தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொன்னீலன்

  • 5.1 பொன்னீலன்

    தற்பொழுது வாழ்ந்துவரும் எழுத்தாளர்களுள் இலக்கியத்தரமான படைப்புகளைப் படைப்பவர் பொன்னீலன். பொன்னீலனின் இயற்பெயர் கண்டேஸ்வர பக்தவத்சலன். கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகேயுள்ள மணிகட்டிப் பொட்டல் என்ற கிராமத்தில் 1940-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் பிறந்தார். இவர் பெற்றோர், சிவ. பொன்னீலவடிவு, அழகிய நாயகி அம்மாள். இவருடைய தாயார் தன் முதுமைக்காலத்தில் எழுதிய கவலை என்னும் நாவல் மிகவும் புகழ்ப் பெற்றது.

    எம்.ஏ., எம்.எட்., பட்டங்களைப் பெற்ற இவர் ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், கல்வித்துறை உதவி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர் எனப் படிப்படியாகப் பணி உயர்வு பெற்று முப்பத்தேழு ஆண்டுகள் கல்விப்பணியாற்றியுள்ளார். 1967-ஆம் ஆண்டு உமாதேவியைத் திருமணம் செய்து கொண்டார். கவிதை, சிறுகதை, நாவல், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என பல்வேறு இலக்கியத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார்.

    • பரிசுகள்

    சமுதாயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட பொன்னீலனுக்குக் கிடைத்த பரிசுகள் பின்வருமாறு:

    கரிசல் - சிறந்த நாவலுக்கான தமிழக அரசுப் பரிசு (1975)
    புதிய தரிசனங்கள் - சாகித்ய அகாதெமி விருது (1994)

    5.1.1 பொன்னீலனின் படைப்புகள்

    பொன்னீலனின் புதினங்களைப் பற்றி அறியும் முன்னர் அவரது படைப்பு சார்பான வாழ்வை அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது. நாவல்களோடு, சிறுகதைகள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், தொகுப்பு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், விமர்சன நூல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். மேலும் பயணநூல் ஒன்றையும், இருநூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதில் இருந்து இவருடைய இலக்கியத்தரத்தை அறியலாம்.

     

    குன்றக்குடி அடிகளார்
     

    இவர் கவிதை, சிறுகதை, நாவல் என பலதுறைகளில் தன் பங்களிப்பைச் செய்திருந்தாலும் நாவல் எழுதுவதில் தான் பொன்னீலனுக்கு மிகுந்த விருப்பம் என்று அவரே நேர்காணலில் கூறியிருக்கிறார். இவருடைய கரிசல், கொள்ளைக்காரர்கள், புதிய மொட்டுகள் போன்ற நாவல்களும், தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி என்ற வாழ்க்கை வரலாற்று நூலும் சில பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னீலனின் நாவல்கள் அனைத்தும் விடுதலைக்குப் பின்பு எழுதப்பட்டவை. இவருடைய நாவல்கள் பெரும்பான்மையும் மார்க்சீயக் கோணத்தில் எழுதப்பட்டவை.

    1976-ஆம் ஆண்டு பொன்னீலன் எழுதிய முதல் நாவல் கரிசல் என்பதாகும். இந்நாவல் முழுமையும் மார்க்சீய நோக்கில் எழுதப்பட்டது. இந்நாவலைத் தொடர்ந்து, கொள்ளைக்காரர்கள், ஊற்றில் மலர்ந்தது, தேடல், புதிய தரிசனங்கள், புதிய மொட்டுகள், மறுபக்கம் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:29:55(இந்திய நேரம்)