தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதிய மொட்டுகள்

  • 5.2 புதிய மொட்டுகள்

    புதிய மொட்டுகள் என்ற புதினத்தின் கதைக்கரு, கதாபாத்திரங்கள் கதைப்பின்னல், கதைச்சுருக்கம், சமுதாயச் சிந்தனைகள் ஆகியவற்றோடு, இந்நாவலில் கையாளும் உத்திமுறைகளைப் பற்றியும் இங்கு விரிவாகக் காணலாம்.

    • கதைக்கரு

    மூடநம்பிக்கைகளும், அடிமைத்தனங்களும் மிகுந்த ஒரு கிராம சமுதாயத்தை எதிர்த்து ஒரு தனிமனிதன் போராடுகின்றான். அப்போது சமுதாயம் அவனை எவ்வித இன்னல்களுக்கெல்லாம் ஆளாக்குகின்றது என்பதைக் கருவாகக் கொண்டு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.

    புதிய மொட்டுகளின் கதைத்தலைவன் மனித சமத்துவ உரிமை, அடிப்படை வாழ்க்கை உரிமை, கல்வி உரிமை, தொழிலாளர் உரிமை, சாதி எதிர்ப்பு, உழைப்பவர் மேம்பாட்டு உரிமை, பெண் உரிமை, விதவை மறுவாழ்வு உரிமை இவற்றிற்காகச் சமுதாயத்தை எதிர்த்துப் போராடுகின்றான்.

    • கதை மாந்தர்கள்

    இந்நாவலின் கதை மாந்தர்கள் சுதந்திரராஜன் என்ற எசக்கிமாடன், தங்கரளி, பாலையா, பாக்கியராஜ், பெருமாள் பிள்ளை, தையல்காரர், வெற்றிப் பெருமாள், ஆடும்பெருமாள், டி.எஸ். பொன்னம்பெருமாள், நொண்டிச்சிங்காரம் பகத்சிங், ரசூல், துரைசாமி, முதலாளி, வடிவு, முதலாளிமகன், தங்கப்பழம், தொரப்பழம், சுப்பையா போன்றவர்களாவர். இவர்களைத் தவிர, பிச்சிப்பூ, சுதந்திரராஜனின் தாய், தம்பி, தங்கை, பள்ளிக்கூடத்தின் முதல்வர், சுப்பையாவின் மனைவி, தங்கரளியின் சிற்றப்பன், கோயில் பூசாரி, காவலதிகாரி போன்ற பாத்திரங்களும் ஓரிரு இடங்களில் வருகின்றனர்.

    • கதைப்பின்னல்

    புதிய மொட்டுகள் நாவலில் கதைத் தலைவனாகச் சுதந்திரராஜன் படைக்கப்பட்டுள்ளான். இவனைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தின் வழி பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்டு, மனித உரிமைகள், சாதி அதிகார வர்க்கம், அரசியல், சட்டம், காவல், கல்வி முதலியன எவ்வாறு மக்களை ஒடுக்குகின்றன என்பதை மிகத்தெளிவாகப் பொன்னீலன் எடுத்துக்காட்டியுள்ளார். பொருளாதாரமே தனிமனிதன் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது. காவல் துறையினர் மனித உரிமை மீறல்களைச் செய்கின்றனர். இவ்வாறு கதைப்பின்னல் அமைந்துள்ளது.

    5.2.1 கதைச்சுருக்கம்

    சுதந்திரராஜனின் சமாதியைக் காட்டுவதற்கு அவனுடைய நண்பன் துரைசாமி, ரசூல் என்பவரை அழைத்துக்கொண்டு தன்னுடைய கிராமத்திற்குச் சென்றான். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அவனுடைய சமாதியைக் காட்டி, அவன் சமாதி முன்பு நடக்கும் நிகழ்ச்சியையும், சுதந்திரராஜனின் வரலாற்றையும் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தோடு சேர்த்து ரசூலிடம் கூறினான்.

