தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமூகமும் உலகமும்

  • 4.4 சமூகமும் உலகமும்

    நண்பர்களே, இதுவரை படித்த பாடப் பகுதியில் கவிஞர் சிற்பியைப் பற்றியும் அவரது கவிதை நூல்கள் பற்றியும் தகவல் அறிந்தோம். அவரது கவிதைப் படைப்பின் நோக்கம் பற்றியும் தெரிந்து கொண்டோம். அழகு, இயற்கை இவற்றில் சிற்பியின் தனித்தன்மையுடைய பார்வையையும், இவற்றைக் கவிதை ஆக்கும் கலைத்திறனையும் உணர்ந்தோம். இவற்றை உள்ளடக்கமாய்க் கொண்ட கவிதைகளில் உயிர்நிலையாய் இருக்கும் மனித நேயத்தைப் புரிந்து கொண்டோம்.

    இனிவரும் பகுதியில் சமூக நலன், உலக நலன் இவற்றில் சிற்பியின் அக்கறை பற்றி அறிய இருக்கிறோம். எளிமையும் இனிமையும் கொண்ட இவரது இயல்புகள் சொல்லில் வெளிப்படுவதையும் காண இருக்கிறோம்.

    தனி மனிதனோ, பல மனிதர் சேர்ந்த சமூகமோ செல்லும் பாதை தவறாகும் போது குறிப்பாகச் சுட்டி உணர்த்துவார்கள் கவிஞர்கள். புரியாத கூட்டத்தை, சில நேரங்களில் பெருங்குரல் எடுத்துக் கூவியும் நேர்வழிக்கு அழைப்பார்கள். அப்போது அந்தக் கவிதை ‘பிரச்சாரம்’ போல் தோன்றும். ‘தூய இலக்கியம்’ பேசும் கவிதையாளர்கள் இதைக் “கவிதையல்ல, வெற்று முழக்கம்” என்று மட்டம் தட்டுவார்கள். பொறுப்புள்ள நல்ல கவிஞன் இதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. தன் படைப்பில் கவிதைத் தரம் குறைந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் வாழும் மனிதனின் தரம் உயர வேண்டும் என்பதே அவனது நோக்கமாய் இருக்கும். சிற்பி சமூக நலனையே பெரிதாகக் கருதும் சிறந்த கவிஞர்.


    நண்பர்களே, இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தை ஒரு தீராத நோயாகப் பிடித்து ஆட்டும் ஒரு கொடுமை பற்றி அறிந்திருப்பீர்கள். பிறப்பால் மனிதனுக்கு உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி என்ற கொடிய நோய் அது. தாழ்வு படுத்தப்பட்ட சாதியிலே பிறந்தவன், எந்த வகையிலும் உயர்ந்து விடாமல் அவனை ஒதுக்கித் தள்ளிப் ‘பிறவி அடிமையாய்’ ஆக்கிவிடும் நோய் அது. தம்மை உயர்ந்தவர்கள் என்று ஆக்கிக் கொண்டவர்களால் ‘தொடுவதற்குக் கூடத் தகுதி அற்றவன்’ என்று அவன் ஒதுக்கப்பட்டு விடுகிறான். ஊருக்கு வெளியே அவன் தன் சாதி மக்களுடன் சேர்ந்துதான் வாழவேண்டும். அந்த இடம் ‘சேரி’ எனப்படும்.

    இந்தத் தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் ஒழிப்பதற்கு மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டனர். தீண்டாமை ஒழிப்புக்கு இங்குக் கடுமையான சட்டங்களும் உள்ளன. ஆனாலும், மக்கள் முழுமையாகத் திருந்தவில்லை.

    சிற்பியின் சர்ப்பயாகம் நூலில் உள்ள சிகரங்கள் பொடியாகும் என்னும் கவிதை, சாதிக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்து எழும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதையைச் சொல்கிறது.

