தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.3 படைப்புக்கலைத் திறன்

  • 5.3 படைப்புக்கலைத் திறன்


    சிறந்த கவிஞன் தன் உள்ளத்தில் உணர்ந்ததை, தன் கவிதையின் மூலம் படிப்பவரின் உள்ளத்திற்கு இடமாற்றம் செய்கின்றான். ‘சிறிதளவு கூட அது சிந்திவிடாமல், சிதறிவிடாமல் சென்று சேர வேண்டுமே’ என்று கவனம் எடுத்துக் கொள்கிறான். அதற்காகப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கிறான். உவமை, உருவகம் போன்ற கலைத் திறன் உத்திகளைக் கையாளுகிறான்.

    அப்துல் ரகுமான் கையாளும் தனித்தன்மை கொண்ட கலைத்திறன்கள் பற்றி இனி அறியலாம்.

    5.3.1 சொல்லாட்சி

    சொற்களில் கூர்மை, தெளிவு, அழகு, உணர்வு ஆகியன பொருந்தத் தேர்தெடுத்துப் பயன்படுத்துகிறார். இது இவரது தனித்தன்மை. சில இடங்களில் புதிய சொற்களையே உருவாக்குகிறார்.

    கவிதைகளுக்கும், நூல்களுக்கும் தலைப்பு இடுவதிலேயே சொல்லாட்சித் திறன் காணப்படுகிறது. பால்வீதி என்பது பல ஆயிரம் நட்சத்திரங்களால் ஆன அண்ட வெளி வீதி. இது ஒரு வெளிச்சப் பாதையைப்போல் விளங்குகிறது. இதனால் வானநூல் வல்லுநர் இதற்கு இப்பெயர் இட்டனர். இப்பெயரையே கவிதைத் தொகுதிக்கு இட்டிருக்கிறார். ‘ஒளிவீசும் எழுத்துகளால் ஆன சொற்களின் தொகுதி; இது ஒளிபொருந்திய வாழ்க்கைக்குப் பாதையாக அமையும்’ என்ற பொருள் தரும் ஆழமான சொல்லாட்சி இது. இவ்வாறு ஒவ்வொரு நூலின் தலைப்பும் சிறந்த சொல்லாட்சி பொருந்த அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையின் தலைப்பையும் கூர்ந்து நோக்கினால் அங்கும் இத்திறன் விளங்குகிறது.

    தாய் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியேற்றுகிறாள். இது பிரசவம் எனப்படுகிறது. மனிதன் மரணமடைந்து புதைக்கப்படுவது பூமித் தாயின் கருவுக்குள் அவளது குழந்தை மறுபடி நுழைவதாகத் தோன்றுகிறது கவிஞருக்கு. ஆகவே இதனைப் பிரசவத்துக்கு எதிரான அப்பிரசவம் என்ற புதுச்சொல் படைத்து இந்தக் கற்பனையைப் புரியவைக்கிறார். வெட்டியான் அப்பிரசவத் தாதி ஆகிறான். (அப்பிரசவம் = எதிர்ப்பிரசவம்; தாதி = பிரசவம் பார்பவர்)

    • முரண்களை ஆளுதல்

    வாழ்க்கை எதிர் - எதிர்த் தன்மைகள் கொண்ட முரண்களின் இணைப்பினால்தான் ஆக்கப் பட்டிருக்கிறது. ஆண் - பெண்; இருள் - ஒளி; இரவு - பகல்; நன்மை - தீமை; இன்பம் - துன்பம்; நேர்மின் ஆற்றல் - எதிர்மின் ஆற்றல்... இப்படி, முரண்கள் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.

    அப்துல் ரகுமானின் கவிதைகளில் மேலோங்கி நிற்பது முரண்களின் ஆட்சிதான்.

    சுதந்திரம் பெற்ற நாளை - ‘பிள்ளைகள் கூடித் தாயைப் பெற்றநாள்’ என்கிறார்.

