தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை

    சேதுப்பிள்ளை, திருநெல்வேலி மாவட்டத்தில் இராசவல்லிபுரத்தில் பிறவிப்பெருமான் பிள்ளையின் மகனாய்த் தோன்றியவர் என்பதைக் குறிக்கும் வகையில் இரா.பி. சேதுப்பிள்ளை என்று அழைக்கப் பெறுகிறார். இவர் பல்கலைக் கழகப்பட்டமும் சட்டத்தில் பட்டமும் பெற்று வழக்கறிஞராய் வாழ்க்கையைத் தொடங்கினார்.

    தமிழில் சேதுப்பிள்ளைக்கு இருந்த ஆற்றல் மிகுபுலமை அவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் சேர்ப்பித்தது. பின்னர் 1936 முதல் 25 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். சேதுப்பிள்ளை இருபதுக்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘தமிழின்பம்’ என்பது இவருக்குச் சாகித்ய அக்காதமி விருதினைப் பெற்றுத் தந்தது; தமிழகம் - ஊரும் பேரும் என்பது இவரது நூல்களில் குறிப்பிடத் தக்கதாகும். இவரது தமிழ் உரைநடையின் தனிச்சிறப்பைக் கருதி, ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ ‘சொல்லின் செல்வர்’ எனவரும் பட்டங்களைத் தமிழகம் வழங்கிச் சிறப்பித்தது.

    சேதுப்பிள்ளையின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகள் அவரது உரைநடையைக் கவிதை நிலைக்கு உயர்த்தியுள்ளன. சேதுப்பிள்ளையின் உரைநடையில் எதுகையும் மோனையும் எடுப்பாக அமைந்து இன்பத் தமிழின் இனிமை நலனை வெளிப்படுத்துகின்றன.

    பஞ்சகாலத்தில் ‘நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர்’ எனவரும் தொடர்கள் சேதுப்பிள்ளையின் உரைநடையில் அமைந்திருக்கும் எதுகை நயத்திற்கும் மோனை நயத்திற்கும் எடுத்துக் காட்டுகள் ஆகின்றன. இவரது உரைநடையில் இயைபு நயமும் இடம் பெற்றிருக்கிறது. முரண் அழகும் இயல்பாக அமைந்துள்ளது; இவரது உரைநடையில் உவமையும் சிறப்பாக அமைந்து நிற்கிறது. இலக்கிய மேற்கோள்கள் இலக்கியப் பலாவை இனிக்கும் தேனில் தொட்டுத் தருவனவாக அமைகின்றன.

    சேதுப்பிள்ளையின் உரைநடை பீடும் மிடுக்கும் வீறும் கொண்டது; அடுக்குமொழிகளை அழகுறப் பெறுவது; எதுகையும் மோனையும் இயல்பாக அமையப் பெற்ற கவிதை நடைகொண்டது’ இவற்றைச் சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மைகள் எனலாம்; சேதுப்பிள்ளை தமிழ் உரைநடைக்குத் தந்த பங்களிப்பாக, கனிந்த சொற்களால் காட்சிகளை விளக்குகின்ற அவரது வருணனை நடையையும்; தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் ஒளிந்திருக்கும் வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தியதையும்; எளிய மக்களும் தமிழ் இலக்கியச் செய்திகளைத் துய்க்கும் வகையில் எழுதிய இலக்கிய உரைநடை எளிமையையும் குறிப்பிடலாம். இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை பிறமொழிக் கலப்பற்றது. அவரது உரைநடையில் ஆங்கிலச் சொற்கள் அறவே இல்லை; வடமொழிச் சொற்களும் மிக அரிதாகவே காணப்படுகின்றன.



    1.
    சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மைகள் மூன்றினை எழுதுக.
    2.
    தமிழ் உரைநடைக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பைச் சுட்டுக.
    3.
    மொழிக்கலப்பு என்றால் என்ன?
    4.
    சேதுப்பிள்ளையின் உரைநடையில் மொழிக்கலப்பு உண்டா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 12:27:37(இந்திய நேரம்)