    சென்னிமலைக் கவுண்டரின் நிலத்தில் விவசாயக் கூலிகளாய் உழைக்கும் சேரி மக்கள், சக்கிலியர் என்ற தீண்டப்படாத சாதியினர். இவர்களில் உள்ள அழகிய பெண்களின் ‘மானத்துக்கு மயான பூமியாய் இருப்பவர்’ இந்தக் கவுண்டர்; காமவெறி மட்டும் ‘தீண்டாமை’ பார்ப்பதில்லை.

    அருக்காணி என்னும் சேரிப்பெண் வாய்க்காலில் குளிக்கும்போது கவுண்டரின் காமப் பார்வையில் பட்டுவிடுகிறாள்.அவள் வயல் வரப்பில் தூங்கியபோது அவளது பெண்மையைக் களங்கப்படுத்தி விடுகிறார் பண்ணை முதலாளி.

    இம்முறை மக்கள் அமைதியாய் இருக்கவில்லை. கவுண்டரின் மாளிகைக்குத் திரண்டு போகிறார்கள். திருமணம் பேச வந்ததாய்ச் சொல்கிறார்கள். அவர்,

    ஏதுடா பேச்சு ஒருமாதிரியா இருக்கு
    உதட்டுக்கு மீறிய பல்லு மாதிரி.....

    ‘அடங்கிப் போக வேண்டிய அடிமைச்சாதி’ என்று சீறுகிறார்.

    எங்க அருக்காணிக்கு நேத்து
    நீங்கதாம் புருஷன் ஆயிட்டீங்க.....,
    நாமதான் உறவாயிட்டோம்
    அதனால ஒங்க மவ காமாட்சியை
    எங்க சின்னானுக்குப் பொண்ணு கேட்க...

    மாரி பேசி முடிக்கும் முன் பண்ணையாரின் அடியாட்கள் அவனை அடித்து வீழ்த்தினர். சேரியை வளைத்துத் தாக்கினர். குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். இரவெல்லாம் நெருப்பு எரிந்தது. இதைக் கவிஞர் -

    இரவு..... தன்மேனி முழுதும்
    கதகதப்பான
    மருதாணி இட்டுக் கொண்டது

    (மவ = மகள்; மருதாணி = பெண்களுக்கு, குறிப்பாக மணப் பெண்களுக்குக் கைகால்களில் சிவப்பு நிறம் ஊட்ட அரைத்துப் பூசும் தாவர இலை)

    என்று சொல்கிறார்.

    ஊர்முழுக்கக் கலவரம். காலையில் அருக்காணி கொல்லப்பட்டு வாய்க்காலில் பிணமாகக் கிடக்கிறாள்.

    குத்துவிளக்குக் குழந்தைகள்
    எலும்பும் சாம்பலாய் எரிந்து கொண்டிருந்தன
    வீரன், மாரி, ராமனின் பிணங்கள்
    வேங்கையின் அடிமரங்களாய்ச் சாய்ந்து கிடந்தன

    ஒடுக்கப்பட்டவர்களும் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். இதைக் கவிஞன்

    ஊருக்கு நடுவே வளோளர் வளவில்
    இழவுப் பிலாக்கணங்கள் எழுந்துகொண்டு இருந்தன

    (வளவு = குடியிருப்பு; இழவுப் பிலாக்கணம் = சாவு ஒப்பாரி அழுகை)

    என்று பாடுகிறார்.

    பணத்தையும், அடியாட்கள் படையையும் வைத்திருக்கும் உயர் சாதியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சேரி மக்கள் சின்னான் தலைமையில் மலை அடிவாரத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார்கள். இது தோல்வி அல்ல. அடுத்துப் பாய்வதற்காக வேங்கை பதுங்குமே, அந்தப் பதுங்கல். இதை வீரம் மிக்க சொற்களால் குறிப்பாகப் புலப்படுத்துகிறார் சிற்பி.

    அந்தக் காடு
    தேக்குகள் தோள் உயர்த்தும்
    வாகைகள் வாள் நிமிர்த்தும்
    காடு !

    அங்கு நிழல்கள்கூட நிஜங்கள் ஆகும்
    புயல்கள் உருவாகும்
    குன்றுகள் அந்தப் புயலில் தமது
    சிகரங்கள் பொடியாகும் !