    புன்னகை - ‘பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர்’ என்று முரண் நயம் தோன்றப் பாடுகிறார்.

    பித்தன் நூல் முழுதுமே முரண்பட்ட நிலைகளை அழகிய கவிதையாய் உரைத்தது தான்.

    5.3.2 உவமையும் உருவகமும்

    சொற்கள் கவிதை ஆவதே உவமையால்தான் என்று கூறுவார்கள்.சிறந்த புலமைக்குச் சான்று ஆவதே உவமை கூறும் திறன்தான் என்று உலகம் எங்கும் நம்பப்படுகிறது. ‘கோடிச் சூரியர்களைப் பிழிந்து நட்சத்திரங்கள் செய்வதாகக்’ கூறும் அப்துல் ரகுமான் சுருக்கமாகவும் செறிவாகவும் கவிதை படைக்கிறார். அதனால் உவமையின் செறிவான வடிவமான உருவகத்தைத்தான் மிகமிக அதிகம் கையாளுகிறார்.

    • உவமை

    உவமையை மிகமிக அரிதாகத்தான், குறைவாகத்தான் பயன்படுத்துகிறார். அப்போதும் வேறு கோணத்தில், புதுமையாக்கிக் கையாளுகிறார்.

    சான்றாக, அறிஞர் அண்ணா பற்றி அவர் பாடிய கவிதை நூல் விதைபோல் விழுந்தவன், பெயரே உவமையால் ஆனது.

    அழுகின்ற போதும்
    மேகம்போல் அழுதவன்நீ
    விழுகின்ற போதும்
    விதைபோல் விழுந்தவன்நீ (ப.15)

    என்ற வரிகளில் உவமை காணப்படுகிறது. ‘மேகம்போல் சரம்சரமாக அழுதவர்’ என்று பொருள் இல்லை. மேகம் அழுதால் பூமியில் (அந்த நீரைப் பெறுகிற) எல்லாம் சிரிக்கும். அதைப்போல் அண்ணா தமிழ்மக்கள் எல்லாரும் சிரிப்பதற்காக, மகிழ்வதற்காகத் தான் அழுதவர் என்று புதுமைப் பொருள் தரும் உவமை இது. அவரது தியாகத்தைக் குறிப்பது. இதில் இன்னொரு நயமும் உள்ளது : தன்னிடமிருந்து பிரிந்து அண்ணா புதிய அரசியல் கட்சி தொடங்கிய போது தந்தை பெரியார், ‘கண்ணீர்த் துளிகள்’ என்று அக்கட்சியை அழைத்தார். இதையும் உவமை குறிப்பாக உணர்த்துகிறது.

    இதைப்போல், ‘விதைபோல் விழுந்தவன்’ என்பதும் அதன் விழுகின்ற செயலைக் குறிக்கவில்லை. மற்ற பொருட்கள் விழுந்தால் அழியும். விதையோ முளைத்து எழும். மேலும் பல விதைகளைத் தரும் மரமாகும். அண்ணா, தோற்றாலும் வெல்பவர், பணிந்தாலும் உயர்பவர், இறந்தாலும் வாழ்பவர் என்று பொருள் விரிக்கும் உவமை இது.

    • உருவகம்

    அப்துல் ரகுமானின் கவிதைகளில் மிகுதியாக நிறைந்திருப்பவை உருவகங்கள்தாம். பேனாவை ஆறாவது விரலாக உருவகம் செய்துள்ள கவிதையை முன்பே பார்த்திருக்கிறோம்.

