தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவிதை பற்றிய சிற்பியின் கொள்கை

 • 4.2 கவிதை பற்றிய சிற்பியின் கொள்கை

  நண்பர்களே, பாரதிக்குப் பின் மரபுக் கவிதை வடிவத்தில் பலர் கவிதை எழுதினர். புதுமையை விரும்பிய சிலர் யாப்பு இலக்கணத்தைப் பின்பற்றாமல் ‘புதுக்கவிதை’ எழுதினர். இந்த இரு பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு இடையில் கருத்துப் போர் நிகழ்ந்து வந்தது, இந்தச் செய்திகளை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

  • வானம்பாடி இயக்கமும் எழுத்து இயக்கமும்

  கவிதை பழையதோ புதியதோ, அது வாழ்க்கையின் பிரச்சினைகளை, மக்களின் சிக்கல்களை முன் நிறுத்த வேண்டும் என்பதே முக்கியம் என்ற ஒரு புதிய எழுச்சி பிறந்தது. இவ்வாறு சமுதாய நலன்களுக்காக எழுத முனைந்த சிலர் ஒன்று சேர்ந்தனர். ‘மானுடம் பாடும் வானம்பாடிகள்’ என்று தங்களை அழைத்துக் கொண்டனர். வானம்பாடி என்ற புதுக்கவிதைச் சிற்றிதழைத் (சிறு பத்திரிகை) தொடங்கினர். வானம்பாடி இயக்கம் தோன்றவும் வளரவும் காரணமாக இருந்தவர்களுள் சிற்பி முன் இடம் பெறுகிறார். ஏற்கனவே மரபு வழியில் எழுதி வந்தவர்களும் புதிதாக எழுதத் தொடங்கியவர்களும் இயக்கத்தில் இணைந்தனர். இந்த இதழில் புதுக்கவிதை வடிவத்தில் (அதாவது, மரபான யாப்பு இலக்கணத்தைத் துறந்து) எழுதினர்.

  ந.பிச்சமூர்த்தி வழியில் புதுக்கவிதை படைத்தவர்களின் இதழ் எழுத்து என்பது. இந்த எழுத்து இதழ்சார்ந்த புதுக்கவிதை இயக்கத்தினர் ‘வானம்பாடி’ இயக்கக் கவிதைகளைப் புதுக்கவிதை என்றே ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல மார்க்சியச் சார்புள்ள வானம்பாடிப் படைப்பாளிகள் ‘எழுத்து’ வழியிலான கவிதைகளை ஏற்பதும் இல்லை.

  தம் இறகு என்னும் நூலில் ‘என்னுரை’ என்ற முன்னுரையில் சிற்பி கீழ்க் குறிப்பிடுமாறு எழுதுகிறார் :

  “எழுத்து இதழும் வானம்பாடி இயக்கமும் வெவ்வேறு திசைகளில் கவிதையை இழுக்க முனைந்தாலும், அந்தத் தர்க்கத்துக்குள் நானும் என் கவிதையும் தத்தளித்து ஒருவாறு கரை ஏறுகிறோம்.

  பரிசோதனைகளைப் பாராட்டுகிற அதே வேளையில் மூச்சுப் பிடித்துக் கவிதைகளைப் படிக்க வேண்டிய கொடுமையை நான் நிராகரிக்கிறேன். (அதாவது, புரிந்துகொள்ளச் சிரமப்படுத்தும் கவிதைகளை ஒதுக்குவதாகக் கூறுகிறார்)

  ‘செத்த உடல்புதைத்துச் சித்திரங்கள் மேலெழுதும்’ ஊறுகாய்க் கவிதைப் பாணியும் (இக்காலத்துக்குப் பொருந்தாத பழமைகளை அலங்காரம் செய்து பாராட்டித் திரியும் போக்கு) எனக்கு உவப்பூட்டுவதாய் இல்லை. சொந்தக் கவிதைகளை எழுதாமல் அன்னிய வாசனைகளுக்கு மயங்கும் நவீனத்துவங்களும் எனக்குச் சம்மதமில்லை.

  நான் மரபின் பிள்ளை, புதுமையின் தோழன். என்களம் -என்மண். என் பாத்திரங்கள் - என் மனிதர்கள் என் பின்புலம் - தமிழ்இலக்கியம். மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர் மட்டுமே !”.