    (தேக்கு = உறுதிக்கு உவமையாகும் மரம்; வாகை = வெற்றிப்பூ மலரும் மரம்; சிகரங்கள் = மலை உச்சிகள்)

    சமூக நீதிக்காகப் பேசும்போது சிற்பி எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்கிறார். ஒடுக்கப்படும் மக்களே தம் உரிமைக்குக் குரல் எழுப்பி எழுதும் இலக்கியம் தலித் இலக்கியம். இது இன்று தமிழில் வளர்ந்து வருகிறது. இதைவிட ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்களே ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுப்பது உயர்ந்தது அல்லவா? இக்கவிதையை வெளியிட்டபோது சிற்பி தம் உறவினர் பலரின் சினத்துக்கும் வெறுப்புக்கும் ஆளானார்.

    பொது உடமைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட இவர் இந்த எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சுவதில்லை. பெண்ணுரிமை, சாதி விடுதலை இவையே இவரது கவிதைகளின் உயிர்மூச்சாய் இருக்கின்றன.

    கேரளத்தில் சாதி ஒடுக்குமுறையை ஒழித்த ஆன்மிகவாதி நாராயண குரு. கடவுள் மறுப்பாளரான சிற்பி, இந்த நாராயண குருவைப் போற்றி வாழ்த்திக் கேரளத்துச் சூரியன் என்ற (‘இறகு’- தொகுப்பு) கவிதை படைத்துள்ளார். நாராயண குருவைப் பற்றி இதைப் போன்ற ஒரு சிறந்த கவிதையை ஒரு மலையாளக் கவிஞர் கூடப் படைத்ததில்லை.

    • பெண்மை வதங்குதல்

    வறுமைச் சுரண்டலால் உடலை விற்கும் நிலைக்குத் தள்ளப்படும் பெண் விலைமகள் ஆகிறாள். இந்தப் பெண்ணைக் கொண்டே, இழிந்த இந்தச் சமூகத்தை விமரிசனம் செய்கிறார் சிற்பி. இவரது நெடுங்கவிதைகள் மிகுதியும் இந்தக் கருவையே உள்ளடக்கமாய் உடையவை. தமிழக அரசின் பரிசுபெற்ற மௌன மயக்கங்கள் காவியமும் இந்த வகையில் அமைந்ததுதான்.

    4.4.2 புதுஉலகு படைத்தல்

    நாய்க்குடை (நூல்: சர்ப்பயாகம்) என்னும் கவிதை உலக நலன் பாடுகிறது. அணுகுண்டு வெடிப்பின் நச்சுப் புகை விரிவை நாய்க்குடைக் காளான் விரிவதாக உருவகம் செய்து பாடுகிறது. பேராசை பிடித்த, அதிகார வெறிகொண்ட வல்லரசுகளை ‘அணுக்குண்டர்களே’ என்று கேலி செய்கிறது. அந்த வெறியர்களைப் பார்த்து ஆணை இடுகிறது :

    சூனியக் காரரே விஞ்ஞான தீபத்தில்
    மாணிக்கத் தாலியை எரிக்கும் மூடரே !
    .....
    எங்கள் பாப்பாக்கள் நீலமாய்ப் பிறக்கும்முன்
    புல் இதழில் விஷ முத்துக்கள் வியர்க்கும்முன்
    செல்வப் பசு மடியில் மரணம் சுரக்கும்முன்
    .......
    விரிவது நிற்கட்டும்
    விரிவது நிற்கட்டும்
    ராட்சச
    நாய்க்குடைக்
    காளான்.......

    உலக அழிவைக் காட்டி அச்சம் ஊட்டும் அணு ஆயுதத்தைத் தடை செய்ய அண்மையில்தான் உலக நாடுகளின் ஒப்பந்தம் வந்தது. இதற்கு இருபது ஆண்டுகள் முந்தியே இதைப்பற்றி உலக நலக் கவிதை பாடியிருக்கிறார் சிற்பி.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 18:14:27(இந்திய நேரம்)