Primary tabs
- 2.1 ஆசிரியர் அறிமுகம்
தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தில் தேவங்குடி என்ற ஊரில் பிறந்தவர். 28.06.1921 இல் பிறந்து 1983 நவம்பரில் அமரரானவர். தம்முடைய 16-17 வயதிலேயே எழுத்துப் பணியினைத் தொடங்கி விட்டார். கும்பகோணம் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து, சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றார். 1954 முடிய 11 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார். 1954இல் அகில இந்திய வானொலி சென்னைப் பிரிவில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றினார். 1968 முதல் டில்லி வானொலி நிலையத்தில் பணியாற்றி 1979இல் பணி ஓய்வு பெற்றார். எனினும் ஆகாசவாணி, சிறப்புப் பேராசிரியர் என்ற பதவி கொடுத்து இவரைக் கௌரவித்தது. ‘கணையாழி’ இதழில் கௌரவ ஆசிரியராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றியுள்ளார். தந்தையிடமும் பிற ஆசிரியர்களிடமும் இசைப்பயிற்சி பெற்ற இவருக்கு இசையில் ஈடுபாடு உண்டு. ஜப்பான், செக்கோஸ்லோவேக்கியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இலக்கிய உலகம் இவரை, தி.ஜா என்று அழைப்பதைப் போல் நாமும் இனி இவரை தி.ஜா என்றே அழைப்போமா!
தி.ஜா. ஒன்பது புதினங்கள் படைத்துள்ளார். 1963 முதல் 1995 முடிய உள்ள காலங்களில் இவர் சிறுகதைகள் 7 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவை 1) கொட்டு மேளம், 2) சிவப்பு ரிக்ஷா, 3) அக்பர் சாஸ்திரி, 4) யாதும் ஊரே, 5) பிடி கருணை, 6) சக்தி வைத்தியம், 7) மனிதாபிமானம் ஆகியன.
கமலம், சிவஞானம் என்பன இவருடைய நெடுங்கதைத் தொகுப்புகளாகும். நாலுவேலி நிலம், வடிவேல் வாத்தியார், டாக்டருக்கு மருந்து ஆகியவை இவர் படைத்த நாடக நூல்கள். மேலும் இவர் உதயசூரியன், நடந்தாய் வாழி காவேரி, கருங்கடலும் கலைக்கடலும் ஆகிய பயண நூல்களையும் படைத்துள்ளார்.
தி.ஜா.வினுடைய புதினங்களில் மோகமுள், மரப்பசு ஆகியவை ஆங்கில மொழியிலும், மலையாள மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய சிறுகதைகள் ரஷ்ய, ஆங்கில, இந்தி, கன்னட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நாலுவேலி நிலம் என்ற நாடகம் 1959இல் திரைப்படமாக்கப்பட்டது. மோகமுள் புதினமும் திரைப்படமாக வெளிவந்தது.
சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுதி 1979இல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது. இத்தொகுதிக்கு இலக்கியச் சிந்தனைப் பரிசு 1984இல் கிடைத்துள்ளது. அக்பர் சாஸ்திரி சிறுகதைத் தொகுதி எட்டாம் பதிப்பாக 2002 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
"உலகத்துச் சிறுகதைகள் எதனால் மேம்பட்டு விளங்குகின்றனவோ, அத்தகைய மேன்மை வாய்ந்த குணங்களைப் பெற்றவை தி.ஜா. கதைகள்" என்று பாராட்டுகிறார் ந.சிதம்பர சுப்பிரமணியன் (சிவப்பு ரிக்ஷா, முன்னுரை, ப.6).