  இவ்வாறு, சிற்பிக்குத் தம் எழுத்துக்கான பாதை எது என்ற தெளிவான கோட்பாடு இருக்கிறது. இதைத்தான் இந்த ‘என்னுரை’ குழப்பம் இன்றி உணர்த்துகிறது.

  இவரது கவிதைகளின் வாடாத புதுமைக்கும், தெளிந்த ஓட்டத்துக்கும் இந்தத் தெளிவே காரணமாக நிற்கிறது.

  • கவிதை என்ன செய்ய வேண்டும்?

  ‘புன்னகை பூக்கும் பூனைகள்’ - நூலின் முன்னுரையாக, சிற்பி கவிதை பற்றிக் கவிதை எழுதுகிறார்-


  எழுத்து
  ஆன்மாவின் ரத்தம்

  கவிதைகள்
  காலத்தின் உதடுகள்

  தகிடுதத்தங்களுக்கு
  நகக்கண் ஊசி

  வடக்கும் தெற்கும்
  மேற்கும் கிழக்கும்
  பேதமாய்ப் பாரோம் !

  யாம் திசைகளை விழுங்கும்
  திகம்பர கவிகள்

  (ஆன்மா = உயிர்; தகிடுதத்தம் = பொய்புரட்டுகள்; திகம்பர கவிகள் = திசைகளையே ஆடையாக உடுத்த கவிகள் - இந்தப் பெயருடன் தெலுங்கில் தோன்றிய புரட்சிக் கவிதை இயக்கம்)

  கவிதை கவிஞனுடைய ஆன்மாவின் உயிர்ப்பாக (ரத்தமாக) இயங்க வேண்டும்; காலத்தின் மாற்றங்களைப் பிரதிபலிக்க வேண்டும்; காலத்தின் தேவைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டும்; பொய் புரட்டுகளின் நகக்கண்களில் ஊசியாய் ஏறித் தண்டிக்க வேண்டும். இனம், மொழி, தேச எல்லைகள் தாண்டிப் பொது மானிடத்தை மேம்படுத்த வேண்டும். இவையே கவிதையின் பணி என்கிறார் சிற்பி.

  மேலே குறிப்பிட்ட வழியில் சிற்பியின் இலக்கியப் படைப்புக் கொள்கை அமைந்துள்ளது. இதனால் இவரது கவிதைகள் தம் மண்ணின் மணத்தைக் கொண்டு உள்ளன. தம் மக்களின் பண்பாட்டையும், மரபு சார்ந்த கலைச் செழிப்பையும் முழுமையாக ஏந்திப் பிறக்கின்றன. அதே வேளையில் உலகின் எல்லாத் திசைகளில் இருந்தும் புறப்பட்டு வரும் புதுமைகளை ஏற்கின்றன. உலகப் புதுமையோடு, தமிழ்ப் புலமை கைகோத்து நடக்கிறது. இதுவே சிற்பியின் படைப்புவழி.

  வயிற்றுப் பிழைப்புக்காகத் தெருவில் நடக்கும் ‘சின்ன சர்க்கஸில்’ - தன் மீது ஏறி நிற்கும் தன் தந்தையின் சுமையைத் தாங்கிக் கிடக்கிறான் ஒரு சின்னஞ் சிறுவன். இவனும் சிற்பியின் கவிதையில் நாயகன் - பாடுபொருள் - ஆகிறான். கணினி யுகத்தின் கண்டு பிடிப்பான, கண்ணீர் வடிக்கத் தெரியாத, இயந்திர மனிதனும் (ரோபோ) கவிதைப் பொருள் ஆகிறான்.

  சிற்பி மண்ணில் நின்று நிலவைப் பாடும் பழங்கவிஞராகவும் இருக்கிறார்; அப்பாட்டிலும் புதுமை சிரிக்கிறது. நிலவில் ஏறி நின்று மண்ணைப் பார்க்கும் புதுக்கவிஞராகவும் இருக்கிறார்; அந்தப் பார்வையில் என்றும் மாறாத மனிதப் பண்பின் மரபுப் பழமை வேரோடி இருக்கிறது. அதில் தமிழனின் வழிவழி வந்த பண்பாட்டு மரபு தனித்தன்மையோடு மலர்ந்து மணக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 18:12:31(இந்திய நேரம்)