    முதுமைப் பருவம் பற்றிய இவரது உருவகங்களைப் பாருங்கள் :

    நிமிஷக் கறையான்
    அரித்த ஏடு
    இறந்த காலத்தையே பாடும்
    கீறல் விழுந்த இசைத்தட்டு
    ஞாபகங்களின்
    குப்பைக் கூடை
    வியாதிகளின்
    மேய்ச்சல் நிலம்..............
    (முதுமை. நேயர் விருப்பம், ப. 52)

    5.3.3 படிமம், குறியீடு, தொன்மம்

    படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றையும் தம் கவிதைகளில் மிகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

    • படிமம், குறியீடு

    சொற்களால் நெஞ்சத் திரையில் வரையும் ஓவியம்தான் படிமம் என்பது. வெறும் வருணனை கூடப் படிமம்தான். ஆனாலும் உவமை, உருவகம், தொன்மம் அடங்கிய சொற்களால் உருவாக்கப்படும் சொல் ஓவியம் சிறந்த படிமமாகும். உணர்வை மிகுதியாகத் தூண்டும்; பலபொருள் தரும் சுவை ஊற்றாகும்; இயக்கம் உள்ள ஓவியமாக உயிருடன் விளங்கும்.

    அப்துல் ரகுமானின் கவிதைகளில் இத்தகைய படிமங்களையே மிகுதியாகக் காண்கிறோம். பால்வீதி நூலில் உள்ள சாவி இருக்கும் வரை என்ற கவிதையைப் பார்க்கலாம்.

    ஞாபக முட்கள்
    காயங்களைச் சுட்டி
    வட்டமிடும்
    என் ஏகாந்தத்தின்
    இதயத் துடிப்பாக,
    பிரிந்து சென்ற உன்
    காலடி ஓசை

    (ஏகாந்தம் = தனிமை)

    இக்கவிதை பிரிந்து சென்ற காதலியின் காலடி ஓசையைப் பற்றியது. பிரிந்து சென்றபின் நினைவெல்லாம் அந்தக் காலடி ஓசைதான். தனிமையின் இதயத் துடிப்பாகிறது அது. ஒரு கடிகாரத்தின் டிக், டிக் ஓசையாகிறது. மனமே ஒரு கடிகாரமாகி விடுகிறது. குத்தி, உறுத்தி, துளைத்துக் கொண்டே இருக்கும் ஞாபகங்கள் (துயர நினைவுகள்) அதன் முட்கள். நெஞ்சின் புண்கள்தாம் நேரம் காட்டும் எண்கள். நினைவு முட்கள் காயங்களின் மேல் வட்டமிட்டு வலியை மேலும் மிகுதிப் படுத்துகின்றன. இந்த வலி, துன்பம் எதுவரை? கடிகாரம் ஓடும் வரை ! கடிகாரம் எதுவரை ஓடும்? சாவி இருக்கும் வரை !.

    காதலின் உறுதியை, பிரிவின் வலிமையைக் கண்முன்னால் வரைந்து காட்டும் அருமையான படிமம் இது.

    ‘சாவி இருக்கும் வரை’ என்ற தலைப்பால், ‘இந்தக் காதலின் வேதனை, ஆவி இருக்கும் வரை இருக்கும்’ என்ற பொருளைத் தருகிறது கவிதை.

    ‘இங்கே நெஞ்சம் ஒரு கடிகாரம்’ எனப் படிமமாக மட்டும் நின்று விடாமல், ‘கடிகாரம்’ ஆயுள் காலம் என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகிவிடுகிறது. சிறந்த குறியீட்டுப் படிமத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு,

    இதில் கடிகாரம் என்ற சொல்லையே பயன்படுத்தாமல் ஒரு நுண்மையான கடிகார ஓவியத்தை நம் மனத்தில் வரைகிற கவிஞர் கைதேர்ந்த சொல் ஓவியராக விளங்குகிறார்.

    • தொன்மம்

    தொன்மம் பற்றி முந்திய பாடங்களில் அறிந்திருக்கிறோம். புராணம், பழங்கதைகள் இவற்றில் வரும் பாத்திரங்களோ, நிகழ்வுகளோ கவிதையில் ஓரிரு வார்த்தைகளில் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு சுட்டினால், பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை அது உணர்வோடு விளக்கிவிடும். இதனால் உலகெங்கும் சிறந்த கவிஞர்கள் இந்தக் கலைத்திறனை விரும்பிக் கையாளுகின்றனர். இது தொன்மம் எனப்படுகிறது.

