழ்வையும் ஒருங்கே உணர்த்தும் கதைகள் பல உண்டு. மனித மனத்தின் விசித்திரங்களைக் கலை உணர்வோடு, வாழ்க்கை மீதான ரசனையோடு படைத்துள்ளார். தி.ஜா. தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆதலால் அந்த ஈடுபாடு அவர் கதைகளில் வெளிப்பட்டுத் தெரிவதைக் காணலாம். காவிரி நீராடல், நஞ்சையும், புஞ்சையும் வளம் சேர்க்கும் தஞ்சை மண், கள்ளிச் சொட்டாய் மணக்கும் காப்பி, வெற்றிலை, பாக்கு, புகையிலை விரும்பிகள் இக்கதைகளில் ரசனையோடு சொல்லப்படுவதைக் காணலாம். அப்பாவிகளையும் சூழ்ச்சிக்காரர்களையும், சத்தியவான்களையும், ஏமாற்றும் பேர்வழிகளையும், வாய்ச்சொல் வீரர்களையும் கிண்டலும் கேலியும் கலந்த நடையில் இச்சிறுகதைகளில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இயல்பாக அமையும் நகைச்சுவையும் உள்ளும், புறமுமான கதை மாந்தர் வர்ணனையும் பொருத்தமான உவமையும், பழமொழிகளும் அனுபவ அறிவுரைகளும் தி.ஜா.வின் கதைகளைச் சிறப்பிக்கின்றன.
வாழ்க்கையின் பல அம்சங்களையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். கதைப் பின்னல், வெளிப்படுத்தும் உத்தி முறை ஆகியன சிறப்பம்சங்கள். இசை மொழி வேறுபாடுகளைக் கடந்த சிறப்புடையது என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்தும் சிறுகதை போன்றவை ஆசிரியரின் இசை ஈடுபாட்டை உணர்த்துகின்றன. வாழ்க்கையின் தேடல் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. பல்வகைப்பட்ட வாழ்க்கைத் தேடல்களை எடுத்துக்காட்டும் கதைகளையும் தி.ஜா. படைத்துள்ளார். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றவர் தி.ஜானகிராமன் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.