    • சுதந்திரராஜனின் நினைவு நாள்

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரராஜனின் நினைவு நாளைக் கிராமத்து மக்கள் கொண்டாடுவர். அவனுடைய நண்பர்கள் அவன் சமாதியைச் சுத்தம் செய்துவிட்டு சென்று விடுவர். மாலையில் சமாதியில் அவனுடைய படத்தை வைத்து மலர்களால் அலங்கரிப்பர். பின்பு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடிவிடுவர். சுதந்திரராஜனுக்குப்பிடித்த ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாரதியார் பாடலை அவன் நண்பன் நொண்டிச் சிங்காரம் பாடுவான். கூட்டத்தில் ஒருவர் சுதந்திரராஜனைப் பற்றிப் பேசுவார். பின்பு கூட்டம் முடிந்ததும், சுதந்திரராஜன் மனைவி தங்கரளி எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்துப் போய்ச் சுக்கு நீர் கொடுப்பாள். அவர்கள் எங்கிருந்தாலும் என்ன வேலை செய்தாலும் அன்றைய தினம் ஒன்று கூடி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    • சுதந்திரராஜனின் நட்பும் நல்லெண்ணமும்

    துரைசாமியின் தந்தை பக்கத்து ஊரைச் சார்ந்தவர். வரிபாக்கி செலுத்தாததால் அவருடைய குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கின்றனர். அதனால் சுதந்திரராஜனின் ஊருக்கு அவர்கள் வந்து சேர்கின்றனர். வந்த அன்றிலிருந்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். துரைசாமியும், சுதந்திரராஜனும் ஒன்றாகப் பள்ளிக் கூடம் சென்றனர். அப்போது சுதந்திரராஜனின் இயற்பெயர் எசக்கிமாடன். அவன் நன்றாகப் படித்தான். குறும்புகளும் செய்தான். பாடம் படிக்காமல் வந்த முதலாளி மகனை ஆசிரியர் அடிக்காமல் தன்னை மட்டும் அடித்ததற்குக் காரணமென்ன? என்று கேட்டான். சலவைத் தொழிலாளியை ஊர்க்காரர்கள் இழிவாகப் பேசுவதைக் கண்டு எதிர்த்தான். தான் மட்டும் மரியாதைக் கொடுத்துப் பேசினான். மதிப்பும் மரியாதையும் மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம். தனக்குப் பிடித்ததை நிறைவேற்றினான். அதைப்போலவே தனக்குப் பிடிக்காத செயல்களைத் தீவிரமாக எதிர்த்தான்.

    • ஆசிரியரும் பெயர் மாற்றமும்

    பெருமாள் பிள்ளை என்ற ஆசிரியர், புதிதாக மாற்றலாகி பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அவர் தேசப்பற்றும், விடுதலை வேட்கையும் உடையவர். அவரிடம் சுதந்திரராஜன் அதிக அன்பும் மரியாதையும் கொண்டான். அவர் காந்தியைப் பற்றியும், நேருவைப் பற்றியும், நாட்டு விடுதலை பற்றியும் அடிக்கடி கூறுவார். ஒருநாள் பெருமாள் பிள்ளை ஆசிரியர் இரவு ஏழு மணிக்குப் பள்ளிக்கூடத்திற்கு வரச்சொன்னார். இருவரும் சந்தித்தனர். ஆசிரியர், நம் நாடு விடுதலை அடையப்போகிறது. நாளை இரவு பன்னிரண்டு மணிக்கு ஜவஹர்லால் நேரு தேசியக்கொடி ஏற்றி வைப்பார். நாடு முழுவதும் கொண்டாடுவர் என்று கூறினார். அப்போது சுதந்திரராஜன் நாமும் கொண்டாடுவோமா? என்று கேட்டான். அதற்கு ஆசிரியர், தான் ஊருக்குச் சென்று விடுவதாகவும், நீங்கள் கொடியேற்றிக் கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டு, “டேய் எசக்கிமாடா, இனிமேல் உன் பெயர் சுதந்திரராஜன்; உன் பெயரை மாற்றிவிடு” என்றார். அன்றிலிருந்து அவன் பெயர் ‘சுதந்திரராஜன்’ என்று ஆனது.

