தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சேதுப்பிள்ளை உரைநடையில் மொழிக்கலப்பின்மை

  • 1.6 சேதுப்பிள்ளை உரைநடையில் மொழிக்கலப்பின்மை

    தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டை ‘உரைநடைக் காலம்’ என்று குறிப்பது பொருந்தும். இந்த நூற்றாண்டில்தான் உரைநடையில் சிறுகதை, புதினம் (நாவல்) முதலிய இலக்கியங்கள் வளர்ந்தன. கட்டுரை நூல்களும் எழுந்தன. எனினும் உரைநடையில் அமைந்த நூல்கள் அனைத்தும் தனித்தமிழில் அல்லது தூய தமிழில் அமைந்தவை என்று உறுதியாகச் சொல்வது அரிது. இவற்றின் மொழிநடையில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருந்தன. இவ்வாறு தமிழோடு பிறமொழிச் சொற்கள் கலந்து நிற்பதை ‘மொழிக்கலப்பு’ என்று அழைக்கலாம் அல்லவா?

    இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழில் உரைநடை எழுதியவர்கள் தமிழோடு வடமொழிச் சொற்களையும் கலந்து எழுதினர். இந்த உரைநடை தமிழ் மட்டும் அறிந்த எளிய மக்களுக்குப் புரிவதில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் எழுதுபவர்கள் தமிழோடு ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதியும் பேசியும் வந்தனர். இந்நிலை ஒரு புதுவகை ‘உரைநடையை’ உருவாக்கிற்று. இவ்விரு முறைகளும் தமிழின் தகைமைக்கு இழுக்கு எனக் கருதியவர் சேதுப்பிள்ளை. தமது உரைநடையில் அழகினைக் கூட்டினார்; பிறமொழிச் சொற்களைக் கழிக்க முனைந்தார்; வெற்றியும் கொண்டார்.

    1924-இல் சேதுப்பிள்ளை, தம் முதல் நூலான ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்னும் ஆய்வு நூல் தொடங்கி ஏறக்குறைய 35 ஆண்டுகள் தமிழ் உரைநடைக்கு நூல்கள் வழி வளம் சேர்த்தார். இக்காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலம் படித்திருந்த பலரும் தங்கள் மொழிநடையில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதினர். சிலர் வடசொற்களை வரம்பின்றிக் கலந்து எழுதினர். ஆனால் இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடையில் ஆங்கிலச் சொற்களைக் காண்பது அரிது; வடமொழிச் சொற்களும் கூட மிகவும் தவிர்க்கப்பட்ட சொற்கள் ஆகும். எனவே சேதுப்பிள்ளையின் உரைநடை பிற மொழிக் கலப்பற்ற நடையாகும். அழகு தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தித் தாம் கருதிய செய்தியை உறுதியாய் உரைக்க இயலும் என்பதற்குச் சேதுப்பிள்ளையின் அணிநிறை தமிழ் நடை சான்றாக விளங்குகின்றது.

    கொச்சையான பேச்சுமொழிச் சொற்கள்; வலிந்து புகுத்தப்படும் வடமொழிச் சொற்கள்; தேவையில்லா நிலையில் ஆங்கிலச் சொற்கள் என எந்தவிதக் கலப்பும் இல்லாத தமிழ் நடையே சேதுப்பிள்ளை உரைநடை என்று உறுதியாகக் கூறலாம்.

    மாணவர்களே! சேதுப்பிள்ளையின் உரைநடை, முட்கள் என்னும் பிறமொழிச் சொற்கள் வந்து குத்தாத, இனிக்கும் பலாச் சுளையான தமிழ்ச் சொற்களால் மட்டும் அமைந்த இனிய தமிழ்நடை என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:43:05(இந்திய நேரம்)