தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நாடகங்களின் புதிய வகைப்பாடுகள்

  • 3.2 நாடகங்களின் புதிய வகைப்பாடுகள்

    மேற்குறிப்பிட்டவைகளைத் தவிரவும், நாடகங்களை ஆய்வு செய்த பேராசிரியர்கள் மேலும் பல பிரிவுகளைக் குறிக்கின்றனர்.

    3.2.1 பின்புல நிலையில் நாடக வகைகள்

    நாடக ஆக்கத்துக்குரிய கருத்துப் பின்புலம், மேடைப் பின்புலம், அமைப்புப் பின்புலம், மொழிப் பின்புலம் போன்றவற்றை எல்லாம் மனம் கொண்டு நாடக ஆய்வாளர்கள் நாடகங்களை வகைப்படுத்துகின்றனர்.

    பேராசிரியர் ஆறு. அழகப்பன் பின்வரும் வகைகளைத் தருகிறார். அவை:

    1) தெருக்கூத்து
    2) குழந்தை நாடகம்
    3) வானொலி நாடகம்
    4) மொழிபெயர்ப்பு நாடகம்
    5) மேடை நாடகம்
    6) அமெச்சூர் நாடகம்
    7) தேசிய நாடகம்
    8) ஓரங்க நாடகம்
    9) செய்யுள் நாடகம்
    10) ஒளி நாடகம்

    எனப் பத்து வகையாகத் தமிழ் நாடகங்களைப் பிரிக்கிறார். இந்த ஒவ்வொரு நாடக வகையிலும் உள்ளே அமையும் சிறு சிறு வகைகளையும் அவர் குறிக்கிறார்.

    பேராசிரியர் ஆறு. அழகப்பன் நாடகங்களை வகைப்படுத்துவதைப் போல் பேராசிரியர் ஏ.என்.பெருமாள் இலக்கிய நிலையில் நாடகங்களை வகைப்படுத்துகிறார். அவை:

    1) பாடல் நாடகங்கள்
    2) பாடல் உரைநடை நாடகங்கள்
    3) உரைநடை நாடகங்கள்
    4) கவிதை நாடகங்கள்
    5) உரைநடை கலந்த கவிதை நாடகங்கள்

    என ஐந்தாக வகைப்படுத்துகிறார்.

    பாடல் நாடகங்கள் என்று அவர் குறிப்பிடுவது இசைப்பாட்டு நாடகங்களையே ஆகும். ஆங்கிலத்தில் இவ்வகை நாடகங்களை ஆபெரா (Opera) என்று குறிப்பிடுவர். பதினெட்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நடிக்கப் பெற்ற நாடகங்கள் இசைப்பாடல் வடிவிலேயே அமைந்திருந்ததால் பாடல் நாடகங்கள் என்று பகுத்துள்ளார்.

    இசைப்பாட்டு நாடகங்களில் சிறிது சிறிது உரைநடை இடம் பெற்ற நிலையில் அவை, பாடல் உரைநடை நாடக வகைக்கு உள்ளாயிற்று.

    இசைப்பாடல், உரைநடை என்னும் கலப்பு நீங்கி முழுவதும் உரைநடையாகவே அமைந்த நாடகங்கள் பிற்காலத்தில் தோன்றின. இவ்வகை நாடகத்தைத் தோற்றுவித்த பெருமை பம்மல் சம்பந்த முதலியாரைச் சாரும். அவரால் 1891 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட புஷ்பவல்லி என்னும் நாடகம் முழுமையாக உரைநடையில் தோன்றிய முதல் உரையாடல் நாடகமாகும். தமிழில் தோன்றிய உரைநடை நாடகங்களில் மிகுந்த புகழ்பெற்றவையாக இராஜராஜ சோழன், வீரசுதந்திரம், பூவுக்குள் பூகம்பம், ஊஞ்சல் மனம் எனப் பல நாடகங்கள் திகழ்கின்றன.

    3.2.2 வடிவ நிலையில் நாடக வகைகள்

    நாடகங்களின் அமைப்பு அல்லது வடிவம் என்னும் அடிப்படையிலும் நாடகங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. வடிவ நிலையில் நாடகங்களை மூன்று வகையில் பகுத்துள்ளனர்.

