Primary tabs
3.4 சமய நாடகங்கள்
தமிழ்நாட்டில் சைவ, வைணவ நாடகங்களும் வீரவழிபாட்டு நாடகங்களும் கிறித்தவ, இசுலாமிய நாடகங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
புராண, இதிகாசக் கதைகள், ஸ்தல புராணக் கதைகள், சிறு தெய்வ வணக்கக் கதைகள், சமயத் தொண்டர்களின் கதைகள் ஆகியவை இவ்வகை நாடகங்களில் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப்புற மக்களின் கலை இரசனைக்கேற்ப நாட்டுப்புறத் தெய்வம் பற்றிய கதைகளும், நாட்டுப்புறத் தலைவர்கள் பற்றிய கதைகளும் நாடகங்களாக ஆக்கம் பெற்றுள்ளன. இராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளும் அதன் கிளைக்கதைகளும் சமூகத்தின் அனைத்து மக்களுக்கான நாடகங்களாக ஆக்கம் பெற்றுள்ளன.
பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றை ஒட்டியும் பல நாடகங்கள் உருவாகி இருக்கின்றன.
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாடகம் (1916), மாணிக்கவாசகர் (1919), திருஞான சம்மந்தர் சரித்திர நாடகம் (1929), திருநாவுக்கரசர் நாடகம் (1969) ஆகிய சைவ சமய நாடகங்களும், தொண்டரடிப் பொடியாழ்வார் (1929), மார்கழி நோன்பு அல்லது ஸ்ரீ ஆண்டாள் நோன்பு (1968) ஆகிய வைணவ நாடகங்களும் நடிக்கப் பெற்றுள்ளன.
நாட்டுப்புறத் தலைவர்கள், வீரம் நிறைந்த வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் கதை நாயகர்களாக ஆகும் போது அவர்களைப் பற்றி நாடகம் எழுதப்படுகிறது. அவர்களின் வீரம், விவேகம், கொடையுள்ளம் போன்றவை நாடகத்தில் விளக்கப்படுகின்றன.
இன்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மதுரைவீரன் கதையும், காத்தவராயன் கதையும் நாடகங்களாக நடித்துக் காட்டப்படுகின்றன. மேற்கு மாவட்டங்களில் பொன்னர் சங்கர் கதை நாடகமாக நடிக்கப்படுகிறது. இவ்வாறே வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் ஆகியோரின் கதைகள் கிழக்கு மாவட்டங்களில் நடித்துக் காட்டப்படுகின்றன.
தோட்டுக்காரியம்மன், பலிச்சியம்மன் போன்ற நாட்டுப்புறப் பெண் தெய்வங்களின் கதைகளும் நாடக வடிவம் பெற்றுள்ளன.
கிறித்தவ சமயக் கருத்துகளையும் இயேசு நாதர் வரலாற்றையும், விவிலியக் கருத்துகளையும் விளக்கும் நாடகங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் இவை, இசைப்பாட்டு நாடகங்களாக வெளிவந்தன. ஆதாம் ஏவாள் விலாசம், ஞான சவுந்தரி அம்மாள் விலாசம், எஸ்காத்தியர் நாடகம் எனப் பல நாடகங்கள் இசைப்பாடல் வடிவத்திலேயே நடிக்கப்பட்டன.
தொழில்முறை நாடக ஆசிரியர்களான சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் இராஜமாணிக்கம் போன்றோரும் கிறித்தவ நாடகங்களை நடத்தினர். இவர்கள் எழுதி நடித்த ஞான சவுந்தரி நாடகம், ஏசுநாதர் ஆகிய நாடகங்கள் அனைத்துச் சமயம் சார்ந்த மக்களிடமும் மிக்க செல்வாக்கைப் பெற்றன.
என். பொன்ரத்தினம் என்பவர் 1979-இல் இதோ நமக்கு ஒருவர் என்னும் நாடகம் எழுதினார். இயேசு நாதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம் எழுதப்பட்டது. கிறித்தவம் தழுவிய நாடகங்கள் நாட்டுப்புறங்களில் இப்போதும் நடிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டியம் நாடகம் போன்ற நடிப்பு சார்ந்த கலைகள் இசுலாம் மார்க்கத்துக்கு முரணானவை ஆகும். எனவே இக்கலைகளுக்கு இசுலாத்தில் மிகுந்த வரவேற்பில்லை. ஆனால், இசுலாமியத் தமிழறிஞர்கள் பல நாடகங்களை எழுதி உள்ளனர்.
வண்ணக் களஞ்சியப் புலவர் 1887 இல் அலிபாதுஷா நாடகம் எழுதினார். இந்த நாடகம் தமிழ்நாட்டுக் கூத்து மரபை ஒட்டி எழுதப்பட்டது. இறைப்பற்றும், அறவாழ்வும் இந்த நாடகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
கொண்ணூர் ப.வே.முகம்மது இப்ராகிம் சாயபு என்பவர் 1879 ஆம் ஆண்டு தையார் சுல்தான் நாடகம் எழுதினார். தமிழ் நொண்டி நாடகத்தை நினைவூட்டும் வகையிலும், கோவலன் கண்ணகி கதைப் போக்கிலும் இந்த நாடகம் அமைந்துள்ளது.
அப்பாஸ் நாடகம், லால் கௌஹர் நாடகம் என மேலும் பல நாடகங்கள் இசுலாமியத் தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்டன.