தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அப்துல் ரகுமான்

  • 5.1 அப்துல் ரகுமான்


    தமிழ்நாட்டில், மதுரையில் 9-11-1937-இல் பிறந்தார் அக்காலத்தில் தமிழ், உருது ஆகிய இருமொழிகளிலும் சிறந்த எழுத்தாளராக விளங்கிய ‘மஹதி’ சையத் அஹ்மத் என்பார் இவருடைய தந்தையார் ஆவார். இதனால் இளவயதில் இருந்தே மொழிப் புலமையும் கவிதை எழுதும் ஆற்றலும் அப்துல் ரகுமானிடம் வளரத் தொடங்கின.

    • கல்வியும் பணியும்

    தமிழ்க் கல்விக்குச் சிறந்த கல்லூரி என்று புகழ் பெற்றிருந்த மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுக்கவிதையில் குறியீடு என்னும் பொருள்பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடியில் இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகச் சென்னையில் இருந்து தம் படைப்புப் பணியைத் தீவிரத்துடன் செய்து வருகிறார்.


    • கவிதை ஆர்வம்

    அப்துல் ரகுமான் பள்ளிப் பருவத்திலேயே கவிதை புனைந்தவர். கல்லூரி நாட்களிலேயே புதுமையாக எழுதிப் புகழ் பெற்றவர். கல்லூரி இலக்கிய மன்றங்களும், வானொலி நிலையங்களும், அண்ணாவின் அரசியல் இயக்கமும் நிகழ்த்திய பல கவியரங்கங்களில் பங்கேற்றார். புதுமையாய்ப் பாடும் திறத்தால் தமிழகம் முழுதும் புகழ் பரவப் பெற்றார்.

    • கவிராத்திரி

    பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் புதுக்கவிதையை ஆயிரக் கணக்கானோர் கூடிச் சுவைக்க வழி செய்தார். கவிராத்திரி என்ற பெயரில் கவியரங்கத்தைப் புதுமைப் படுத்தினார். தம் மாணவர்களைப் புதுக்கவிதை எழுதவைத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.

    • அன்னம் பதிப்பகம்

    தம் வகுப்புத் தோழரும் கவிஞருமான மீராவுடனும் மற்ற நண்பர்களுடனும் சேர்ந்து, புதிய படைப்பாளிகளின் இலக்கிய நூல்களை வெளியிடுவதற்காகவே அன்னம் என்னும் பதிப்பகத்தை உருவாக்கினார்.

    • தமிழ் உணர்வு

    தமிழ்மொழியின் மீது பற்றும், சமுதாய நலனில் அக்கறையும், நல்லொழுக்கமும் நிறைந்தவர் அப்துல் ரகுமான்.

    தம் அறுபதாவது வயது நிறைவைக் கொண்டாட மாணவர்களும் நண்பர்களும் திரட்டித் தந்த நிதியைக் கொண்டு தம் பெயரில் ஒரு கவிதை அறக்கட்டளை நிறுவினார். ஆண்டு தோறும் தமிழில் சிறந்த கவிதை நூல் படைக்கும் கவிஞருக்கு ரூபாய் முப்பதாயிரம் பரிசளித்துப் பாராட்டி வருகிறார்.

    • சிறப்பும் விருதும்

    கவிக்கோ என்னும் அடைமொழியால் தமிழகத்திலும், தமிழறிந்த அயலகங்களிலும் அறியப்படும் அப்துல் ரகுமான், 1999-ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கவிதைக்குரிய சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர். 1989-இல் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கிய தமிழன்னை விருது, தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்றார். 1997-ஆம் ஆண்டு கலைஞர் விருது பெற்றார். இவையல்லாத பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 18:18:11(இந்திய நேரம்)