    பொதுவாக நாடகங்கள் பலவிதமான அளவுகளைக் கொண்டு விளங்குகின்றன. நாடகக் கதைக் கருவுக்கேற்ப இந்த அளவுகள் வேறுபடுகின்றன.

    1. ஓரங்க நாடகம்

    ஒரு சில நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டுவதை ஓரங்க நாடகம் என்பர்.

    2. குறு நாடகம்

    குறுநாடகம் என்பது ஓரங்க நாடகத்தை விடச் சற்றுப் பெரியது. இந்த நாடகம் நடைபெறும் கால அளவு ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும்.

    நாடக உருவாக்கத்துக்கு மையமாக அமையும் கருத்துடன் சில துணைக் கருத்துகளும் குறுநாடகத்தில் இடம் பெறும்.

    3. ஓரங்க நாடகமும் குறு நாடகமும்

    ஓரங்க நாடகம் சிறுகதை போன்றது; குறுநாடகம் குறும்புதினம் போன்றது; பெருநாடகம் புதினம் போன்றது.

    4. நீள நாடகம்

    பெருநாடகத்தை முழு நீள நாடகம் என்றும் கூறுவர். இவ்வகை நாடகத்தில் கால அளவு இரண்டுமணி நேரத்திலிருந்து மூன்றரை மணிநேரம் வரை அமையும்.

    நாடகத்தின் மையக் கருத்தை நிலைநாட்டுவதற்காகக் கிளைக் கருத்தும் துணைக்கருத்தும் பெருநாடகத்தில் அமையும். அங்கம், காட்சி, காலங்கள் என்னும் நிலைகளில் நாடகம் விரிவாக்கம் பெறும்.

    ஓரங்க நாடகம், குறுநாடகம், பெருநாடகம் ஆகியன நடிப்பின் கால அளவைக் கொண்டும் அமைப்புக் கூறுகளைக் கொண்டும் பகுத்தறியப் படுகின்றன.

    3.2.3 உணர்ச்சிக் கூறுகளும் நாடக வகைகளும்

    மனித குலத்தின் அனைத்து வகையான உணர்ச்சிக் கூறுகளும் கலக்கும் இடம் நாடகமாகும். பாத்திரப் படைப்பின் வழியாகவும் கதை அமைப்பின் வழியாகவும் எட்டுவகை மெய்ப்பாடுகளும் உணர்ச்சிகளும் நாடகத்தில் ஒன்று சேர்ந்து காண்போரை மகிழ்விக்கின்றது. இத்தகைய உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டும் நாடகங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவை பின்வருமாறு:

    1) வேக உணர்ச்சி நாடகம் (Melodrama)
    2) துப்பறியும் நாடகம் (Detective Plays)
    3) மணவினை நாடகம் (Wedding Masque)
    4) உளவியல் நாடகம் (Psychological plays)
    5) அங்கத நாடகம் (Satirical Plays)
    6) நையாண்டி நாடகம் (Burlesque)
    7) கேலிக் கூத்து நாடகம் (Farce)

    ஆகியன உணர்ச்சிக்கூறு நாடக வகையுள் அடங்கும்.

    நாடகங்களைப் பல அடிப்படைகளில் வகைப்படுத்தினாலும் அவை,

    1) இன்பியல் நாடகம்
    2) துன்பியல் நாடகம்

    என்னும் இரு பெரிய வகையுள் முழுமை பெற்று விடும்.

    1)
    நாடகத்தின் இரு பெரிய வகைகள் யாவை?
    2)
    பழந்தமிழ் நாடக வகைகள் யாவை?
    3)
    மேடை நாடகமே தம் வாழ்வென வாழ்ந்த தமிழ் நாடகப்  பெரியவர் யார்?
    4)
    இலக்கிய நிலையில் நாடகங்களை எத்தனை வகையாகப் பிரித்திருக்கின்றனர்?
    5)
    வடிவ நிலையில் அமைந்த நாடக வகைகள் எத்தனை?
    6)
    பெரிய நாடகம் இன்னொரு பெயரிட்டு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2018 14:54:47(இந்திய நேரம்)