    அப்துல் ரகுமானின் கவிதைகளில் தொன்மம் மிகுதியாக இடம் பெறுகிறது.

    ‘ஆறாவது விரல்’, ‘சிலுவை’ - இவை பைபிள் தொன்மங்கள். முன்னரே இக்கவிதை உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

    இராமாயணத்தின் பல பாத்திரங்கள், கோவலன், கண்ணகி, நெற்றிக்கண், வாமனன், பாற்கடல், விசுவரூபம், துச்சாதனன், கவுரவர் முதலிய பிற தொன்மங்கள் இவரது கவிதைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கு இவருக்கு மிகவும் பயன்பட்டுள்ளன.

    இந்திய நாட்டுத் தேர்தல்கள், மக்களாட்சி பற்றிய கவிதை ஐந்தாண்டுக்கு ஒருமுறை. இதில் நளன் கதைத் தொன்மம் இடம் பெறுகிறது.

    சுயம்வரம் என்பதை அறிவீர்களா? அரச குமாரிகள் தமக்குப் பிடித்த மணாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஏற்பாடு அது. (சுயம் = தானாக; வரம் = வரிப்பது, தேர்ந்தெடுப்பது). அப்துல் ரகுமான் இன்றைய இந்தியத் தேர்தல் - மக்களாட்சி முறையை ஒரு புது வகைச் சுயம்வரமாகப் பார்க்கிறார். இந்தச் சுயம்வரத்தில் ஏமாற்றப் படுகிற மங்கையாக இந்திய மக்களைக் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். இந்த நாட்டில் பேராசை பிடித்த, சுயநலக்காரப் பதவி வெறியர்களே அரசியல் அரங்கில் மேல்நிலை பெறுகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றுதான் நோக்கம். எல்லாரும் நல்லவர் போல வேடம் போடுகிறார்கள்.

    நளன் கதையில், நளனை மணக்க விரும்பினாள் தமயந்தி. சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட்டு மணந்து கொள்ள மண்டபத்துள் நுழைந்தாள். இவள் நளனை விரும்புவதை அறிந்து கொண்ட தேவர்கள் நளனைப் போலவே தங்கள் உருவை மாற்றிக் கொண்டு (போலி வேடமிட்டு) இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். தமயந்தி தன் அறிவுக் கூர்மையால் உண்மையான நளனைக் கண்டறிந்து மாலையிட்டு மணந்து கொண்டாள். இவ்வாறு சுயம்வர நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப்படுகிறது.

    இன்றைய சுயம்வரத்தில் உண்மை நளன் எவருமே இல்லை. எல்லாருமே போலி நளன்கள். கையில் வாக்குச்சீட்டு என்ற மாலையோடு தவித்து நிற்கும் குருட்டுத் தமயந்திதான் வாக்காளர்கள். அதாவது தெளிந்த அறிவு இல்லாத ஏமாளிகள். எப்படி நல்ல ஆட்சி அமையும்? ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் சுயம்வரக் கவிதையை இப்போது படியுங்கள்:

    புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
    போலி நளன்களின் கூட்டம்
    கையில் மாலையுடன்
    குருட்டுத் தமயந்தி (பால்வீதி, ப. 70)

    பக்கம் பக்கமாய் விவரிக்க வேண்டிய செய்தியை இரக்கம், எள்ளல் உணர்வுகளுடன் நான்கு வரிகளில் சொல்லி விடுகிறார்.

    நண்பர்களே, கவிதைகளை உருவாக்கும் கலையில் தேர்ந்த கலைஞரான அப்துல் ரகுமானின் படைப்பு ஆக்கக் கலைத்திறன்களைச் சில சான்றுகள் வழி அறிந்து கொண்டீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2018 14:42:11(இந்திய நேரம்)