    • விடுதலை உணர்வும் தண்டனையும்

    மூன்றாம் நாள் சுதந்திரராஜனும், அவனுடைய நண்பர்களும் சேர்ந்து சப்பரம் செய்து அதில் காந்திப்படம் வைத்து ஊர்வலம் வந்தனர். சுதந்திரத்துக்கு ஜே, இந்தியாவுக்கு ஜே என்று கோஷம் போட்டனர். முதலாளி கேள்விப்பட்டு ஓடிவந்து காந்திப்படத்தைப் பிய்த்துப் போட்டார். அவர்களைத் தடியால் அடித்தார். சுதந்திரராஜனின் தந்தை ஓடி வந்து மகனைக் காப்பாற்றி விட்டு, முதலாளியைக் கீழே தள்ளி விட்டார். அதனால் அன்று மாலை ஊர்க்கூட்டம் கூடி அவருக்கு இருபத்தோரு தேங்காய் கோயிலில் உடைக்க வேண்டும் என அபராதம் விதித்தனர். சுதந்திரராஜனுக்கு மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதைமீது ஊர்வலம் வரச்செய்ய வேண்டுமென்று கூட்டத்தில் முடிவு எடுத்தனர். இதனால் சுதந்திரராஜன் ஊரைவிட்டே ஓடிவிட்டான்.

    • மீண்டும் ஊர் வருகையும் புரட்சியும்

    ஊரைவிட்டு ஓடிய சுதந்திரராஜன் காட்டில் அலைந்து திரிந்து வேறு ஊருக்குச் சென்று வேலை செய்து விட்டு, இறுதியாகத் தக்கலை என்ற ஊரை அடைந்தான். அவ்வூரிலிருந்த தையல்காரரிடம் காசா போடும் வேலையில் அமர்ந்தான். அந்தத் தையல்காரர் அவனுக்கு உலக அறிவைப்பற்றியும், புத்தகம் படிப்பது பற்றியும் சொல்லிக் கொடுத்தார். நாட்டு நடப்பை அறிந்த சுதந்திரராஜன் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி அங்குத் தையல்கடை வைத்தான். தன் தம்பிக்கு மளிகைக்கடை வைத்துக் கொடுத்தான். மற்ற நண்பர்கள் எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் சேர்ந்திருந்தனர். மாலைப்பொழுதில் தையல்கடையில் பழைய நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடிப்பேசினர். சுதந்திரராஜன் மூடநம்பிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தான். பெரியார், அண்ணாதுரை, பாரதியார், பாரதிதாசன் புத்தகங்களையும், பகவத்கீதை போன்ற நூல்களையும் கற்ற சுதந்திரராஜன், அவ்வூர் முதலாளி, கோயில் பணத்தைக் கொள்ளையடிப்பதைக் கண்டு பிடித்து மக்களுக்கு எடுத்துரைத்தான். கோயில் பணத்தை வைத்து மக்களுக்குப் பல நல்ல காரியங்கள் செய்யலாமென்று கூறினான். கடவுள் எதிர்ப்புணர்ச்சி அவனை ஆட்டிப்படைத்தது. அதன்பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து முதலாளி சுதந்திர தினவிழா கொண்டாடினார். அவ்விழாவிற்குச் சுதந்திரராஜனும் அவனுடய நண்பர்களும் செல்லவில்லை. அதற்குப் பிறகு முதலாளியின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவருடைய வீட்டில் ஒரு பகுதி ரேஷன் கடையாக மாறியது. ஏழை மக்களின் நிலங்களெல்லாம் முதலாளியின் நிலத்தோடு ஒட்டிக்கொண்டது.

    • தேர்தலும் மோதலும்

    சுதந்திரராஜனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து ஊரில் நாடகம் நடத்தினர். முதலாளி தூண்டுதலின் பேரில் காவலதிகாரிகள், சுதந்திரராஜனையும் அவனுடைய நண்பர்களையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். எனினும் அவர்கள் மீண்டும் வக்கீல் மூலமாக முயன்று நாடகத்தை நடத்தினர். இந்தச் சமயத்தில் ஊரில் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் வந்தது. முதலாளியை எதிர்த்து தேர்தலில் நின்ற சுதந்திரராஜனால் வெற்றி பெற இயலில்லை. பணபலமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற முதலாளி, சுதந்திரராஜனுக்கு ஏதாவது ஒரு வகையில் தீங்கு இழைத்துக் கொண்டே இருந்தார்.

    • மோதலும் சிறைத் தண்டனையும்

    ஊருக்குத் தெற்கில் மாந்தோப்பில் குடியிருந்த வடிவும் அவள் மகள் தங்கரளியும் சுதந்திரராஜனின் உதவியால் அரிசி வியாபாரம் செய்தனர். தங்கரளியை மனதார விரும்பிய சுதந்திரராஜன் அவள் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் பொழுது முதலாளி பத்து ஆட்கேளாடு வந்து அவனை அடித்தார். இவன் மறுநாள் காவல் அதிகாரியிடம் சொல்லி முதலாளியையும் அவர் ஆட்களையும் பிடித்துச் சிறையில் வைத்துவிட்டான். வெளியில் வந்த முதலாளி, தன்னுடைய மாந்தோப்பில் சுதந்திரராஜன் மாங்காய் திருடியதாகப் பொய்க் குற்றம் சுமத்தி ஆறுமாதம் சிறை தண்டனையை வாங்கிக் கொடுத்தார்.

    • விடுதலையும் விவாகமும்

    தங்கரளியும் சுதந்திரராஜனும் ஒருவரையொருவர் விரும்புவதையறிந்த முதலாளி, சுதந்திரராஜன் சிறையிலிருக்கும் போதே, பொன்னம்பெருமாள் என்பவருக்குத் தங்கரளியைத் திருமணம் செய்து வைத்தார். தங்கரளி மறுத்த போதும் அதை முதலாளி பொருட்படுத்தவில்லை. தங்கரளியின் கணவனான பொன்னம் பெருமாளுக்கு நான்கு மனைவிகளும் இறந்து விட்டனர். தங்கரளி ஐந்தாவது மனைவி, சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சுதந்திரராஜன், தன்னுடைய தையல் எந்திரங்களைத் தந்தை விற்றுவிட்டதால், கயிறு முறுக்கும் பட்டறையில் வேலைக்குப் போனான். தங்கரளியின் கணவன் பொன்னம்பெருமாள் திடீரென இறந்தார். தங்கரளியின் வாழ்க்கையைப் பற்றிக் கவலையுற்ற வடிவு பைத்தியமானாள். தாய் செய்த அரிசி வியாபாரத்தைத் தங்கரளி செய்தாள். சுதந்திரராஜன் தங்கரளியை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று பதிவுத்திருமணம் செய்து கொண்டான். விதவையைத் திருமணம் செய்து கொண்டதால் ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால் அவனுடைய நண்பர்கள் ஆதரவளித்தனர்.

    • தொழிலாளர் சங்கமும் முடிவும்

    அவன் கயிற்றுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தொழிற்சங்கம் தொடங்கினான். துரைசாமியும் தொழிற்சங்கத்தில் சேர்ந்தான். தொழிலாளர் போராட்டத்தின் முடிவில் பாதியளவு ஊதிய உயர்வு கிடைத்தது. தொழிலாளர்கள் திருப்தியடைந்தனர். அதன் பின்னர் சுதந்திரராஜன் வட்டார அளவில் ஒரு கயிற்றுத் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினான். அதில் எழுநூற்றிற்கும் மேற்பட்டவர்களைச் சேர்த்தான். ஒரு மாதம் கழித்து இரவில் சுதந்திரராஜனைச் சிலர் அடித்துப் போட்டதில் கைவிரல் முறிந்து போனது. இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த போது எலும்பும் தோலுமாக இருந்த சுதந்திரராஜன் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனான். அவனுடைய நண்பர்களும் வெளியூரிலிருந்த தொழிலாளர்களும் பிணத்தை அடக்கம் செய்தனர்.

    • தொண்டும் புகழும்

    அந்தப் பகுதியில் யாருக்கும் கிடைக்காத மரியாதை சுதந்திரராஜனுக்குக் கிடைத்தது. அனுதாபக் கூட்டம் நடத்தினார்கள். சுதந்திராஜனின் இறப்புக்குப் பின்னர் அந்தக் கிராமப்புறத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளும் அச்சமும் இல்லை. பணக்காரன் எதிரில் ஏழை ஒதுங்கி நிற்கவில்லை. கயிறு திரிக்கின்ற தொழிலாளர்கள் அரைவயிற்றுக் கஞ்சியாவது குடிக்கும் நிலை ஏற்பட்டது. சுதந்திரராஜன் சொல்லிக் கொடுத்தும், புத்தகம் கொடுத்தும் படிக்க வைத்த இளைஞர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் வித்தாக இருந்தவன் சுதந்திரராஜன்தான். அந்த வட்டாரத்தில் பகுத்தறிவுச் சிந்தனையைப் பயிர் செய்தவன் சுதந்திரராஜன். ஆனால், இதனையெல்லாம் காண சுதந்திரராஜன் இல்லை என்று துரைசாமி, ரசூலிடம் சுதந்திரராஜனின் வாழ்க்கையைப் பற்றிக் கூறினான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:29:58(இந்திய நேரம்)